Published : 05 Jun 2023 08:43 AM
Last Updated : 05 Jun 2023 08:43 AM
அகரம்தென்: நெடுஞ்சாலை மற்றும் மின்சார துறைகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தாம்பரம் அடுத்த அகரம்தென் சாலை விரிவாக்கப் பணி முன்னேற்றமின்றி இருப்பதாக அப்பகுதியினர், வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தை ஒட்டியுள்ள, சென்னை புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நகர்ப்புறமயமாதலின் விளைவாக குடி யிருப்புகள் அதிகரிப்பு, மக்கள்தொகை உயர்வு ஆகியவை காரணமாக இப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று அகரம்தென் சாலை. அகரம் தென், மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, மப்பேடு பகுதிகளில் அதிக அளவிலான போக்குவரத்து இந்த சாலை வழியாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில், வாகன நெரிசலை கருத்தில் கொண்டு, பதுவஞ்சேரி முதல் அகரம்தென் கிராமம் வரை ரூ.7 கோடி மதிப்பீட்டில் அகரம்தென் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
முதல்கட்டமாக, சாலையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால், அவற்றை அகற்றும் பணிகூட தொடங்கப்படவில்லை. இதனால், சாலை விரிவாக்க பணி தொடக்க நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது. இப்பணிகளை விரைவில் தொடங்கி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இரா.இளங்கோ கூறியதாவது: அகரம்தென் சாலை விரிவாக்கப் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பாதியோடு நிற்கிறது. சில இடங்களில் சாலையின் மையப் பகுதியில் தடுப்பு (சென்டர் மீடியன்) அமைக்கும் பணியும் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.
பல இடங்களில் சாலைசமமாக இல்லாமல் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால்வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நெடுஞ்சாலைத் துறையும், மின்சார துறையும் பரஸ்பரம் மாறி, மாறி குறை கூறுவதை தவிர்த்து, இரு துறைகளும் ஒருங்கிணைந்து, விரைவில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது மட்டுமின்றி, நெடுஞ்சாலைத் துறையினர், சாலையை அகலப்படுத்திய பிறகு, கேபிள்களை புதைக்க மின் வாரியமும், குடிநீர் குழாய்களை சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகளும் பள்ளம் தோண்டுகின்றன. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அமைக்கும் சாலைகள், விரைவில் குண்டும் குழியுமாக மாறி விடுகிறது.
எனவே, மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்போதே, மின்கேபிள், குடிநீர் குழாய்கள்; கழிவுநீர் குழாய், தொலைபேசி கேபிள்கள் செல்ல நவீன முறையில் சாலையோரங்களில் பிரத்யேக வசதி செய்தால் மட்டுமே, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் என்ன சொல்றாங்க..
நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர்: மின்கம்பங்களை மாற்றி அமைக்க மேற்பார்வை செய்ய வேண்டி மின்வாரியத்துக்கு ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி பொதுத் தேர்வுகள், கோடைகாலம் என்பதால் முழுமையாக மின் இணைப்பை துண்டித்து பணியை மேற்கொள்ள முடியவில்லை. தவிர, இது ஒரே நாளில் முடியும் பணி அல்ல. எனினும், பெரிய அளவில் பாதிப்பு நேராமல், விரைவில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்வாரிய அதிகாரிகள்: மின்கம்பம் மாற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர்தான் மேற்கொள்ள வேண்டும் என்று விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரே நாளில் பணியை முடிக்கும் வகையில் அதிக ஆட்களை ஏற்பாடு செய்து பணிகளை மேற்கொள்ளாமல், எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்.
அடிக்கடி மின்தடை ஏற்படுத்தி இப்பணியை மேற்கொண்டால், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதால், மின் இணைப்பை துண்டிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அவர்கள் மின்கம்பம் மாற்றும் பணியை மேற்கொள்ளும்போது, எங்கள் மேற்பார்வையில் மின் இணைப்பை துண்டித்து அவர்கள் பணி செய்ய அனுமதி அளிப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT