Published : 04 Jun 2023 01:31 PM
Last Updated : 04 Jun 2023 01:31 PM

காவல்துறை  சார் ஆய்வாளர் பணிக்கான  பதவி உயர்வை காவலர்களுக்கு மறுக்கக் கூடாது: ராமதாஸ் 

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வை காவலர்களுக்கு மறுக்கக் கூடாது; துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ''தமிழ்நாட்டு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அப்பணிக்கான இணையவழி விண்ணப்பங்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் பெறப்படுகின்றன. மொத்தப் பணியிடங்களில் 20%, அதாவது 123 இடங்கள் தற்போது பணியில் உள்ள காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பான்மையான காவலர்களால் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம்... நிர்வாக முட்டுக்கட்டை.

காவல்துறை பணியில் போது நிகழும் சிறிய தவறுகளுக்காக காவலர்களுக்கு துறை சார்ந்த சிறிய தண்டனைகள் வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டு வரை இந்தத் தண்டனை பெற்றவர்கள் கூட, துறை சார்ந்த ஒதுக்கீட்டின் கீழ் சார் ஆய்வாளர் பணிக்கு போட்டியிட முடியும். ஆனால், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு 3ஏ, 3 பி பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் சார் ஆய்வாளர் பணிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று காவலர்கள் அளித்த மனு மீது காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் கடந்த இரு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் தீர்ப்பளிக்கப்படாதது தான் காவலர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு காரணம் ஆகும்.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 386-ஆம் வாக்குறுதியாக 'காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை சார்ந்த சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் காவலர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30-ஆம் நாள் கடைசி நாளாகும். காவலர்களுக்கு விதிக்கப்பட்ட துறை சார்ந்த சிறிய தண்டனைகளை தமிழக அரசு நீக்காவிட்டாலோ, அவ்வாறு தண்டனை பெற்றவர்கள் சார் ஆய்வாளர் தேர்வில் பங்கேற்க காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் அனுமதி அளிக்காவிட்டாலோ, பல்லாயிரக்கணக்கான காவலர்களின் சார் ஆய்வாளர் பதவி உயர்வு கனவு கருகி விடும். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை சார்ந்த சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; காவலர்களின் சார் ஆய்வாளர் பதவி உயர்வு கனவை நனவாக்க வகை செய்ய வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x