Published : 03 Jun 2023 06:11 AM
Last Updated : 03 Jun 2023 06:11 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற, உதவி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22-ல் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகஅரசு ஆலையை மூடி `சீல்' வைத்தது. ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும், ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் மீதமுள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, பசுமையைப் பராமரித்து புதர்களை அகற்றுவது போன்ற பணிகளுக்கு அனுமதி அளித்தது.
இந்தப் பணிகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். அதை தமிழக அரசு அபிடவிட்டாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
9 பேர் கொண்ட குழு... அதில், “உச்ச நீதிமன்றம் தெரிவித்த பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி உதவி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட பிற பணிகளை மேற்கொள்வது குறித்து நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகே முடிவு செய்ய முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்க கூட்டம்: அபிடவிட் குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு விளக்குவதற்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் செய்ய அறிவுறுத்தியுள்ள பணிகளை மேற்கொள்ள உதவி ஆட்சியர் தலைமையில் 9 பேர் அடங்கிய உள்ளூர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணியை இவர்கள் கண்காணிப்பர். பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார். இதற்கான செலவை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாயில்வழியாக கழிவுகள் வெளியேற்றப்படும். அந்த வாயிலில் கேமரா பொருத்தி, கண்காணிக்கப்படும். 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
காலை 6 மணி முதல் மாலை6 மணி வரை மட்டுமே கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை உள்ளூர் மேலாண்மைக் குழு கூடி, அந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அடுத்த வாரம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் வரவேற்பு: ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலையில் சில பணிகளைத் தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்கியுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT