Published : 11 Oct 2017 05:34 AM
Last Updated : 11 Oct 2017 05:34 AM
ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, மத்திய அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயில் உள்ளது. ஸ்ரீ ராமானுஜர் தானுகந்த திருமேனியாகக் காட்சியளித்து வருகிறார். இவருடைய ஆயிரமாவது ஆண்டு வைபவம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக இந்து சமய அற நிலையத் துறை சார்பில், ரூ.86 லட்சம் செலவில் கோயிலில் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பக்தர்களும் காணிக்கையாக பல்லக்கு, வைரம், தங்கம், வெள்ளி நகைகள், கிரீடங்கள் வழங்கினர்.
தமிழக சுற்றுலாத் துறை சார்பில், 2.77 ஏக்கர் பரப்பளவில், ரூ.6 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராமானுஜர் குறித்த பல்வேறு பணி களுக்கு ரூ.8 கோடியும், விழா நடத்தவும் அது தொடர்பான கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா, கலாச்சாரத் துறை செயலர், முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி, தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரத் துறை செயலர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் கொண்டாட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆலோசனையுடன் விழா நடைபெறவுள்ளது. தற்போது பொதுமக்களிடமிருந்து சில ஆலோசனைகள் வந்துள்ளன.
அதில் 60 அடி உயர ராமானுஜர் சிலை, நூலகம், பக்தர்கள் தங்கும் அறைகள், திருமண மண்டபம், தியான மண்டபம் கட்ட வேண்டும் என்பவை குறிப்பிடத்தக்கவை.
இதுதொடர்பாக மேலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT