Published : 02 Jun 2023 07:01 PM
Last Updated : 02 Jun 2023 07:01 PM
காரைக்குடி: காரைக்குடி அருகே திமுக, பாஜக நிர்வாகிகள் இணைந்து காங்கிரஸ் எம்எல்ஏ மனைவிக்கு எதிராக போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி மனைவி தேவி உள்ளார். ஊராட்சித் துணைத் தலைவராக திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் உள்ளார். இந்நிலையில், ஊராட்சித் தலைவர் தேவிக்கு எதிராக துணைத் தலைவர் பாண்டியராஜன் தலைமையில் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் ஊராட்சிக் கூட்டத்தை தொடர்ந்து நடத்தவிடாமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் துணைத் தலைவர் பாண்டியராஜன், பாஜக முன்னாள் எம்எல்ஏ சோழன் சித.பழனிசாமி தலைமையில் ஏராளமானோர் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத ஊராட்சித் தலைவரை கண்டித்து சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 6-ம் தேதி வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து துணைத் தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், ''ஊராட்சியில் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஊராட்சித் தலைவர் தனக்கு வேண்டாதவர்களுக்கு வீட்டு வரி ரசீது கொடுப்பதில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று கூறினார்.
இது குறித்து தேவி கூறுகையில், ''பிப்ரவரியில் தான் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றேன். துணைத் தலைவர் தனது சுயலாபத்துக்காக தொடர்ந்து ஊராட்சிக் கூட்டங்களை புறக்கணித்து வருகிறார். தற்போது ஆட்களை திரட்டி போராட்டம் நடத்துகிறார். திமுக நிர்வாகி மாற்றுக் கட்சியினருடன் சேர்ந்து நிர்வாகத்தை நடத்த விடாமல் தடுக்கிறார். இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்க உள்ளேன்'' என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT