Published : 02 Jun 2023 06:45 AM
Last Updated : 02 Jun 2023 06:45 AM
தஞ்சாவூர்: கல்லணைக் கால்வாய் ஆற்றில் அமைக்கப்படும் கசிவு நீர் குழாய்கள் ஆழமாக பதிக்கப்படாமல், பெயரளவுக்கு கான்கிரீட் தளத்திலேயே அமைக் கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து இருந்து பிரிந்து செல்லும் கல்லணைக் கால்வாய் மூலம் பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கல்லணைக் கால்வாயில் இருந்து பாசனத்துக்காக ஆரம்பத்தில், விநாடிக்கு அதிகபட்சமாக 4,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு கரைகள் பலவீனமானதைத் தொடர்ந்து, 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலே கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடைமடைப் பகுதியான பட்டுகோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளில் ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமானது. இதையடுத்து, கல்லணை கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில், கல்லணைக் கால்வாயை 16 தொகுப்புகளாக புனரமைப்பு செய்ய, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் ரூ.2,639.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்கதிட்டமிடப்பட்டது.
அதன்படி, இந்தப் பணிகளை கடந்த 2021 பிப்.14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். இப்பணிகளில் 100 கி.மீ தொலைவுக்கு கல்லணைக் கால்வாய் கான்கிரீட் தளம், 1,339 மதகுகள், 20 பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதுடன், 10 பாலங்கள் சீரமைக்கப்பட உள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்: இதில், கால்வாயில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால், அருகில் உள்ள வயல்கள், குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கசியாது எனவும், தண்ணீர் பூமிக்குள்ளும் இறங்காது என்பதால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் எனவும், கரையை மட்டும் பலப்படுத்த வேண்டுமே தவிர, படுக்கை தளம் அமைக்க கூடாது எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பூமிக்கடியில் தண்ணீர் இறங்கும் வகையில், கான்கிரீட் தளத்தில் ஆங்காங்கே துளைகள் போட்டு, பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிளாஸ்டிக் குழாய்களை கான்கிரீட் தளத்தில் பெயரளவுக்கு அமைப்பதால், பூமிக்கடியில் தண்ணீர் செல்ல வாய்ப்பு இருக்காது எனவும், கண்துடைப்புக்காக இந்தக் குழாய்கள் அமைக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடியாது: இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திருவோணம் வி.கே.சின்னதுரை கூறியது: கல்லணைக் கால்வாயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில், இப்பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டும். கால்வாயின் தரைத்தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்காமல், இருபுறமும் கரைகளை மட்டுமே பலப்படுத்தி இருக்க வேண்டும்.
கான்கிரீட் தளம் அமைத்தால் தான் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் என கூறுகிறார்கள். ஆனால், இப்படி அமைத்தால் வாய்க்கால் அருகில் உள்ள குளம், குட்டை, வயல்களுக்கு தண்ணீர் எப்படி கசியும்? மேலும், நீரில் வாழக்கூடிய எந்த உயிரினமும் வாழ முடியாது. உயிரினங்கள் வாழ்ந்தால் தான் பயிர்களுக்கு இயற்கையாக கிடைக்ககூடிய சத்துகள் கிடைக்கும்.
மேலும், கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைவதால் நிலத்தடியில் நீர் பூமிக்குள் செல்ல வாய்ப்பில்லை என்பதால், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும். மேலும், ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கசிவு நீர் குழாய் கான்கிரீட் தளத்தை தாண்டி நிலத்துக்குள் செல்லும் வகையில் ஆழமாக இல்லாமல், பெயரளவுக்கு சொருகப்பட்டுள்ளது. இதனால், நிலத்துக்கு அடியில் தண்ணீர் இறங்காது. இது கண்துடைப்பு வேலை. இந்தப் பணிகளை உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து, தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆய்வு செய்து நடவடிக்கை: இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடைமடைக்கு தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இதனால், அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் கசிந்து செல்லாது என பொதுமக்களும், விவசாயிகளும் விடுத்த கோரிக்கையை ஏற்று கசிவு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, கான்கிரீட் தளத்தின் மேற்பரப்பில் மட்டும் பொருத்துவதாக கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து, பணியாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி, பணிகளை தரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT