Published : 02 Jun 2023 01:04 PM
Last Updated : 02 Jun 2023 01:04 PM
திருச்சி: திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தில் லாரி டயர்கள் வீசப்பட்டிருந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயிலை கவிழ்க்க சதித் திட்டமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு அதிவிரைவு ரயில் (12634) இன்று அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
அந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் வாளடிக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது இரு தண்டவாளங்களுக்கு இடையே 2 லாரி டயர்கள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. சூழலை உணர்ந்து கொண்ட என்ஜின் ஓட்டுநர் ரயிலை மெதுவாக இயக்க முயற்சிப்பதற்குள் ஒரு டயரில் என்ஜின் ஏறி இறங்கியது.
இதில் இன்ஜினில் இருந்து மற்ற பெட்டிகளுக்கு செல்லும் மின்சார இணைப்பு பெட்டி சேதம் அடைந்தது. இதனால் மற்ற பெட்டிகளுக்கு சென்ற மின்சாரம் தடைபட பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
விபரீதத்தை உணர்ந்த என்ஜின் ஓட்டுநர் திருச்சி ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவ்வழியாக வந்த ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயிலில் பழுதான மின் சாதனங்களை சரி செய்யும் பணி நடைபெற்றது. அரை மணி நேரத்திற்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.
ஆனால் அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி கோட்டை ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் கிடந்த லாரி டயர்களை பறிமுதல் செய்து ரயிலை கவிழ்க்க சதி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT