Published : 02 Jun 2023 12:11 PM
Last Updated : 02 Jun 2023 12:11 PM
விழுப்புரம்: நெதர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள மாதிரி நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஷெரீப், நீதிபதி மற்றும் மதிப்பீட்டாளராக பங்கேற்கிறார்.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் இயங்கி வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம், வீடன் பல்கலைக்கழகம் மற்றும் குரோசியஸ் சட்ட மையம் ஆகியவை இணைந்து ஹேக் நகரில் (ஜூன் 2ம் தேதி) இன்று முதல் 9 ம் தேதி வரை மூட் கோர்ட் என்னும் மாதிரி நீதிமன்றத்தை நடத்துகின்றன.
இதில் நீதிபதியாகவும், மதிப்பீட்டாளராகவும் பங்கேற்க விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற அரசு வழக்குறிஞர் ஷெரீப்பு-க்கு அழைப்புக் கடிதம் மற்றும் விசா அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் ஷெரீப் கூறியது, "இந்த மாதிரி நீதிமன்றத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 பல்கலைக் கழகங்களிலிருந்து 500 சட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். சட்ட மாணவர்கள் வழக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் முறை, வாதத்திறமை, முகப்பிரதிபலிப்பு, உடல்மொழி, பொருள் விளக்கம்,
குற்றத் தொடர்வுத்துறை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நிலையில் சமர்ப்பிக்கப்படும் வாதங்கள் ஆகியவற்றை கொண்டு மதிப்பீட்டை எங்களை போன்ற நீதிபதிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிடுவர்" என ஷெரீப் கூறினார்.
வழக்கறிஞர் ஷெரீப் ஏற்கெனவே ஜப்பான், சிங்கப்பூர், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து, ஆஸ்திரியா,ஸ்வீடன் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT