Published : 02 Jun 2023 04:12 AM
Last Updated : 02 Jun 2023 04:12 AM
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்து, பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
டெல்லியில் அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தொடர்பான வழக்கில், மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க, மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், நேற்று மாலை சென்னை வந்த அர்விந்த் கேஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், டெல்லி மாநில அமைச்சர்கள், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் உடனிருந்தனர்.
ஏறத்தாழ அரைமணி நேர சந்திப்புக்குப் பிறகு, முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், அர்விந்த் கேஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் மற்றும் அவர் தலைவராக இருக்கும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆட்சியை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுக்கின்றனர். அது மட்டுமின்றி, டெல்லி துணைநிலை ஆளுநர் மூலமாக தொடர்ந்து தொல்லைகள் தரப்படுகின்றன.
உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்ட மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கும்.
அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், தேசியக் கட்சிகளின் தலைவர்களும் இந்த சட்ட மசோதாவை எதிர்க்க வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் உணர்வுடன், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த நட்பு தொடர வேண்டும். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரும் 12-ம் தேதி கூட்டியுள்ள கூட்டம் குறித்தும் பேசியுள்ளோம்.
வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்வில் பங்கேற்க இருப்பதால், நிதிஷ்குமார் நடத்தும் கூட்டத்தில் நான் பங்கேற்க இயலாது. மேலும், காங்கிரஸ் சார்பிலும் யாரும் பங்கேற்க இயலாததால், கூட்ட தேதியை மாற்றி வைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி முதல்வரும், பிஹார் முதல்வரிடம் இதுகுறித்து பேசி, தேதியை மாற்றிவைக்க முயற்சிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த ஒருங்கிணைப்பு மக்களவைத் தேர்தலுக்கானது மட்டுமல்ல, ஜனநாயகத்தைப் பாதுகாக்க இது தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த ஒரே வாரத்தில், அதை ரத்து செய்யும் வகையிலான அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதுபோல நடப்பது நாட்டில் முதல்முறையாகும். மேலும், இது அரசியல் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது.
மாநிலங்களவையில் பாஜக அல்லாத உறுப்பினர்கள் இணைந்தால், இந்த அவசரச் சட்ட மசோதாவை முறியடிக்க முடியும். எனவேதான், தமிழக முதல்வரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளேன். சட்ட மசோதாவைக் கொண்டு வந்தால் திமுக கட்டாயம் எதிர்த்து வாக்களிக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி மக்களுக்கு திமுக துணை நிற்கும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இது அரையிறுதி ஆட்டம். இதில் வெற்றி பெற்றால், இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அரசு மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்கும். இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT