Published : 02 Jun 2023 06:39 AM
Last Updated : 02 Jun 2023 06:39 AM

‘பயோமெட்ரிக்’ முறையில் நெல் கொள்முதல்: தமிழகம் முழுவதும் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகளின் தலையீட்டை தடுக்க ‘பயோமெட்ரிக்’ முறையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் முறையை தமிழக அரசு நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இணையத்தில் பதிவுசெய்து, அதன் மூலம் அவர்களிடம்இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தொகை வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படுகிறது. இதில் பல பகுதிகளில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நெல் விற்பனை செய்து வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆதார் அடிப்படையில், விரல் ரேகை பதிவு மூலம்மட்டுமே கொள்முதல் செய்யும் பணியை நேற்று முதல் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொள்முதல் மையங்களில் வியாபாரிகள் நுழைவது தடுக்கப்படும் என்றும் அதிகளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு, நேற்று முதல் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

இனிமேல், அனைத்து நேரடிநெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லைவிற்பனைக்காக இணைய வழியில்பதிவு செய்யும்போது, ‘பயோமெட்ரிக்’ முறையில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் நெல்லை காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்யமுடியும். விரல் ரேகை பதிவு மூலம்ஆதார் எண்ணில் பதிந்துள்ள எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) பெறுவதன் மூலம் விவசாயிகள் விவரத்தை துல்லியமாகவும் பதிவேற்ற முடியும். விவசாயி களும் தங்கள் விவரங்கள் சரியாகஉள்ளதா என்பதை நெல் கொள்முதல் நிலையங்களிலேயே சரிபார்த்து நெல்லை விற்க முடியும்.

சமீபத்தில் ராணிப்பேட்டையில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தவிலைக்கு நெல்லை கொள்முதல் செய்த வியாபாரிகள், அதிக விலைக்கு விற்பனை செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நெல்லை கொடுக்கும் விவசாயிகளிடம் மூட்டைக்கு கூடுதல்தொகை வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொப்பரை கொள்முதல்: மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில், தமிழகத்தில் ரூ.640 கோடி மதிப்புள்ள 56 ஆயிரம் டன் கொப்பரைத் தேங்காயை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்துகொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதை செயல்படுத்தும் வகையில் 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையத்தால் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதியளித்து தமிழக வேளாண்துறை அரசாணை வெளியிட்டு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x