Published : 02 Jun 2023 07:10 AM
Last Updated : 02 Jun 2023 07:10 AM

பொய் சொல்வது யார்? - வைகோவுக்கு திருப்பூர் சு.துரைசாமி பதில்

திருப்பூர்: மதிமுகவில் மாநில அவைத்தலைவர், கட்சியின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிய திருப்பூர் சு.துரைசாமி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம்:

திமுகவுடன் கூட்டணி சேர எதிர்த்தார் என உங்கள் மீது வைகோ குற்றம் சாட்டுகிறாரே? - மக்களவைத் தேர்தல் நேரத்தில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஈரோடு தொகுதி, மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன், நானும் உடனிருந்தேன். அதற்கு மு.க.ஸ்டாலினுடன், அறிவாலயத்தில் நான் இருக்கும் புகைப்படமே சாட்சி. திமுகவை எதிர்ப்பதாக பேசியிருந்தால், நான் எதற்கு அங்கு சென்றிருப்பேன். திமுகவை எதிர்த்ததாக வைகோ சொல்வது முழுப்பொய்.

நீங்கள் எழுதிய கடிதங்களுக்கு வைகோவிடம் இருந்து பதில் வந்ததா? - நான் கடந்த 2 ஆண்டுகளாக கட்சி சட்ட விதிகளை குறிப்பிட்டுதான், 7 கடிதங்களை வைகோவுக்கு அனுப்பி இருந்தேன். ஒரு கடிதத்துக்குக்கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. கழக விதி 20, பிரிவு 1 மற்றும் 2-ன் கீழ், பொருளாளர் தான் வரவு- செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது.

பொருளாளருக்கு மதிமுகவில் அதிகாரமில்லாத நிலையை ஏற்படுத்திவிட்டனர். கட்சியின் பொதுச்செயலாளர் என்றாலும், அவரும் கட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்தான். கட்சியின் மாவட்டக் குழு, பொதுக்குழுவில்தான் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவர் ஆடிட்டரிடம் ஆண்டுதோறும் கணக்கு தாக்கல் செய்வதாக சொல்கிறார். ஆடிட்டரிடம் கணக்கு தாக்கல் செய்ய மதிமுக ஒன்றும் கம்பெனி இல்லை. இது என்ன ஜனநாயகம்?

திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் நீங்கள் பேசினீர்களா? - இன்றைய திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, மத்திய தேர்தல் குழுத்தலைவராக நான்தான் இருந்தேன்.

லமுறை திமுக அலுவலகத்தில் நடந்த தேர்தல் தொடர்பான பல ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றேன். தேர்தல் வெற்றிக்கு பிறகு நன்றி தெரிவித்து அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில் எனது புகைப்படத்தையும் போட்டு தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் நன்றி தெரிவித்திருந்தார். நான் வேலை செய்யாமல் இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?

கோவை தொழிற்சங்க கட்டிடத்தை திமுக அபகரிக்கும் என நீங்கள் அஞ்சுகிறீர்களா? - தொழிற்சங்கம் என்பது அதனுடைய சட்ட திட்டங்களுக்கு தான் கட்டுப்படும். தொழிற்சங்கத்தை எந்த அரசியல் கட்சியும், கட்டுப்படுத்த முடியாது.

நீங்கள் எந்த இடத்திலும் பொய் சொல்லவில்லையா? - மக்கள் நலக்கூட்டணி நேரத்தில், இடதுசாரி கட்சிகளும், விசிகவும், மதிமுகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. நான், கணேசமூர்த்தி மற்றும் சிவந்தியப்பனும் தான் செல்வோம். ஆனால் தொகுதி பங்கீட்டின்போது, கோவில்பட்டி தொகுதியில் வைகோ நிற்பதாக கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்தார். கம்யூனிஸ்ட்கள் ஏற்கெனவே வென்றிருந்ததால், அவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

கூட்டணிக் கட்சியின் தலைவர் நிற்பதால், அந்த தொகுதியை மதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் வேட்புமனு தாக்கலின்போது, பின்வாங்கும் முடிவை எடுத்து, வேறொரு நபரை வைகோ நிறுத்தினார். தொகுதியை பெறுவதற்காக, அவர்தான் திட்டமிட்டு பொய் சொன்னார். திட்டமிட்டு பொய் சொல்வதில், வைகோவை மிஞ்ச ஆள் இல்லை என்பதற்கு இந்த சம்பவமே ஓர் உதாரணம், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x