Published : 08 Oct 2017 09:21 AM
Last Updated : 08 Oct 2017 09:21 AM

கடத்தல் கதவைத் திறக்கும் கலைப் பொருட்கள் சட்ட திருத்த மசோதா: கடத்தல்காரர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் அச்சம்

தொன்மையான பழமைச் சின்னங்கள் மற்றும் அரிய கலைப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தில் (The Antiquities and Art Treasures Act, 1972) மத்திய அரசு மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் திருத்தங்கள், சிலைத் திருட்டு மற்றும் சிலைக் கடத்தல் கும்பல்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

1972-ல் இயற்றப்பட்ட, தொன்மையான பழமைச் சின்னங்கள் மற்றும் அரிய கலைப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காலத்துக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள் அளித்த பரிந்துரைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக, ‘தொன்மையான பழமைச் சின்னங்கள் மற்றும் அரிய கலைப் பொருட்கள் ஒழுங்குபடுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு மசோதா’வை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது மத்திய அரசு. அதற்கு முன்னதாக, அந்த மசோதாவின் முழு வடிவத்தையும் இணையதளத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியிட்ட இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ), இதுகுறித்த ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவித் திருக்கிறது.

‘மசோதாவின் ஷரத்துக்களை பார்த்தால் அது நமது நாட்டின் கலைப் பொக்கிஷங்களையும் தொன்மையான கோயில் சிலைகளையும் பாதுகாக்கும் விதமாக இல்லை. சிலைத் திருட்டு மற்றும் சிலைக் கடத்தல் கும்பல்களை இன்னும் பட்டவர்த்தனமாக செயல்பட வைக்கும் வகையில்தான் இருக்கிறது’ என்கிறார், சிலைக் கடத்தல் விவகாரங்களை அம்பலப்படுத்தி வரும் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய்குமார்.

லைசென்ஸ் தேவையில்லை

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் விஜய்குமார் கூறியதாவது: ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி, தொன்மையான கலைப் பொருட்களை விற்பவர்கள் ஏ.எஸ்.ஐ லைசென்ஸ் பெறவேண்டும். அப்படி லைசென்ஸ் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள பழமையான கலைப் பொருட்களின் தொன்மை, அது தங்களிடம் வந்தவிதம், அது எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்பன உள்ளிட்டவற்றை ஏ.எஸ்.ஐ-யில் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், புதிய மசோதாவின்படி, தொன்மையான கலைப் பொருட்களை விற்க லைசென்ஸ் பெற வேண்டியதில்லை. தங்களிடம் உள்ள கலைப் பொருட்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் இஷ்டத்துக்கு விற்றுக் கொள்ளலாம். இவற்றை எல்லாம் யார் கண்காணிப்பது, யார் அனுமதி கொடுப்பது என்பதற்கான வெளிப்படையான விவரங்கள் மசோதாவில் இல்லை.

வர்த்தக சுதந்திரத்தை நோக்கி

முறையான ஆவணங்கள் இல்லாமல் கலைப் பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை பதிவு செய்யாமல் பிளாக்கிலேயே வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் வெளிக்கொண்டு வருவதற்காகவும் கலைப் பொருள் வர்த்தகத்தை இன்னும் சுதந்திரமாக்குவதற்காகவும் இந்த மசோதாவை சட்டமாக்கப் போவதாகச் சொல்கிறார்கள். இது அபத்தமானது.

சிலைக் கடத்தல் வியாபாரத்தின் மூலம் திரட்டப்படும் பணத்தில் பெரும் பகுதி தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதை உணர்ந்துதான் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கலைப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி சட்டங்களை இன்னும் கடுமையாக்கி வருகின்றன. நாம் சட்டங்களை கடுமையாக்குவதற்குப் பதிலாக ஏற்கெனவே இருக்கும் கெடுபிடிகளை தளர்த்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம்.

இந்த மசோதாவை எந்த நிபுணர் குழு தயாரித்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

தொல்லியல் துறை வட்டாரத்தில் இதுகுறித்துப் பேசியவர்கள், “இதற்கு முன்பு பலமுறை சட்டத்திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைகள் அளித்தபோது அதிலுள்ள பாதகங்களைச் சொல்லி ஆரம்ப நிலையிலேயே அதை நிராகரிக்க வைத்துவிட்டோம். ஆனாலும் இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசு அதிக முனைப்புடன் இருக்கிறது” என்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x