Published : 26 Dec 2017 11:54 AM
Last Updated : 26 Dec 2017 11:54 AM
ந
டைபாதையில் வாழும் சிறுவர்களையும் பிச்சை எடுப்பதையே தொழிலாகக்கொண்டு வாழும் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளையும் மீட்டு அவர்களுக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்னும் முனைப்போடு 1999-ல் தொடங்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் ‘சுயம்’ அறக்கட்டளை.
இந்த அடிப்படையில் இவர்களிடம் கல்வி கற்கத் தொடங்கிய சில குழந்தைகளில் வாய்ப்பு கிடைத்தால் என்னாலும் படிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயவேல். இன்றைக்கு அவர் பிலிப்பைன்ஸில் ஃபாஸ்ட் ஏவியேசனில் ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினீயரிங் படித்துவருகிறார்.
செங்கல் சூளையில் குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட தசரதன், ஐந்தாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் படித்தார். சுயம் அறக்கட்டளையின் சிறகு மாண்டிசோரி பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்தார். 9 முதல் 12-ம் வகுப்புவரை என்.ஐ.ஓ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்) வழியாகத்தான் தேர்வானார். இன்றைக்கு ரஷ்யாவில் க்ரிமியா மெடிகல் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார்.
ரயிலில் பழம் விற்பவரின் மகனான சூர்யா, இன்னொரு திறமையான மாணவர். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவரான இவர் ஐ.ஐ.டி. மெயினில் தேர்வாகி, எச்.எம்.டி. கல்லூரியின் உதவியோடு ஹரியாணாவில் NIFTEM கல்வி நிறுவனத்தில் பி.டெக். ஃபுட் டெக்னாலஜி படிக்கிறார்.
“பிளஸ் டூவரை நாங்கள் இலவசக் கல்வி அளிக்கிறோம். மேற்படிப்புக்கு ஆகும் செலவை இவர்கள் கடனாகப் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதித்துத் திருப்பித் தரவேண்டும். பணி வாய்ப்புக்கும் எங்களால் இயன்ற உதவியைச் செய்கிறோம். அதைக் கொண்டு பிற மாணவர்களுக்கும் உதவ எண்ணியிருக்கிறோம். இந்தத் திட்டத்துக்கு ‘ஜீரோ டூ ஜாப்’ என்று பெயர்வைத்துள்ளோம்” என்கிறார் சுயம் அறக்கட்டளையின் நிறுவனரும் அறங்காவலருமான டாக்டர் உமா. இதற்காக சிறகு மாண்டிசோரி பள்ளியை சென்னை, ஆவடியை அடுத்துள்ள பாலவேடு பேட்டையில் நடத்திவருகிறது இந்த அமைப்பு.
சுயத்தை வெளிப்படுத்தும் கல்வி
“300 குழந்தைகள் சிறகு பள்ளியில் 8-ம் வகுப்புவரை படிக்கிறார்கள். ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் இங்கு சேரலாம். சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கே இங்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. முதல் வகுப்பிலிருந்தே குழந்தையின் தனிப்பட்ட திறன்களை வளர்க்கும் முறையிலேயே எங்களின் அணுகுமுறை இருக்கும்.
மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், தனித் திறன் உடையவர்களாகக் குழந்தைகளை மாற்றுவதுதான் எங்களின் நோக்கம். ஒரு சட்டகத்தில் குழந்தைகளை அடைப்பதில்லை.
தேர்வு முறையே வித்தியாசமாக இருக்கும். பேச வேண்டும், விவாதிக்க வேண்டும். பல திறன்களை ஒருங்கிணைத்த கல்வித் திட்டமாக இருக்கும். எந்தக் குழந்தைக்கு என்ன விருப்பமோ அதைப் படிக்கலாம். எங்கள் பள்ளியில் படித்த ஒரு குழந்தை, இன்றைக்கு காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் படிக்கிறான். வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் குழந்தைகளை நாங்கள் உருவாக்குவதில்லை” என்றார் உமா.
வேஸ்ட் லேண்ட் டெவெலப்மெண்ட்டில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை உமா முடித்திருப்பதாலோ என்னவோ, அந்தப் பகுதியில் ஏறக்குறைய 50 ஏக்கர் அளவுக்குத் தரிசு நிலங்களை பயிர் வளர்க்கும் அளவுக்கு மேம்படுத்தி இருக்கிறார். குழந்தைகள் மண்ணோடும் செடியோடும் தன்னியல்பில் பழகுவதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.
மருத்துவமும் பொறியியலும்தான் படிப்பா?
“மருத்துவத்துக்கும் பொறியியலுக்கும் மட்டும்தான் வங்கிகளில் கல்விக் கடன் தருகிறார்கள். வி.எஃப்.எக்ஸ். கேமிங் புரோகிராமை நிறையப் பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றன. ஆனால், இதைப் படிப்பதற்கு செலவாகும். இதுபோன்ற பல தொழில்நுட்பங்களையும் டிப்ளமா படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைப்பதில்லை. பொறியியல் படிக்கும் நிறையப் பேருக்கு வேலை இல்லாத நிலையில், வேறு படிப்புகளைப் படிப்பதற்கு மாணவர்களிடையே எப்படி ஆர்வம் வரும்? முதல் தலைமுறையாகப் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ந்து படிக்க கல்விக் கடன் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் வேலை இல்லாத் திண்டாட்டம் நாட்டில் மறையும்” என்கிறார் உமா.
நாடோடிக் குழந்தைகளுக்குக் கல்வி
நோமாடிக் டிரைப்ஸ் எனப்படும் நாடோடிப் பழங்குடியினர் இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதம் இருப்பார்கள். இவர்களுக்கு எந்தவிதமான அரசு உதவிகளும் கிடைப்பதில்லை. இருப்பிடம் ஏதுமில்லாத இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் பரிதாபமானது.
“கன்னியம்மன் நகர், அலமாதி, தாமரைப்பாக்கம், அவற்றை அடுத்திருக்கும் ஊர்களிலும் இருக்கும் இப்படிப்பட்ட 500 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கவும் அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் பெற்றுத் தரவும் முயன்று, 50 குடும்பங்களுக்கு அதைக் கிடைக்கச் செய்திருக்கிறோம்.
பிச்சை எடுக்கும் பழக்கத்தை மாற்ற ஆண்களுக்கு ஆட்டோ வாங்க வங்கிக் கடன் உதவி, எளிய வேலைகளில் பணியமர்த்துவது போன்ற உதவிகளைச் செய்கிறோம். இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த 120 குழந்தைகள் எங்களின் பள்ளியில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளியிலும் பலரைச் சேர்த்திருக்கிறோம்.
இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 13 வயதிலேயே திருமணம் செய்துவிடும் வழக்கம் இருந்தது. இதையெல்லாம் மாற்றியிருக்கிறோம். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்னும் பெண்ணுக்கு 10 வயதிலேயே மணமாகி, அவருடைய கணவரும் இறந்துவிட்டார். அவரைப் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கவைத்தோம்.
அவரைப் பற்றித் தெரிந்ததும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர், அவருக்கு இலவசமாக நர்ஸிங் படிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றனர். அதே சமூகத்தைச் சேர்ந்த மோகனசுந்தரிக்கு சோகா இகடா கல்லூரியில் இலவசமாக படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கீழே விழுந்து கிடப்பவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் செல்வதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். நாங்கள் கைகொடுத்து தூக்கிவிடுகிறோம். இனி, நடப்பதும் ஓடுவதும் பறப்பதும் அவர்களின் சுயத்தைப் பொறுத்து” என்று கூறிய உமாவிடமிருந்து ஆழமாக வெளிப்படுகிறது ஒரு புன்னகை!
‘சுயம்’ அமைப்பு
தொடர்புக்கு: 9840365819
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment