Published : 12 Mar 2025 03:25 PM
Last Updated : 12 Mar 2025 03:25 PM
காவிரி என்கிற பெயரை உச்சரித்தவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல்! குடகு மலையின் தலைக்காவிரி பகுதியில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டிற்குள் காவிரி நுழையும் இடம் ஒகேனக்கல். சுற்றுலாப் பயணிகளுக்குப் புகலிடமாக விளங்கும் இந்தப் பகுதியில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன.
ஆர்ப்பரிக்கும் அருவி, சுழன்றாடும் பரிசல் சவாரி, எண்ணெய் மசாஜ் போன்றவை அங்கு ஸ்பெஷல். இவற்றோடு ஒகேனக்கலில் புகழ்பெற்ற மற்றொரு முக்கியமான விஷயம் மீன் குழம்பு! அந்த மீன் குழம்பை ருசிப்பதற்காகவே பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்.
ஒகேனக்கலுக்குள் நுழைந்ததும் காவிரியின் வாசனை நம்மை வாஞ்சையோடு அழைத்துக்கொள்ளும். பரிசல்கள் ஒருபுறம் நீரில் மிதந்துகொண்டிருக்க, அருவிக்கு அருகிலோ எண்ணெய் மசாஜ் நடைபெற்றுக்கொண்டிருக்கும். இதற்கிடையில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் மீன் உணவு கடைகள்தான்!
வீட்டில் சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள் - கரையோரத்தில் விற்பனை செய்யப்படும் மீன் ரகங்களை வாங்கிக் கொடுத்துவிட்டால், நம் கண் முன்னே நேரடியாக அரைக்கப்படும் மசாலாப் பொருள்களின் கைமணத்துடன் குழம்பைத் தயார் செய்வார்கள். இத்தனை பேருக்குச் சாதமும் மீன் குழம்பும் வேண்டும் என்று சொல்லிவிட்டால், அதற்கேற்ப சமைத்துத் தர மக்கள் அங்கு காத்திருக்கிறார்கள்.
காலையில் வந்ததும் மீன் உணவு வகைகளை ஆர்டர் செய்துவிட்டு, அப்படியே காவிரியில் புகழ்பெற்ற பரிசல் சவாரி செய்துவிட்டுத் திரும்பினால் மீன் குழம்பு சாப்பாடு காத்திருக்கும். பசியோடு குழம்பைச் சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். மீன் குழம்பின் சிறப்பே அதிலிருந்து வெளிவரும் நறுமணம்தான்!
சுவை ரகசியம்: மீன் குழம்பின் சுவை ரகசியத்தை அறிய உணவு சமைக்கும் இடத்திற்குள் நுழைந்தால், மசாலாப் பொருள்கள், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஆட்டுரலில் அரைக்கும் சத்தமும், புளியைத் தனியே வேறு ஆட்டுரலில் அரைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். அரைத்த மசாலா கலவையை எடுத்து, மீன் துண்டுகளைப் போட்டு நளபாகமாக விறகடுப்பில் சமைத்து முடிக்க சுவையும் மணமுமிக்க மீன் குழம்பு தயார். சமைத்துக் கொடுப்பவர்களிடம் சுவைக்கான ரகசியத்தையும் குறிப்புகளையும் கேட்டால் பொறுமையாக விளக்கம் அளிக்கவும் செய்கிறார்கள்.
வறுத்த மீன் - மீன் குழம்பைத் தவிர்த்து வறுத்த மீன்களும் அங்கு விற்பனையில் பட்டையைக் கிளப்புகின்றன. நெத்திலி மீன் வறுவலும் மீன் குழம்பும் நல்ல காம்பினேஷன். மூன்று மணி அளவில் சிற்றுண்டியாக வறுத்த மீன் உணவு வகைகள் அதிகளவில் வியாபாரமாகின்றன.
மீன்பிடிக்கும் பகுதி என்பதால் மலிவான விலையிலும் தரமானதாகவும் மீன்கள் கிடைப்பதால் பயணிகள், மீன்களை வாங்கிச் செல்கிறார்கள். ஒகேனக்கலுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, அங்கிருக்கும் சூழல் பன்மயத்தை ரசித்துக்கொண்டே மீன் குழம்பின் சுவையை அனுபவிக்கத் தவறாதீர்கள்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் . | drvikramkumarsiddha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment