Published : 07 Jan 2025 04:08 PM
Last Updated : 07 Jan 2025 04:08 PM
புனித பீட்டரின் கல்லறை அமைந்திருந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக வாடிகன் குன்றின் பெரும்பகுதி சமன்படுத்தப்பட்டது. புதிய கோயிலின் நடு பீடம் பீட்டரின் கல்லறைக்கு நேர் மேலே அமையுமாறு திட்டமிடப்பட்டது. ஆனால், பீட்டரின் கல்லறைக்கு மேலே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த நினைவுக்கூடத்தை இடிக்கக் கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை.
சவப்பெட்டி கொள்ளை: புதிய கோயிலைக் கட்டியபோது பீட்டரின் நினைவுக்கூடம் சிறிய ஆலயமாக மாற்றம் பெற்றது. அது இன்று, நம்பிக்கை அறிக்கையின் சிற்றாலயம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சிறிய ஆலயத்தின் நேர் மேலே புதிய கோயிலின் பீடம் வருமாறு கட்டப்பட்டது. இந்தக் கட்டிட அமைப்பு இன்றுவரை நீடித்துள்ளது.
புனித பீட்டரின் சடலத்தை உள்ளடக்கிய கல்பெட்டி நான்கு பக்கங்களிலும் வெண்கலத்தால் போர்த்தப்பட்டது. அதன் நீள, அகல, உயர அளவு ஒவ்வொன்றும் 5 அடி. அதன்மேல் 150 பவுண்டு எடையுள்ள ஒரு தங்கச் சிலுவை நிறுவப்பட்டது.
பீட்டரின் கல்லறையை அழகு செய்த பொன்னையும் வெள்ளியையும் பிற செல்வங்களையும் பொ.ஆ (கி.பி) 846இல் ரோம் மீது படையெடுத்து வந்த சாரசீனியர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பொ.ஆ. 1939-1949 காலக்கட்டத்தில் வாடிகனின் மேற்பார்வையில், தேவாலயத்தின் கீழ்ப்பகுதியில் அகழாய்வு நிகழ்ந்தது. அகழாய்வுக் குழுவுக்கு வாடிகன் தரப்பில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவர்தான், மொன்சிக்னோர் லூட்விக் காஸ். இவர் அப்போதைய போப் 12ஆம் பயசுக்கு நெருங்கிய ஆலோசகர்.
ஆய்வாளரின் மறதி: இவர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது, ஒரு கல்லறையையும் அதில் மனித எலும்பின் சில பகுதிகளையும் கண்டறிந்ததையும், இறந்தவருக்குத் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில், அந்த உடல் பாகங்களின் மிச்சங்களை மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டதையும் அவர் அகழாய்வுக் குழுவினரிடம் தெரிவிக்கவில்லை.
மொன்சிக்னோர் காஸ் 1952, ஏப்ரல் 15ஆம் தேதி இறந்தார். அதைத் தொடர்ந்து பேராசிரியர் மார்கரிட்டா குவார்தூச்சி என்பவர் அந்தக் கல்லறை அகழாய்வுக் குழுவுக்கு மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றார்.
முதலில் நடந்த அகழாய்வின்போது அகற்றப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டிருந்த குழி குவார்தூச்சியின் கவனத்தை ஈர்த்தது. நினைவு பீடத்தில் இருந்த அக்குழி 77 செ.மீ. நீளம், 29 செ.மீ. அகலம், 315 செ.மீ. உயரமுடையதாகவும், உள்பகுதியில் பளிங்குக் கல்லால் போர்த்தப்பட்டதாகவும் இருக்கக் கண்டு, குவார்தூச்சி அக்குழியில் என்ன இருந்தது என்று விசாரித்தார்.
அப்போது, அக்குழியிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சில எலும்புகள் அகற்றப்பட்டு, ஒரு மரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட செய்தி தற்செயலாகத் தெரியவந்தது. அந்த எலும்புகளை ஆய்ந்து தகவல் தரும்படி வெனெராந்தோ கொரேந்தி என்னும் தொல்பொருள் வல்லுநரை 1956இல் அணுகினார்கள்.
பீட்டர் துயில்கிறார்: அவர் தன் ஆய்வு முடிவுகளை 1963இல் தெரிவித்தார். மரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட எலும்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த, சுமார் 60-70 வயதுடைய ஆணின் எலும்புகள் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் குவார்தூச்சி பேதுரு கல்லறை அகழிடத்தில் கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் பீட்டர் பற்றிய குறிப்பு இருந்தது. கிரேக்க மொழியில் பொ.ஆ. 2-3 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டில் இரு சொற்கள் எழுதப்பட்டிருந்தன.
அதற்கு, பீட்டர் இங்கே உள்ளார் அல்லது பீட்டர் அமைதியாகத் துயில்கிறார் என்று அர்த்தம். இன்று பீட்டரின் கல்லறை என்று கருதப்படும் இடத்தில் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டிலிருந்தே பீட்டருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் உண்மையிலேயே யேசுவின் பிரதானச் சீடர் பீட்டரின் எலும்புகள்தான் என்று அகழாய்வு அறிஞர் குவார்தூச்சி கண்டறிந்தார்.
அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய முடிவின் அடிப்படையில், போப் 6ஆம் பால், புனித பீட்டர் ஆலயத்தின் கீழே நடத்தப்பட்ட ஆய்வின் பயனாகப் புனித பீட்டரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன என்று 1968, ஜூன் 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மறுநாள் புனித பீட்டரின் எலும்புகள், அவை எடுக்கப்படும் முன் இருந்த அதே இடத்தில் 19 சிறிய ஒளி ஊடுருவு கண்ணாடிப் பெட்டிகளில் இடப்பட்டுத் திரும்பவும் வைக்கப்பட்டன. ஒன்பது சிறு எலும்புத் துண்டுகள் வெள்ளியாலான காப்பகப் பெட்டியில் இடப்பட்டு போப்பின் வீட்டில் இருந்த சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டன. அப்பெட்டியில் ஒட்டப்பட்ட வாசகத்தில், ‘இங்கே இருப்பவை புனித பீட்டரின் எலும்புத் துண்டுகள் என நம்பப்படுகின்றன’ என்னும் குறிப்பு உள்ளது.
> முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: யேசுவின் முதன்மைச் சீடர் - புனித பீட்டர் | கல்லறைக் கதைகள் 17
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment