Last Updated : 31 Dec, 2024 01:00 PM

 

Published : 31 Dec 2024 01:00 PM
Last Updated : 31 Dec 2024 01:00 PM

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 33: ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்... ஒன்றை வையுங்கள்

லொஸானில் சலூன் வைத்திருக்கிறார் கரண். ஐம்பது வயதை நெருங்குபவர். இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், இருபது வருடங்களுக்கு முன்பு லொஸானுக்கு இதே சலூனில் பணியாளராகச் சேர்ந்தார். ஒருகட்டத்தில் முதலாளி கடையை விற்றுவிடத் தீர்மானிக்க அதைக் கரண் வாங்கிக் கொண்டார்.

அவர் சலூனின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். ''உள்ளூர் மக்களும் வருகிறார்கள். ஆனால், உள்ளூர் மக்களில் அதிகம் பேர் கடையில் உபரியாக விற்கும் அழகுப் பொருள்களை வாங்கவே வருகிறார்கள்'' எனக் கரண் பகிர்ந்து கொண்டார்.

''இங்கு, விலைவாசியைத் தவிர்த்து எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் சொந்த ஊரில் வாழ்வதன் சுகமே தனிதானே! இன்னும் நான்கு வருடங்களை எப்படியாவது இங்கே கட​த்தி விட்டால் நான் ஓய்வூதியத்தைப் பெற தகுதி பெற்றுவிடுவேன். அதன் பிறகு எங்கிருந்தாலும் மாதாமாதம் ஒரு தொகை எனக்கு வந்துவிடும். இலங்கை சென்றுவிட நினைக்கிறேன். ஆனால், இங்கிருந்து வர என் பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் என்னுடன் இலங்கை வரப்போவதில்லை என்பதை நினைக்க வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய முடியும்'' என்றார் கரண்.

லொஸானில் நடை​பெற்ற இதய மருத்துவ மாநாடு ஒன்றுக்கு ஃபேபுலஸி என்பவர் வந்திருந்தார். இவர் ஒரு நிறுவனத்தின் மார்கெட்டிங் மேனேஜர். தங்கள் மருத்துவக் கருவிகளை அங்கு சந்தைப்படுத்துவதற்காக வந்தார். லொஸான் வெப்பநிலையை மிகவும் சிலாகித்துப் பேசியவர், சுவிட்சர்லாந்தில் ஒரு குறையைச் சுட்டிக் காட்டினார். ''இங்கு அதிகார வர்க்க ஆட்சி (bureaucracy) நடைபெறுகிறது. கணினி கோலோச்சும் இந்தக் காலக்கட்டத்திலும் நிறைய ஆவணங்களைத் தாள்களில்தான் சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது'' என்று அலுத்துக்கொண்டார். நாம் சந்தித்த வேறு சிலரும்கூட சுவிட்சர்லாந்தில் பேப்பர் ஒர்க் அதிக அளவில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.

வாசிப்பு தொடர்பாகச் சில சுவாரசியங்களைச் சுவிட்சர்லாந்து பயணத்தின்போது கவனிக்க முடிந்தது. சாலைகளில் முக்கியமான சில இடங்களில் ஒன்றிரண்டு உயரமான கண்ணாடி அலமாரிகள் உள்ளன. அவற்றில் புத்தகங்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் அவற்றைத் திறந்து உங்களுக்குத் தேவையான புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்லலாம். சில நாள்களில் படித்துவிட்டு அவற்றை அங்கே திருப்பி வைத்தால் நல்லது. நீங்கள் புத்தகத்தை எடுத்துச் சென்றதற்கான எந்தத் தகவலையும் அங்கு குறித்து வைக்கத் தேவையில்லை.

இந்த முறையின் அடிப்படையே 'ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றை வையுங்கள்' (Take one, buy one) என்பதுதான். யாருடைய மேற்பார்வையும் கிடையாது. அந்த அலமாரிகளில் பெரும்பாலும் பிரெஞ்சு நூல்கள் இருந்தாலும் ஆங்கில நூல்களும் ஓரளவு காணப்பட்டன. இது எனக்கு மிகவும் பிடித்தமான திட்டமாக இருந்தது. புத்தகங்கள் மீதான அந்த மக்களின் காதலைப் புரிந்துகொள்ள முடிந்தது. நம் ஊரிலும் இப்படி வைக்கலாமே!

முந்தைய அத்தியாயம் : ஸ்விஸ் எனும் சொர்க்கம் 32: ’மேடம் ஜிஸ்டாட்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x