Last Updated : 03 Dec, 2024 01:17 PM

 

Published : 03 Dec 2024 01:17 PM
Last Updated : 03 Dec 2024 01:17 PM

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 25: அழகான கோதிக் கலை நினைவுச் சின்னம்

மான்ட்​ரூ ஜாஸ் இசை விழாவில் பாதிக்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கட்டணம் செலுத்தித்தான் பார்க்க முடியும். ஆனால், லொசான் நகர இசை விழாவில் எந்த நிகழ்ச்சிக்கும் கட்டணம் கிடையாது.

இந்த விழா மேட்டுப் பகுதியில் உள்ள லொசான் கதீட்ர​லைச் சுற்றிலும் நடைபெறுகிறது. நகர விழாவுக்கு வந்து சேர்ந்தவர்களின் முகங்களிலெல்லாம் பெரும் ஆனந்தம். ஸ்விட்சர்லாந்தின் பல பகுதிகளில் சிதறிக்கிடக்கும் உறவினர்களும் நண்பர்களும் இந்த விழாவை முன்னிட்டு ஒன்றுகூடுகிறார்கள். சாலைகளில் கைகளைக் கோத்துக்கொண்டு ஆனந்தமாக நடனமாடுகிறார்கள்.

இசை, நடனம் தவிர பொதுமக்களை இணைத்துக் கொள்ளும் வேறு சில கேளிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. நீங்கள் நின்றுகொண்டு இருக்க, உங்களைத் திறன்பேசி வட்டமாகச் சுற்றிச் சுற்றி வந்து வீடியோ எடுக்கிறது. வீடியோவைப் பார்க்கும்போது நீங்கள் சுற்றுவது போல் இருக்கும். இதில் கலந்து கொண்டவர்களுக்குக் கைவிசிறி, குளிர்கண்ணாடி, சிறிய பேக்பாக் போன்ற இலவசப் பொருள்களை அளித்தனர்.

இங்குள்ள எல்லா உணவுக் கடைகளுக்குமான தட்டு, டம்ளர்களை லொசான் நகர நிர்வாகமே அளிக்கிறது. இவற்றுக்காகத் தனியாகச் சிறிது பணம் கொடுக்க வேண்டும். தட்டு, டம்ளர்களை இசைவிழா நடைபெறும் எந்தப் பகுதிக்கும் எடுத்துச் ​செல்லலாம். இவற்றைத் திருப்பித் தருவதற்கு என்றே ஓரிடம் தனியாக உண்டு. அங்கே அவற்றைக் கொடுத்துவிட்டு, முன் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

நடமாடும் கழிப்பறைகள் ஆங்காங்கே காணப்பட்டன. அத்தனைக்கு முன்பாகவும் நீண்ட வரிசை. பெரும் கோப்பைகளில் அடுத்தடுத்து பீர் குடிப்பதால் ஏற்பட்ட விளைவாக இருக்க வேண்டும்.

'மிக அதிகமாக ஒலி எழுப்பாதீர்கள். நகரத்தின் கட்டிடங்களுக்கும் வாகனங்களுக்கும் எந்தவிதச் சேதமும் ஏற்படுத்தாதீர்கள்’ என்று அவ்வப்போது எச்சரிக்கிறார்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது ஓர் இசை நிகழ்ச்சி லொசான் தேவாலயத்தில் நடக்க இருந்தது. தனது பிரம்மாண்டமான ட்ராம்போலின் இசைக்கருவியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். நைன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், கொலம்பியாவைச் சேர்ந்தவர். ”சுவிட்சர்லாந்துக்கு வந்தது அந்த இசைக்கருவியைக் கற்கத்தான். சுவிட்சர்லாந்து சாக்லேட்களுக்கு நான் அடிமை.” என்றார். மற்றபடி கொலம்பியாவில் போதைப்பொருள் விற்பது குறைந்துவிட்டது என்றார்.

பழைய நகரத்தின் மையத்தில் காணப்படுகிறது இந்தக் கம்பீரமான லொசான் கதீட்ரல். ஐரோப்பாவின் மிக அழகான கோதிக் கலை நினைவுச்சின்னங்களில் ஒன்று. இதைக் காண ஒவ்வோர் ஆண்டும் நான்கு லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள்! இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, போப் பத்தாம் கிரிகோரி முன்னிலையில் இது புனிதப்படுத்தப்பட்டது.

கத்தோலிக்க மாதா கோயிலாக இருந்த இது, 1536இல் ஒரு புராட்டஸ்டண்ட் கதீட்ரலாக மாறியது. மதச் சீர்திருத்தத்தின் விளைவு. கதீட்ரல் மிகவும் அழகான பல வண்ண உள்புறங்களைக் கொண்டுள்ளது. பழங்காலத்தில் நிலவி வந்த ஒரு பழக்கம் இன்னமும்கூட அங்கு தொடர்கிறது. காவலாளி ஒருவர் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, இந்தத் தேவாலயத்தின் மணிகோபுரத்தின் உச்சியில் நின்று ஒவ்வொரு மணி நேரமும் அந்த நேரத்தை உரத்து அறிவித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் இத்தகைய காவலாளி நகரத்தைக் கண்காணிப்பதற்காகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது பழமையான பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் ஒரு செயலாக இருக்கிறது.

முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 24: போரைக் கடந்து வந்த இசைக் குழு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x