Published : 25 Nov 2024 05:52 PM
Last Updated : 25 Nov 2024 05:52 PM
பானிபட் போரில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்த பாபரின் புகழ் பரவியது. சித்தூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங், இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப்பற்று கொண்ட மன்னர்களுக்குக் கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையைச் சேர்த்துக் கிளம்பினார் பாபரை வெல்ல.
பொ.ஆ (கி.பி) 1527 மார்ச் 16ஆம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு பெரும் யுத்தம் தொடங்கியது. இந்தப் போரிலும் பாபரின் படை அபார வெற்றியைப் பெற்றது. கந்தேரிக்கோட்டை, வங்காளம் என ஏறக்குறைய மொத்த வட இந்தியாவையும் கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் பாபர். தன் வாழ்க்கையில் அதிகமான நாள்களைப் போர்க்களங்களில் தொலைத்த பாபர் போர்களில் அதிக நாட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் சிறந்த மன்னனாகவே திகழ்ந்தார்.
வரலாற்றைத் தாங்கிய நாள்குறிப்பு: ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாள்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், கலாச்சாரம், புவியியல், தாவரங்கள், பூக்கள், சாதி, மதம், மக்களின் கணிதத் திறமை - கலைத் திறன் என எதையும் தன் நாள்குறிப்பில் குறிப்பிட மறக்கவில்லை.
டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார். மேலும், தாவரங்கள், பறவைகள் எனப் பல நுணுக்கமான விவரங்களை பாபரின் சுயசரிதையில் காணலாம். ஆனால், பாபர் காலத்தில் கட்டிடக்கலை எதுவும் சொல்லும்படியாக முன்னேறவில்லை.
இளம்வயதில் இருந்தே கரடுமுரடான வாழ்க்கை, தொடர்ந்து யுத்தங்கள், மதுப்பழக்கம் எல்லாம் சேர்ந்து பாபரைப் படுக்கையில் வீழ்த்தின. பாபர் நோய்வாய்ப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு டெல்லிக்கு விரைந்தார் ஹுமாயூன். தந்தையின் உடல்நிலை தேறியவுடன் ஹுமாயூன் இந்தியாவின் வடக்கே சம்பல் பகுதிக்குத் திரும்பிச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது திடீரென்று காய்ச்சலில் வீழ்ந்தார்.
எந்த மருந்துக்கும் காய்ச்சல் சரியாகாததால் ஒரு படகில் படுக்க வைத்து யமுனை நதி வழியாக ஆக்ராவுக்கு அழைத்துச் சென்றார்கள். காய்ச்சல் சரியாகாததால், பாபர் தன் உயிரை எடுத்துக்கொண்டு மகன் உயிரை மீட்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். சில நாள்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாபர், 1530ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார். நான்கு ஆண்டுகள் மட்டுமே டெல்லி அரியணையில் ஆட்சி செய்த பாபர், இறக்கும்போது அவருக்கு வயது 48. டெல்லி அரியணையில் அமர்ந்து அவர் ஆட்சி செய்தது 4 ஆண்டுகள்.
கடைசி ஆசை: பாபரின் சடலம், ஆக்ராவில் பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்ட இடத்தருகே யமுனை நதிக்கரையில் புதைக்கப்பட்டது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, பாபரின் உயிலின்படி அவர் உயிரையே வைத்திருந்த ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கே அவர் முன்பு அமைத்திருந்த அழகான பெரிய தோட்டத்தில் மறுபடியும் புதைக்கப்பட்டது.
பாபரின் சுயசரித்திரதமான ‘பாபர்நாமா’வில் காபூலில் ஒரு பூங்காவை அமைக்க பாபர் ஆணையிட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பாபர் புதைக்கப்பட்டதால், பாக்-இ பாபர் என்று பெயர் சூட்டப்பட்டது. தமது வாழ்க்கைக் காலத்தில் இப்படி ஒரு இடத்தைத் தமது கேளிக்கைத் தேவைகளுக்காக உருவாக்குவது முஸ்லிம் இளவரசர்களின் வழக்கமாக இருந்தது. அப்படி உருவாக்கப்பட்ட இடத்திலேயே பிற்காலத்தில் அவர்களை அடக்கம் செய்வதும் உண்டு. பாபருக்குப் பின் வந்தவர்களுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க இடமாக இருந்து வந்துள்ளது.
பாபருக்குப் பின் வந்த முகாலாய மன்னர்களில் ஒருவரான ஜஹாங்கீர், காபூலில் உள்ள எல்லாப் பூங்காக்களைச் சுற்றியும் சுவர் எழுப்பப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். 1607 ஆம் ஆண்டில் இந்த இடத்துக்கு யாத்திரை சென்றார். பாபரின் கல்லறைக்கு முன்பாக ஒரு தொழுகைக்கான மேடை அமைக்கப்படவேண்டும் என்றும் அவ்விடத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
தந்தையின் கட்டளை: இறக்கும் தறுவாயில் இருந்த பாபர் தன் மகன் ஹுமாயூனை அழைத்து, ‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே, நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக்கொள்” என்றார். “நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பான எண்ணங்கள் போன்றவை பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லாப் பிரிவினர்களும் பின்பற்றுகிற மதசம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்துப் பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.
நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒருபோதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால், மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தியுணர்வும் நிலைபெறும்” என்று கூறினார். தந்தை சொன்னதைக் கடைசி வரை கடைபிடித்தார் ஹுமாயூன்.
‘பாபர் நாமா’ என்கிற சுயசரிதைப் புத்தகம் டெல்லி அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பாபருக்கு மொத்தம் ஏழு மனைவியர். இவர்களுக்கு மொத்தம் 17 குழந்தைகள். அவற்றில் 8 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. பாபரின் அன்பைப் பெற்ற மாஹிம் பேகம் என்கிற மனைவிக்குப் பிறந்தவர்தான் ஹுமாயூன்.
> முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: அரியணையில் அமர்ந்த சிறுவன் - பாபர் | கல்லறைக் கதைகள் 14
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT