Last Updated : 22 Nov, 2024 11:49 AM

 

Published : 22 Nov 2024 11:49 AM
Last Updated : 22 Nov 2024 11:49 AM

வாழ்க்கையைச் சுவாரசியமாக்கும் ஷோஷின் விதி | சக்ஸஸ் ஃபார்முலா - 27

ஐந்து ஆண்டுகளாகக் கணினித் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் சச்சுவுக்கு ஓர் எண்ணம்.

“நஸீ, வரவர செய்ற வேலைல ஒரு சுவாரசியம் இல்லாம, ஆட்டோ மோட்ல நடப்பது போல் ஒரு ஃபீல்.”

“அது சரி, இப்படியே போனா கொஞ்ச நாள்ல வாழ்க்கையே போர் அடிக்குதுனு சொல்லுவ போல.”

”கொஞ்ச நாள் என்ன, இப்பவே அதற்கான அறிகுறி எல்லாம் தெரியுது” என்று சலித்துக் கொண்டார் சச்சு.

“இதற்கு ஒரு கைவைத்தியம் இருக்கு, ஆனால் பாட்டி வைத்தியம் இல்ல. ஜென் வைத்தியம்” என்றதும் ஆர்வமானார் சச்சு.

நம்மில் பலர் நான் சொல்லப் போகும் கதையைக் கேட்டிருப்பீர்கள். இருந்தாலும் இந்த இடத்தில் அதை ஞாபகப் படுத்துவது சரியாக இருக்கும். ஒரு கோப்பையில் பாதி அளவு காபி இருக்கிறது. ஆனால் எனக்குத் தர்ப்பூசணி ஜூஸ் குடிக்க வேண்டும். அதே கோப்பையைத்தான் உபயோகிக்க வேண்டும். அப்படியென்றால், மீதி இருக்கும் காபியைக் குடித்து கோப்பையைக் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆறிவிட்ட காபியில் சுவை ஒன்றும் இருக்காது என்று கொட்டிவிட்டு, அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.

இதை எதையும் செய்யாமல் பாதி காபி இருந்த கோப்பையில் மேலும் ஒரு கோப்பை அளவு தர்ப்பூசணி ஜூஸை ஊற்றினால் என்ன ஆகும்? அது குடிப்பதற்கு லாயக்கற்றுப் போகும். நம்மில் பலர் பழைய ஏதோ ஒன்றின் மிச்சத்தை வைத்துக் கொண்டுதான் புதிய விஷயங்களை, செயல்களை அணுகுகிறோம்.

ஒன்று, என் வயதுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம். அல்லது எனக்குத் தெரியாத விஷயமா என்கிற அகம்பாவம். இவை புதிதாக எதையும் வாழ்க்கையில் கற்க விடாது. இந்தப் போக்கில் தனி மனிதர்கள் மட்டுமல்ல, பெரிய பெரிய நிறுவனங்களும் வீழ்ந்து போயுள்ளன. உதாரணத்திற்கு நோக்கியா, மொட்டரோலா என்று பட்டியல் நீளும்.

அதற்குச் சுலபமான தீர்வு ‘ஷோஷின்.’ ஜென் தரும் ‘ஷோஷின்’ விதியைப் பின்பற்றினால் வாழ்க்கையில் சுவாரசியம்கூடும். 'ஷோஷின்' என்பது ’புது மாணவரின் மனநிலை’ அல்லது ’ஆரம்ப மனம்’ என்று பொருள். இது வெறும் அறியாமை அல்ல, மாறாக, எல்லாவற்றையும் புதிதாக, ஆர்வத்துடன், திறந்த மனதுடன் அணுகும் ஒரு மேம்பட்ட மனநிலை என்கிறார்கள் ஜென்வாசிகள். இதனால் புதிதாகக் கற்க மனம் எப்போதும் தயாராக இருக்கும்.

ஔவை பாட்டி ஷோஷின் விதியை ஒரு பாடலில் சொல்லி வைத்திருக்கிறார். அதன் பொருள்,
’கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலை மகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். சும்மா நான் நிறைய கற்றவனா, நீ நிறைய கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள்.’

மாணவ மனநிலையில் இருக்கும் போது நமக்குள் ஓர் ஆர்வம் பிறக்கும். அதை விட்டுவிட்டு, என் அனுபவத்தில் சொல்கிறேன், இப்படிச் செய்தால் அப்படித்தான் நடக்கும் என்று முன் முடிவு செய்வதைத் தவிர்க வேண்டும். புதிதாக யோசனை செய்து சிறப்பான வழிகளைக் கண்டறிய ‘ஷோஷின்’ உதவும்.

அவ்வளவுதானே என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்ளாமல், ‘ஷோஷினைச் செயலில் கொண்டு வாருங்கள். அதற்குப் பத்து வழிகள்:
1. எல்லாம் தெரிந்திருந்தாலும் , புதிதாக என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்கிற ஆர்வம் எப்போதும் இருக்க வேண்டும்.

2. உடன் இருக்கும் அலுவலக நண்பர்களோ, குடும்பத்தாரோ எதையாவது சொன்னால், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிற கணக்கில் பேசாமல் திறந்த மனதுடன் கேட்கப் பழகுங்கள்.

3. எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் , முன் அனுபவத்தை வைத்துக் கொண்டு புதிய பார்வையைக் கொண்டு ஆரம்பியுங்கள்.

4. தெரிந்த விஷயத்துக்கு எதற்குப் புது வழி? தவறாகி விட்டால் ? எதற்கு வம்பு என்று இல்லாமல் தோல்வியை சகஜமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

5. உங்களைச் சுற்றி உள்ள மக்களிடம் ஆர்வம் தரும் விஷயங்களைப் பேசுங்கள்.

6. தேவையற்ற கற்ற பழைய விஷயங்களை நிர்தாட்சண்யமின்றி உங்கள் மனத்திலிருந்து தூக்கி எறியுங்கள்.

7. காலத்துக்கு ஏற்றார் போல், உங்கள் எண்ணங்களை மேம்படுத்தப் புதிய புதிய விஷயங்களைக் கற்கத் தயாராகுங்கள்.

8. லாடம் கட்டிய குதிரை போல் செல்லாமல், காதுகளையும் கண்களையும் திறந்து வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் சுவாரசியம் கூடும்.

9. குழந்தையைப் போல் எந்த விஷயத்திலும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று தேடுங்கள்.
10. எப்போதும் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டே இருங்கள்.

கற்பதை நிறுத்திவிட்டால், நாம் இறந்த காலத்திற்குச் சென்று விடுவோம். அங்கு ஜீவன் இருக்காது. கற்றல் இருக்காது. சிறிது காலத்தில் மனமும் பாழ் ஆகிவிடும் என்பதை நினைவில் வையுங்கள்.

எதையும் ஒரு நாள் செய்தால் பலனில்லை, சோஷினும் அப்படித்தான். அது வாழ்க்கை முறை. சோஷினைத் தொடர்ந்து செய்யும் போது மனம் தானாகப் புதிய வாய்ப்புகளை, வழிகளைக் கண்டறியும்.

(தொடரும்)

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseeema@gmail.com

முந்தைய அத்தியாயம்: இந்தப் பொழுதில் எப்போதும் கவனம் தேவை | சக்ஸஸ் ஃபார்முலா - 26

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x