Published : 23 Oct 2024 05:51 PM
Last Updated : 23 Oct 2024 05:51 PM
ஆண்டுதோறும் அக்டோபர் 22ஆம் தேதி ‘சர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு விழிப்புணர்வு’ நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இத்தினத்தையொட்டி ‘ரேடியோ மிர்ச்சி’ சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை பேச்சுத்திறன் குறைபாடுடையவர்கள் ‘ரேடியோ ஜாக்கி’களாகப் பொறுப்பேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
பேச்சுத்திறன் குறைபாடு இருப்பதால் ஒருவரது திறனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை வலியுறுத்தவும், இச்சமூகத்தில் நிலவும் உண்மையான பிரச்சினை பேச்சுத்திறன் குறைபாடு அல்ல, சமூகத்தின் பொறுமையின்மைதான் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்யும் விதமாகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆர்.ஜேக்களாகப் பங்கேற்ற பேச்சுத்திறன் குறைபாடு உடையோர் சமூகத் தடைகளை உடைத்து, பேச்சுத் தடுமாற்றம் பற்றிய மூடக்கருத்துகளை எதிர்த்துச் சவால்விடும் விதமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பேச்சுத்திறன் குறைபாடுடைய ஒளிப்படக் கலைஞர் அல்போன்ஸ், “2014ஆம் ஆண்டில் எனது நிறுவனத்தைத் தொடங்கியபோது விற்பனையை நானே கையாள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. விற்பனையைப் பரவலாக்க நிறைய பேச வேண்டியிருந்தது. இந்தச் செயல்முறை என் நம்பிக்கையை அதிகரித்தது. நாம் கூட்டைவிட்டு வெளியேறும் வரை மட்டுமே பேச்சுத்திறன் குறைபாடு ஒரு பிரச்சனையாக இருக்கும்” என்றார்.
பேச்சுத்திறன் குறைபாடு உடையோர் வேலைக்கான நேர்காணலின்போது நிராகரிப்புகளைச் சந்திப்பது தொடர்கதையாகிவிட்டது. பேச்சுத்திறன் குறைபாடு உடையோர் பேசும்போது நிறைய நேரம் எடுத்துக்கொண்டு பேசினாலும், தன்னம்பிக்கையுடன் இடைவிடாமல் பயிற்சி செய்ய வேண்டும், தாழ்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும். விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் கண்டிப்பாகத் தடைகளைத் தகர்த்து வாழ்க்கையில் உயரலாம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT