Last Updated : 17 Oct, 2024 12:24 PM

 

Published : 17 Oct 2024 12:24 PM
Last Updated : 17 Oct 2024 12:24 PM

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 12: ’செர்ன்’க்குள் ஓர் உலா!

எழுத்தாளர் ஜான் பிரௌன் எழுதிய 'ஏன்ஜல்ஸ் அண்ட் டீமன்ஸ்' புதினத்தை வாசிக்காமல் இருந்திருந்தால் ‘செர்ன்’ (CERN) அமைப்பைப் பார்த்திருக்க வேண்டும் என்கிற துடிப்பு எனக்கு இருந்திருக்காது. அந்த நூலின் தொடக்கத்திலேயே பல பக்கங்களுக்கு இந்த அமைப்பைப் பற்றி விவரித்திருப்பார். எனவே சுவிட்சர்லாந்து சென்ற இரண்டு வாரங்களிலேயே செர்ன் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டோம்.

‘அணுசக்தி ஆராய்ச்சி ஐரோப்பியக் குழு’ என்பதன் சுருக்கம்தான் ‘செர்ன்’. சுவிட்சர்லாந்துக்கும் பிரான்ஸுக்கும் உள்ள எல்லைப் பகுதியில் இது இருக்கிறது. 110 நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இங்குள்ள ஆராய்ச்சிக் கூடங்களில் தங்கள் ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் திறன்பேசி அல்லது கணினியின் வழியே காணொளிகளைப் பார்க்கிறீர்களா? ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்களா? நண்பர்களுக்குத் தகவல் அனுப்புகிறீர்களா? அப்படியானால் செர்னுக்கு நன்றி கூற வேண்டும். 1989ஆம் ஆண்டில் செர்ன் அமைப்பில்தான் உலகின் முதல் ‘வெப் சர்வர்’ கண்டறியப்பட்டது.

டிம் பெர்னர்ஸ் லி என்பவர் ஓர் ஆங்கிலேயக் கணினி விஞ்ஞானி. அவர்தான் இதைக் கண்டறிந்தார். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சித் தன்மைகளை ஒருவருக்கு இன்னொருவர் பகிர்ந்துகொள்ள வசப்படும் என்பதுதான் இந்தக் கண்டுபிடிப்பின் முதன்மையான நோக்கம். பின்னர் அதைப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினார்கள் என்பது வேறு விஷயம்.

‘ஆன்டி மேட்டர்’ (Antimatter) கண்டறியப்பட்டதும் இங்குதான். ‘இறைவனின் துகள்’ எனப்படும் ‘ஹிக்ஸ் போஸன்’ இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஆக இன்று பிரபஞ்சத்தைப் பற்றியும் அணுக்களைப் பற்றியும் நாம் தெரிந்து வைத்திருக்கும் பல விஷயங்கள் செர்ன் ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்தவைதான்.

ஜெனீவாவின் புறநகர்ப் பகுதியாகச் சுமார் 30 நிமிடப் பேருந்து பயணத்தில் செர்னை அடைந்தோம். நாங்கள் சென்றிருந்தபோது. சுற்றுலாப் பயணிகளின் வரவு குறைவு என்றாலும் பல மாணவர்களைப் பள்ளி நிர்வாகங்கள் அழைத்து வந்திருந்தன. சுருளைச் சுற்றி வைத்தது போன்ற அழகிய அமைப்பு ஒன்று செர்ன் வரவேற்பு அறையின் வெளிப்புறம் காணப்படுகிறது. உலோகத்தாலான இதன் மேற்புறத்தில் பிரபல இயற்பியல் விஞ்ஞானிகளின் பெயர்களும் அவர்களின் கண்டுபிடிப்புகளின் பெயர்களும் காணப்படுகின்றன.

இங்கு அனுமதி இலவசம். வழிகாட்டியைக் கூடவே அனுப்புகிறார்கள். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்யலாம். அந்த மொழியில் விளக்கம் அளிக்கப்படும். இந்த வழிகாட்டி பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ இருக்க வாய்ப்பும் அதிகம். ஆனால் இந்த வசதிகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு வழிகாட்டியுடன் பதினைந்து பேர்தான் செல்ல முடியும் (வழிகாட்டி இல்லாமல் உள்ளே செல்ல அனுமதி இல்லை). எனவே இரண்டு மணி நேரம்கூடக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இணையதள முன்பதிவு வசதியும் இங்கு இல்லை. குழுக்களாக வரும் பள்ளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

நாங்கள் பத்து மணிக்குச் சென்றுவிட்டாலும் பன்னிரண்டரை மணிக்குத்தான் எங்கள் பெயர்களைப் பதிவு செய்ய முடிந்தது. அதுவும் எங்கள் மூவரில் இரண்டு பேரோடு பதிவு முடிந்துவிட்டது. எங்கள் மகன் ’நீங்கள் இரண்டு பேர் சென்று வாருங்கள். நான் இந்த நாட்டில்தானே வசிக்கிறேன். பிறகு பார்த்துக் கொள்வேன்’ என்று அனுப்பி வைத்தார்.

(பயணம் தொடரும்)

முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 11: வெள்ளிப்பனி மலை ‘டிட்லிஸ்’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x