Last Updated : 04 Oct, 2024 02:30 PM

 

Published : 04 Oct 2024 02:30 PM
Last Updated : 04 Oct 2024 02:30 PM

விருப்பமும் ஆர்வமும் அவசியம் | சக்ஸஸ் ஃபார்முலா - 20

வாரம் முழுக்க வேலை, வேலை என்று மட்டுமே இருந்த சச்சுவின் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் சின்ன வயது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆர்வமாக இருந்தார்.

“நஸீ, இன்னைக்கு மைலாப்பூர்ல இருக்கும் ஆபிஸ் தோழி வீட்டுக்குப் போகணும். நீயும் வந்தா நல்லா இருக்கும்.”

“என்ன திடீர்னு ப்ளான் சச்சு?”

“அவங்க தாத்தா பெரிய சங்கீத வித்துவானாம். அவரால க்ளாஸ் எடுக்க முடியாது. ஆனா அவர் கிட்ட படிச்ச ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தறதா சொல்லி இருக்கார்.”

“நல்ல விஷயம் சச்சு. நல்ல டீச்சர் கிடைச்சிட்டார்னா பாதிக் கிணறு தாண்டிடலாம். நீ வேணா பார், ஒரு நாள் மேடை ஏறும் உன் ஆசை நிறைவேறும்.”

“அதெப்படி அவ்வளோ ஸ்டாரங்கா சொல்ற?”

"ஆர்வமும் விருப்பமும் ஒரு புள்ளியில் சேர்ந்துவிட்டால் எல்லாம் நடக்கும் சச்சு.”

குழந்தைகளிடம் இருக்கும் ஆர்வத்துக்கும் முதியவர்களிடம் இருக்கும் ஆர்வத்துக்கும் ஆகாசம் பூமிக்கான வித்தியாசம் இருக்கும். அதற்காகக் குழந்தைகளிடம் மட்டும் ஆர்வம் இருக்க வேண்டும் அல்லது இருக்கும் என்று அர்த்தமில்லை. எங்கு ஆர்வம் இருக்கிறதோ அங்கு இயங்குவதற்கான உயிர் சக்தி அதிகமாக இருக்கும். அதுவே ஆர்வமில்லாத இடத்தில் சோர்வும் சோம்பேறித்தனமும் இருக்கும்.

வயதாகிவிட்டது, இனி என்ன செய்ய முடியும் என்று நினைக்கும் போதுதான் சோர்வு வந்துவிடுகிறது. சோர்ந்தால் வாழ்க்கையின் மீது இருக்கும் பற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடுகிறது. ஆனால், குழந்தைகளிடம் ஆர்வம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் ஒரு கியூரியாசிட்டி இருக்கும். அதனால்தான் அவர்களை எதிர்கால நம்பிக்கைகளாகப் பார்க்கிறோம்.

ஏதொன்றிலும் ஆர்வம், ஆசை இரண்டும் முக்கியம். இங்கு நான் சொல்ல வரும் ஆசை பெருந்துன்பத்தை ஏற்படுத்தும் பேராசை அல்ல. உங்கள் இலக்கை நோக்கி உங்களை உந்தும் ஆசை.

வெற்றியை நோக்கிய பயணத்தில் பல காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில் ஆர்வமும் விருப்பமும் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டு பண்புகளும் ஆராய, கற்க, புதுமை செய்ய, விடாமுயற்சியுடன் செயல்பட ஊக்குவிக்கின்றன. குறிப்பிடத்தக்கச் சாதனைகளுக்கும் வழிவகுக்கின்றன. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை.

தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த சுந்தர் வீட்டில் தொலைபேசி கூட இல்லை. ஆனால், தொழில் நுட்பத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் அவரை சென்னை ஐஐடியில் படிக்க வழிவகுத்தது.

பின்னர், அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சுந்தர் கடினமாக உழைத்தார். இது ஒருபுறம் இருந்தாலும் அவர் வளர்த்துக் கொண்ட ஆர்வம் மட்டுமே அவரை புதிய புதிய விஷயங்களைக் கற்க வைத்தது. சரியான சூழலை உருவாக்கியது.

பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது என்று திருப்தி கொள்ளாமல், புதியதாகக் கற்கும் ஆர்வம் அவரை Chrome , Android இயக்க முறைமை போன்ற முக்கியமான திட்டங்களில் ஈடுபடுத்தியது .

எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் உழைப்பு, திட்டமிடல், விடா முயற்சி என்று ஒரு பெரும் பட்டியல் இருக்கும். ஆனால் முதன்மையானது ஆர்வமும் இலக்கை அடைய வேண்டும் என்கிற விருப்பமும் மட்டுமே. இந்த இரண்டு முக்கியப் பண்புகளை வளர்ப்பதற்கான பத்து வழிகளை அறிந்து கொள்வோம்.

1. உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைக் கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவற்றின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆழமாக ஆராயுங்கள். அது புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ள உதவும்.

2. வேகமாக மாறிவரும் உலகில், ஆர்வம், புதிய யோசனைகள், அணுகுமுறைகளைத் திறந்த மனதுடன் பார்க்க வைக்கும்.

3. பிரச்சினை என்று வந்துவிட்டால் மனம் சோர்வடையும். ஆனால், அதிலிருந்து மீண்டு அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க ஆர்வம் இருக்க வேண்டும்.

4. எத்தனை பெரிய இலக்காக இருந்தாலும் ஆர்வம் இருந்தால் அதை முழு மனதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சியாகவும் செய்ய முடியும்.

5. ஆர்வமும் இலக்கை அடையும் விருப்பமும் இருந்தால், செய்யும் செயலில் நீண்ட காலம் கவனம் செலுத்த முடியும்.

6. தங்கள் முயற்சிகளில் ஆர்வமும் உற்சாகமும் கொண்ட நபர்களுடன் இருங்கள். அவர்களின் உற்சாகம் உங்களையும் இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லும்.

7. தடைகள் ஏற்படும் போது, உங்கள் இலக்குகளை அடைவதைக் குறித்துத் தெளிவான விவரங்களுடன் சிந்தியுங்கள். இந்தச் சிந்தனை உங்கள் விருப்பத்தையும் ஊக்கத்தையும் வலுப்படுத்தும்.

8. ஆர்வம் இல்லாவிட்டால் எதுவும் பாதியில் நின்றுவிடும் என்பதை உணர்ந்து, தேவையானவற்றை கற்றுக்கொள்ள ஆர்வத்தோடு செயல்படுங்கள்.

9. ஆர்வம் குறையும் போது, உங்கள் இலக்கைப் பாருங்கள். அதனால் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியை, வெற்றியை அசைபோடுங்கள்.

10. எத்தனை தோல்விகள் வந்தாலும் ஆர்வமும் அதற்குப் பின் இருக்கும் உழைப்பும் உங்களை வெற்றியாளராக்கும் என்று உறுதியாக நம்புங்கள்.

சச்சுவிற்கு இசையில் திறமை இல்லை. ஆனால் ஆர்வம் இருந்தது.கற்றுக் கொள்வார், ஆசை அவரைத் தொடர்ந்து பயிற்சி எடுக்கத் தூண்டும். திறமை மட்டுமல்ல ஆர்வமும் விருப்பமும் எந்தச் செயலிலும் நம்மை வெற்றி பெறச் செய்யும்.

(தொடரும்)

-கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | writernaseeema@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x