Published : 26 Sep 2024 06:06 AM
Last Updated : 26 Sep 2024 06:06 AM
நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர். உலகத் தமிழர்களால் ‘ஏகே’ என்று கொண்டாடப்பட்ட மறைந்த ஆனந்த கண்ணன். ‘நம் கலைகள் நம் சொத்து’ என்பதில் உறுதியாக இருந்தவர். சிங்கப்பூரில் மரபார்ந்த கலைகளை மேடையேற்றி அழகுபார்த்த முன்னத்தி ஏர் இவர்.
இவரை முன்னுதாரணமாகக் கொண்டு, சிங்கப்பூரில் இந்திய மரபுக் கலைகளை அறிமுகப்படுத்தவும் அந்தக் கலைகளைச் சிங்கப்பூர் மக்களுக்குக் கற்றுத்தந்து மரபார்ந்த கலைஞர்களாக்கும் உயர்ந்த நோக்கத் துடனும் ‘ஆனந்தா மரபுக் கலைகள் கூடம்’ (https://www.atam.sg/) என்னும் தன்னார்வ அமைப்பைக் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கினார் ஆனந்த கண்ணனின் தம்பியான கோபி கண்ணன் (Japhire Gopi Kannan).
“மரபுக் கலைகளைப் பாதுகாப்பதும் அவற்றை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதுமே எங்களின் லட்சியம். இதற்கான முன்னோட்டமாக ஆனந்தா மரபுக் கலைகள் கூடம் அமைப்பின் சார்பாக சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30, 31இல் ஆனந்தக் கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடத்தினோம். சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற எஸ்பிளனேடு தியேட்டரில் மரபார்ந்த கலைகளை நிகழ்த்தியது இதுதான் முதல் முறை” என்கிறார் கோபி கண்ணன்.
ஆனந்தா மரபுக் கலைகள் கூடம் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியும் ஆனந்தக் கொண்டாட்டம் விழா ஒருங்கிணைப்பாளருமான சுப்பு அடைக்கலவன் கூறுகையில், “மரபுக் கலைகள் தமிழர்களின், இந்தியர்களின் பண்பாட்டுப் பெருமையை வெளிக்கொணர்பவையாக இருக்கின்றன. இங்குள்ள மக்கள் தங்களின் வேர்களைத் தெரிந்துகொள்வதற்கு, மரபுக் கலைகள் காரணமாக இருக்கின்றன.
தமிழகத்திலிருந்து நாகஸ்வரம், தவில், துடும்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட 20 மரபார்ந்த கலைஞர்கள் வந்திருந்தனர். சிங்கப்பூரில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழகக் கலைகளைத் தவிர, குஜராத்தின் கர்பா நடனம், மகாராஷ்டிரத்தின் லாவணி, அசாமின் பிஹு, தமிழகத்தில் அழிந்துவரும் அரிய கலையான பின்னல் கோலாட்டம் போன்றவற்றையும் நடத்தினோம். பதினெட்டாயிரம் பேர் திரண்டுவந்து இரண்டு நாள் நிகழ்ச்சிகளைப் பார்த்தனர். சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனோடு எப்படி மரபுக் கலைகள் பிணைந்திருக்கின்றன, மரபுக் கலைகள் விவசாயத்தில் எப்படிப் பங்கு வகிக்கின்றன என்பதை மையப்படுத்தியே நிகழ்ச்சிகளை நடத்தினோம். சிங்கப்பூரில் மரபுக் கலைகள் மென்மேலும் தழைக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையும் லட்சியமும்!” என்கிறார் கோபி கண்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT