Last Updated : 19 Sep, 2024 05:02 PM

 

Published : 19 Sep 2024 05:02 PM
Last Updated : 19 Sep 2024 05:02 PM

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 4: பசுக்களின் தேசம்!

'ஃப்ரிபோர்க்' என்கிற கான்ட்டனில் (மாவட்டங்களை 'கான்ட்டன்' என்று அழைக்கிறார்கள்.) அமைந்திருக்கிறது பிரபல சுற்றுலாத் தலமான ‘க்ரூயெர்’ (Gruyer). இந்தப் பகுதியில் உள்ள புற்கள் மிகச் சிறந்த தரம் கொண்டவையாம். ஹெலிகாப்டர்களில் பசுக்களைக் கொண்டுவந்து, இங்கே இறக்கிவிட்டுப் புற்களை மேய வைத்துவிட்டு, பிறகு அழைத்துச் செல்வதும் உண்டு என்று ஒருவர் கூறியது வியப்பை வரவழைத்து.

என் வியப்பைப் புரிந்துகொண்டு, “உண்மைதான். இங்கிருந்து புற்களை ஏற்றுமதி செய்வதும் உண்டு. அந்த அளவுக்கு க்ரூயெர் புற்களுக்கு டிமாண்ட் அதிகம்” என்றார் அவர்.

வேறு எந்த விதத்திலும் வருமானம் இல்லாமல் பசு வளர்ப்பினால் மட்டுமே பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள் உண்டு. பால், மாட்டிறைச்சி, தோல் பொருள்கள் போன்று பல விதங்களில் பசு வருமானத்துக்கு வழிகோலுகிறது. உணவில் சீஸ், தயிர், வெண்ணெய் போன்றவை பெரும்பங்கு வகிப்பதால் இவற்றுக்கான டிமாண்ட் குறைவதே இல்லை. ஒரு பசுவுக்கு ஆண்டுக்கு 5,000 டாலர் என்று குடும்பங்களுக்கு அரசு மானியம் அளிக்கிறது.

பசுவின் கழுத்தில் அணிவிக்கும் மணி அதிக எடை கொண்டதாக இருக்கும். விலையும் அதிகம். கிட்டத்தட்ட 2000 டாலர்கள். என்றாலும் இந்த முதலீடு விவசாயியைப் பெருமை கொள்ளவே செய்கிறது. சுவிட்சர்லாந்தில் 7 லட்சம் பசுக்கள் உள்ளன. அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 87 லட்சம். ஆக 12 பேரில் ஒருவர் பசுவின் உரிமையாளராக இருக்கிறார். சில கிராமங்களில் மக்களின் எண்ணிக்கையைவிடப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வெயில் காலத்தில் பசுமை படர்ந்த ஆல்ப்ஸ் மலைப் பகுதிக்கு அவற்றை அனுப்பி விடுகிறார்கள் (உரிமையாளர்கள் சார்பாக அங்கே குடிசையில் ஒருவர் பசுக்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருப்பார்). பசுக்கள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100 நாள்களுக்கு மலைப்பகுதியில் ஆரோக்கியமான புற்களை மேய்கின்றன.

குளிர்காலம் வந்தவுடன் அவை வீடு திரும்ப வேண்டியதுதான். அவை வீடு திரும்பும் நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள். பசுக்களுக்கு ரிப்பன், பூக்கள் அணிவித்து, மணிகள் கட்டி, இந்த நாளை ’ஆல்பக்ஜுக்’ (alpabzug) என்கிற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

ஒரு பசுவை ‘ஸ்பான்சர்’ செய்தால் நீங்கள் சீஸ் தயாரிப்பில் பங்கு பெறுகிறீர்கள் என்று அர்த்தம். அந்த சீஸில் ஒரு பகுதி உங்களைத் தேடிவரும். க்ரூயெர் அங்குள்ள அரண்மனைக் கோட்டைக்குப் பெயர் போனது. ஆனால் நாங்கள் சென்றது புகழ்பெற்ற ‘லா மெய்சன் டு க்ரூயெர்’ (La Maison du Gruyère). இது ஒரு பிரபல சீஸ் தயாரிப்புத் தொழிற்சாலை. ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. நீண்ட வரலாறு கொண்டது.

அங்கிருக்கும் கண்காட்சி சுவாரசியமானது. தினமும் மூன்று முறை பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஒரு ‘ஹெட்செட்’ தருகிறார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், ஸ்பானிஷ், போலிஷ் போன்ற 13 மொழிகளில் அந்தத் தொழிற்சாலை குறித்த விவரங்கள் விளக்கப்படுகின்றன. நாற்பது நிமிடங்கள் செலவழித்தால் கண்காட்சியைப் பார்த்து முடித்து விடலாம். அது மிகவும் வித்தியாசமாக இருந்தது.

(பயணம் தொடரும்)

முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 3: சைக்கிளில் இந்தியாவுக்கு வந்த ஐரினி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x