Last Updated : 13 Sep, 2024 02:22 PM

 

Published : 13 Sep 2024 02:22 PM
Last Updated : 13 Sep 2024 02:22 PM

முன்னேற்றத்தைத் தடுக்கும் காலம் தாழ்த்துதல் | சக்ஸஸ் ஃபார்முலா - 17

கடந்த ஒரு வாரமாக சச்சு கொண்டாட்டமான மனநிலையில் இருந்தார். வெளியே நண்பர்களோடு போவது, அறையில் இருக்கும் நேரத்தில் நெட்ப்ளிக்ஸில் படம் பார்ப்பது, சமூக வளைதளங்களில் நேரம் போக்குவது என்று எதை எதையோ செய்து கொண்டிருந்தார். இவை அனைத்தையும் செய்தது தவறில்லை. ஆனால், அவர் ப்ராஜக்ட் முடிக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

“இன்னைக்குக் கண்டிப்பா ஆரம்பித்துவிடுவேன் நஸீ” என்பது ஒவ்வொரு நாளும் சொல்லும் மந்திரமாக மாறிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் மிகப் பதற்றமாக இருந்தார்.

“என்ன சச்சு?”

“இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு நஸீ. கண்டிப்பா ப்ராஜக்ட்டை முடிக்க முடியாது. இன்னும் ஒரு வாரம் அவகாசம் கேட்கப் போறேன்” .

நம்மில் எத்தனை பேர், ’நாளைக்கு ஆரம்பித்து விடலாம். இன்னும் இரண்டு நாளில், அடுத்த வாரம்’ என்று ஒரு வேலையைக் காலந்தாழ்த்துவோம்? அநேகமானவர்களிடம் இந்தப் பழக்கம் இருக்கிறது. இதனால் நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம் என்பது மட்டுமல்ல. ஏதோ ஒரு காரணத்தால் அதைச் செய்கிறோம். என்ன நினைத்துச் செய்தாலும் நஷ்டம் நமக்குதான் அல்லவா?

ஒரு காட்டில் பெரிய கொம்புடைய மான் இருந்தது. அதி புத்திசாலி. காட்டு ராஜாவான சிங்கம் ஒரு அறிவிப்பைக் கொடுத்தது.

“இன்னும் ஒரு வாரத்தில் காட்டில் பெரிய விழா நடக்கப் போகிறது. உங்கள் திறமைகளை நீங்கள் காட்டலாம். வெற்றி பெறுபவர்களுக்குச் சன்மானம் உண்டு.”

மானைப் போலக் குரங்கு, முயல், யானை எல்லாம் பயிற்சி செய்ய ஆரம்பித்தன. சிறப்பான நடனம் ஆட வேண்டும் என்று மான் முடிவு செய்தது . ஆனால் , நாளைக்கு ஆரம்பித்துவிடாலம், இப்போ... அப்போ... என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. விளைவு, விழா அன்று ராஜா எதிர்பார்த்தபடி மானால் ஆட முடியவில்லை. அதன் நண்பர்கள் பரிசுகளை வென்றார்கள். காரணம், திறமையை ஒன்றுமில்லாமல் செய்யும் சக்தி காலந்தாழ்த்தலுக்கு இருக்கிறது.

மானும் சச்சுவும் ஒன்றுதான். இந்தச் சின்ன பழக்கம் நம்மை வெற்றி பெறுவதிலிருந்து தொலைதூரத்தில் நிறுத்திவிடுகிறது. சில சுலபமான தீர்க்கமான வழிகளைப் பின்பற்றினால் இதிலிருந்து விடுபடலாம்.

1. காலந்தாழ்த்துதலின் காரணங்களை அடையாளம் காண வேண்டும். சோம்பேறித்தனத்தால் செய்கிறோமா, தோல்வியின் பயமா? காரணம் என்ன என்று தெரிந்து கொண்டால் அதிலிருந்து விடுபடுவது சுலபம். விழிப்புணர்வோடு உங்கள் பழக்கத்தில் உள்ள முறைகளை (patterns) கவனியுங்கள்.

2. உங்கள் இலக்குகளைத் தெளிவாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அடையக்கூடியதாகவும் வரையறுக்கவும். உதாரணமாக, ’நான் இன்று இரண்டு மணி நேரம் என் ஆய்வுக்கட்டுரையில் வேலை செய்வேன்’ என்பது ’நான் என் ஆய்வுக்கட்டுரையை முடிப்பேன்’ என்பதை விடச் சிறந்த குறிக்கோளாகும்.

3. பெரிய பணிகள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம். அவற்றைச் சிறிய, நிர்வகிக்கக்கூடிய பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு பெரிய கட்டுரையை எழுத வேண்டுமெனில், முதலில் தரவுகளைத் தேடி எடுத்தல், பின் வரைவு எழுதுதல், அடுத்துத் திருத்துதல் எனப் பிரித்துக்கொள்ளலாம்.

4. முக்கியத்துவம் மற்றும் அவசரத்தன்மையின் அடிப்படையில் உங்கள் பணிகளை வரிசைப்படுத்துங்கள். முக்கியமான மற்றும் அவசரமான பணிகளை முதலில் செய்யுங்கள்.

5. உங்கள் பணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையை உருவாக்குங்கள். ஒவ்வொரு பணிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

6. ’இரண்டு நிமிட விதி’யைப் பயன்படுத்துங்கள். அதாவது ஏதேனும் ஒரு பணி இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கக்கூடியதாக இருந்தால், அதை உடனடியாகச் செய்து முடியுங்கள். இது சிறிய பணிகள் தேங்கி, பெரிய சுமையாக மாறுவதைத் தடுக்கும்.

7. நீங்கள் வேலை செய்யும் இடத்தை ஒழுங்குபடுத்துங்கள். அது கவனச்சிதறல்களைக் குறைக்க உதவும். உங்கள் மேசையைச் சுத்தமாக வைத்திருங்கள். தேவையற்ற பொருள்களை அகற்றுங்கள். கவனத்தைச் சிதறடிக்கும் சமூக ஊடகங்கள், கைப்பேசி அறிவிப்புகள் போன்றவற்றை முடக்கி வைக்கவும்.

8. ‘போமோடோரோ’ நுட்பம் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். இந்த நுட்பத்தில், 25 நிமிடங்கள் ஒரு பணியில் முழுக் கவனம் செலுத்தி, பின் 5 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்கலாம். காலந்தாழ்த்தும் பழக்கமும் குறையும்.

9. ஆரம்பிக்கும் போதே இப்படி வர வேண்டும் என்று பெரிதாக யோசிக்காமல், முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

10. மற்றவர்கள் உங்களை ஊக்குவிப்பார்கள், முன்னேற்றத்தைக் கொண்டாடுவார்கள் என்று காத்திருக்காமல் சின்ன சின்ன முன்னேற்றங்களைக் நீங்களே கொண்டாடுங்கள்.

காலந்தாழ்த்துதலை வெற்றிகொள்வது என்பது ஒரு பயணம். அது சில நேரம் கடினமாக இருக்கலாம், ஆனால், சாத்தியமானது. உங்கள் முன்னேற்றத்தைக் கவனியுங்கள். உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுங்கள். நீங்கள் தவறினாலும், அது ஒரு தோல்வி அல்ல, அது கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அவ்வளவே.

சச்சு இதைக் கடைபிடித்திருந்தால் ஒரு வாரம் அவகாசம் கேட்க அவசியம் இல்லாமல் போயிருக்கும்.

(தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseema@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x