Published : 21 Jun 2024 01:06 PM
Last Updated : 21 Jun 2024 01:06 PM
நானும் சச்சுவும் உணவகம் சென்றோம். நிறைவாகச் சாப்பிட்டு முடித்து வெளியே கிளம்பும் போது, “எனக்கு ஒரு ஃபலூடா சாப்பிடணும்” என்றார்.
“இப்பதானே சாப்பிட்டோம், அதுக்குள்ள என்ன ஃபலூடா?”
“இந்த உணவகத்துக்கு வந்தா, கடைசியா சாப்பிடும் ஃபலூடாவில்தான் நிறைவே இருக்கு. இங்கே எப்ப வந்தாலும் இப்படித்தான் என் ஃபீஸ்ட்டை முடிப்பேன்” என்று பெருமையாகச் சொல்லிவிட்டு ஆர்டரும் செய்தார் சச்சு. ஆனால் வீட்டுக்கு வரும் வழியிலேயே அவர் வயிறு வேலையைக் காட்ட ஆரம்பித்தது. இப்படித்தான் நம்மில் பலர் தேவையில்லாத பழக்கங்களைத் தூக்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மனிதனை உருவாக்குவதில் அவன் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் அதைக் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல் வாழ்க்கையை நாம் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, எப்பொழுது வேண்டும் என்றாலும் சாப்பிடுவது. தூக்கம் வரும் வரை மொபைல் பார்ப்பது. மனசு சரியில்லையா புகைத்துவிட்டு வருவது, கோபம் வந்தால் கையில் இருக்கும் பொருள்களைத் தூக்கி வீசுவது என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இப்படித் தேவையில்லாத பழக்கங்களை நாம் பத்திரப்படுத்தி வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வரிசையில்தான், நிறைவாகச் சாப்பிட்ட பின்பும் ஃபலூடா சாப்பிட்டால்தான் நிறைவு என்கிற பழக்கம் சச்சுவுக்கு வந்தது. நல்ல பழக்கம் எது,மோசமான பழக்கம் எது என்பதை உணர்ந்துவிட்டாலே பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்.
வெற்றியாளர்கள் பின்பற்றிய பொதுவான பத்துப் பழக்கங்களைப் பற்றி சச்சுவிடம் சொன்னதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். தேவையில்லாத பழக்கங்களிலிருந்து விடுபட, வாழ்க்கையில் உருப்பட நூறு சதவீதம் இது உதவும்.
1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றப் போவதற்கு முதல் படி விடியற்காலையில் எழுவது. அலாரத்தின் தலையில் தட்டாமல், முன்பு விழித்த நேரத்தைவிட அரைமணி நேரத்துக்கு முன்பே எழ வேண்டும்.
2. மொபைல் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டுக் கொள்ளுங்கள்.
3. முதல் இருபது நிமிடங்கள் உடல் பயிற்சிக்கு முக்கியம். இதற்கு எல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கை யார் கையிலோ போகப் போகிறது என்று உணரவும்.
4. அன்றைய நாளுக்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். கண்மூடித்தனமாக நாளைச் செலவழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட இது உதவும். முடிந்தவரை அன்றைய நாளைப் பயனுள்ள வகையில் அமைக்க இது உதவும்.
5. காற்றைவிட அடர்த்தியாக நம்மைச் சுற்றிக் கொண்டிருப்பது கவனச்சிதறல்கள். நம்மை ஏமாற்றி ஏப்பம் விட நம் கண்களும் விரல்களும் காத்துக் கொண்டிருக்கின்றன. வேலை செய்யும் போது, உங்கள் அலைபேசியில் தேவையில்லாத செயலிகளை ஆப் மோடில் போடவும்.
6. எந்த வேலையென்றாலும் அதைச் சின்ன சின்ன செயல்களாக மாற்றிக் கொள்ளுங்கள். மனச் சோர்வு வராமல் பார்த்துக் கொள்ளும்.
7. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அதற்குத் தேவையான காலத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் முடிவில்லாத பயணமாகிவிடும். அப்படியும் முடித்தீர்கள் என்றால் காலம் தாழ்த்தி பயனற்றுப் போகும்.
8. உங்கள் நேரத்தைச் சரியான மக்களோடு செலவிடுகிறீர்களா என்று அவ்வப்போது கேட்டுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களைச் சரியாகத் தேர்வு செய்வதால், சரியான நேரத்தில் உங்களை மீண்டும் சரியான வழிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.
9. தொழில், வேலை மட்டுமே உலகம் என்றிருக்காமல் உங்கள் உடல் நலத்திற்கும் முக்கியம் தரப் பழகுங்கள்.
10. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்கிற பொறுப்புடன் இருப்பது வாழ்க்கையை முழுமை பெற உதவும். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் குறை சொல்லிக் கொண்டே வீணடித்துவிடுவீர்கள்.
இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்ட சச்சு, “வீட்டுக்குப் போனவுடன், தேவையில்லாத ஆணியை முதல் கண்டுபிடித்து ஒரு பட்டியல் போடப் போறேன். அதில் முதலாவதாக வருவது கண்டிப்பாக மொபைலாகத்தான் இருக்கும்” என்று விடைபெற்றார்.
- கட்டுரையாளர், எழுத்தாளர்
> முந்தைய அத்தியாயம்: நீங்களும் சி.இ.ஓ. ஆகலாம்! | சக்ஸஸ் ஃபார்முலா - 4
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT