Last Updated : 27 May, 2024 12:14 PM

1  

Published : 27 May 2024 12:14 PM
Last Updated : 27 May 2024 12:14 PM

எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்! | சக்சஸ் ஃபார்முலா - 2

வீட்டுக்கு வந்த சச்சுவின் முகம் வாடி இருந்தது. எவ்வளவு கேட்டும் மனம்விட்டுப் பேசும் நிலையில் இல்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு, “என்னவோ போ, பாறாங்கல்லைச் சுமக்கிற மாதிரி ஒரு ஃபீல். ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை” என்று சலித்துக் கொண்டாள் சச்சு.

“சச்சு, உன் பாறாங்கல்லைத் தூளாக்கும் வழி என்கிட்ட இருக்கு.”

“நிஜமாவே அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தா, ஊர்ல இருக்கிற எல்லாரும் நிம்மதியா இருப்பாங்களே” என்று முணுமுணுத்தாள்.

“சச்சு, பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்பது சவாலா இருக்கும் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், அப்படி இல்லை. நான் சொல்லப் போவதை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்து பார். இதற்குப் பெயர் ஜர்னலிங்.”

ஜர்னலிங் கிட்டத்தட்ட டைரி எழுதுவது போல்தான். ஆனால், டைரி எழுதுவதைவிடச் சிறந்தது. ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியலாளர் ஜேம்ஸ் டபிள்யூ. பென்னேபேக்கர், ஜர்னலிங் செய்வதால் மனிதர்களிடம் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்திருக்கிறார்.

மன அழுத்தம் குறைந்து உடல் நலமும் சீராகும் என்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும் ஆய்வுகளும் உள்ளன. இவ்வளவு பலன்களைத் தரும் ஜர்னலிங் செய்யத் தேவை, நேரமும் மனமும் மட்டுமே. சுலபமான இந்தப் பத்து வழிமுறைகளைச் செய்தால் போதும்.

பத்து வழிமுறைகள்:

1 தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை எழுதுவதற்கு என்று ஒதுக்கிவிடுங்கள். ஆரம்பத்தில் 10-15 நிமிடங்கள் இருந்தால் போதும். இரவு தூங்கப் போவதற்கு முன் என்றால் மேலும் சிறப்பு.

2. மனதில் இருக்கும் அன்றைய குழப்பங்கள், கோபங்கள், எரிச்சல்கள் என்று அத்தனையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

3. பட்டியலிடப்பட்ட விஷயங்கள் பல, உப்புச்சப்பு இல்லாதவையாக இருக்கும். இல்லையென்றால் அதற்கு என்ன தீர்வு என்று தெரிந்துவிடும்.

4. தொடர்ந்து எழுதிக் கொண்டு வரும்போது, எந்தெந்த விஷயத்திற்கு எப்படி எதிர்வினையாற்றி இருக்கிறோம் என்கிற தெளிவு கிடைத்துவிடும். திருமூலர் சொன்ன, தன்னை அறிதலின் முதல்படி இங்கேதான் ஆரம்பிக்கிறது. இதைத் தெரிந்து கொண்டால் பாதி வேலை முடிந்தது.

5. எழுத வேண்டும் என்று இல்லை, வரைந்துகூட வைக்கலாம்.

6. பிரச்சினைகளை எழுதி முடித்த பின், அன்று நடந்த சந்தோஷங்களை எழுத ஆரம்பியுங்கள். ஒரு சந்தோஷமும் இல்லை என்று நினைக்காமல் யோசித்துப் பாருங்கள். எல்லாம் சேர்ந்ததுதான் அன்றைய தினம் என்பது புரியும். ரணகளமான நாளில் நடந்த அந்தச் சின்ன சின்ன சந்தோஷத்திற்கு மனதார நன்றி செலுத்துங்கள்.

7. இப்படிச் செய்வதால், மனதில் பாறாங்கல்லோ பரலோகமோ ஞாபகத்துக்கு வராது. எண்ணங்கள் சீராகும். எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்.

8. ஒவ்வொரு நாளும் முடியவில்லை என்றாலும் ஒருநாள் விட்டு ஒருநாள், அதுவும் முடியவில்லை என்றால், வாரத்திற்கு மூன்று நாள்களாவது எழுத வேண்டும்.

9. எழுதுவதால் மட்டுமே தீர்வு கிடைக்கும். எல்லாம் நமக்குள்தான் இருக்கிறது என்கிற தெளிவு வரும். புலம்புவது, பொங்குவது எல்லாம் தணிந்து போகும்.

10. ஒரு வாரத்திற்குத் தினமும் செய்கையில், மாற்றத்தை உணரத் தொடங்குவோம். மனம் லேசாகும்.

"கேட்கச் சுலபமாகத்தான் இருக்கு. எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும்னு இருக்கு. கண்டிப்பா ஒரு வாரம் ட்ரை பண்றேன். மனசு லேசானா உனக்குப் ட்ரீட்" என்று சிரித்தாள் சச்சு.

| சக்ஸஸ் ஃபார்முலா நீளும்... |

> முந்தைய அத்தியாயம்: எப்படி பிளான் பண்ண வேண்டும்? | சக்சஸ் ஃபார்முலா - 1

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x