Last Updated : 20 May, 2024 03:50 PM

 

Published : 20 May 2024 03:50 PM
Last Updated : 20 May 2024 03:50 PM

எப்படி பிளான் பண்ண வேண்டும்? | சக்சஸ் ஃபார்முலா - 1

“ஏன் நஸீ, உன்கூடதானே வெயிட் குறைக்கணும் ஆரம்பிச்சேன்?”

“ஆமாம், இப்ப என்ன அதுக்கு?”

“உனக்கு மட்டும் எப்படி வெயிட் குறைந்தது? எப்படித் திட்டம் போட்டாலும் அப்படிப் போட்ட திட்டத்தையேகூட மறந்தே போயிடறேன்.”

சச்சு மட்டுமல்ல, திட்டம் போடுவதில் நம்மில் பலர் கில்லாடிகள். திட்டம் எல்லாம் அதிரடியாக இருக்கும். இந்த ஆண்டு உடல் எடையைக் குறைக்க வேண்டும், பணம் சேமிக்க வேண்டும், வாசிக்க வேண்டும், பயணம் செய்ய வேண்டும்...

“உன் ப்ளான் எல்லாம் சரிதான். ஆனா… அது மட்டும் போதாது.”

“என்ன சொல்றே?”

“அது ஒரு மேலோட்டமான திட்டம். அப்புறமா நான் அதுல நிறைய மாத்தினேன். ஒரு விஷயத்தைச் சரியா எப்படித் திட்டமிடணும் அப்படிங்கிறதுக்காகப் பத்து விஷயங்களை இப்ப உன்கிட்ட சொல்றேன். கேட்க எல்லாம் சுலபமாதான் இருக்கும். ஆனா, செயல்முறைப்படுத்தக் கொஞ்சம் மெனக்கெடல் வேணும்.”

“முதலில் திட்டங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். உதாரணத்துக்கு முதல் முறை பத்து கி.மீ. மாரத்தான் ஓடப் போற அப்படின்னு வைச்சுக்க. அதுல ஓடுறது அப்படிங்கிறது உன்னோட திட்டம். அதை எப்படிச் செயல்படுத்தப் போறோம் அப்படிங்கிறதுக்குச் சில வழிமுறைகளை யோசிச்சு அதன்படி செயல்பட்டாதான் உன்னால இலக்கை நோக்கி நகர முடியும்.”

10 வழிமுறைகள்:

1. பத்து கி.மீ. ஓடப்போகிறோம் என்கிற திட்டத்தைச் சின்ன சின்ன இலக்குகளாகப் பிரித்துக்கொள்ளலாம். முதலில் 3 கிலோ மீட்டர் ஓடுவதற்கு உடல் பழக வேண்டும். எடுத்தவுடன் 10 கி.மீ. ஓடினால் இரண்டு நாளுக்கு மேல் நாம் சோர்ந்துவிடுவோம்.

2. திட்டமிட்ட சின்ன சின்ன செயல்களுக்குக் கால அவகாசம் வைக்க வேண்டும். அதாவது 3 கி.மீ. எத்தனை நாள்களுக்கு ஓட வேண்டும்? எத்தனை நாள்களுக்குள் இந்த இலக்கை அடைய வேண்டும்?

3. ஒரு வாரம் முதல் 20 நாள்கள் வரை வைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, 10 நாளில் இரண்டு அல்லது மூன்று கி.மீ. ஓடவேண்டும்.

4. திட்டம் போட்டால் மட்டும் போதுமா? நாம் அதில் எத்தனை நாள் ஓடாமல் போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கி இருக்கிறோம். அல்லது கவனச் சிதறல் எங்கு நடக்கிறது என்று சுய ஆய்வு செய்ய வேண்டும்.

5. ஆய்வு செய்து தெரிந்துகொண்ட காரணங்களை, இனி நடக்காமல் இருக்கும் வழிகளை யோசித்து அதை எழுதி வைக்க வேண்டும்.

6. 10 கி.மீ. ஓடுவதற்கு எது முதலில் செய்ய வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஓட வேண்டும் என்றால் உடம்பு வற்றிப் போகக் கூடாது. சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைச் சரியாகச் செய்ய வேண்டும். இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்பவர்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியவில்லை என்று அர்த்தம்.

7. போட்ட திட்டம் சரியான பலனைக் கொடுக்கவில்லை என்று எப்பொழுது தோன்றினாலும் அப்பொழுதே செயல் முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். மராத்தான் ஓட வேண்டும் என்றால், எடுத்தவுடன் ஓட ஆரம்பிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் ஓடுவது கஷ்டம். அதற்குப் பதிலாக நடையும் ஓட்டமும் மாறி மாறி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதாவது முதல் 5 நிமிடங்கள் நடையும் அடுத்த 10 நிமிடங்கள் ஓட்டம் என்று வைத்துக் கொள்ளலாம்.

8. தவிர்க முடியாத சில காரணங்கள் வரும் போது ஓரிரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதையே பழக்கப் படுத்திக் கொள்ளக் கூடாது.

9. ஒரு செயலை முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் முன் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொள்ளலாம். மூன்று நாள்களுக்குள் அடுத்த செயலை ஆரம்பிக்க ஆயத்தமாக வேண்டும்.

10. வெற்றிக்கு அடிப்படை ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்வது மட்டுமே. மனம், நேரம், சூழல் எல்லாம் பார்த்துச் செய்யும் எந்தக் காரியமும் முழுமை அடையாது. முடிந்தவரை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யும் பழக்கமும் ஒழுங்கும் கைவசம் ஆக வேண்டும். அதற்கு மனத்திடம் மட்டுமே உதவும். ஒரு வாரம் இடைவெளி என்பது முற்றுப் புள்ளிக்குச் சமம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது அவசியம்.

“ஓ, திட்டமிடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இப்பப் புரியுது ஏன் எடை குறையலைன்னு” என்று சிரித்தார் சச்சு.

“மூணு மாசத்துல சென்னைல மராத்தான் நடக்கப் போகுது. ரெடி ஆகிடு” என்றேன்.

| சக்சஸ் ஃபார்முலா நீளும்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x