Last Updated : 11 Sep, 2017 11:08 AM

 

Published : 11 Sep 2017 11:08 AM
Last Updated : 11 Sep 2017 11:08 AM

சபாஷ் சாணக்கியா: எத்தனை லட்டு தின்ன ஆசை?

ஒரு நாள் சில நண்பர்கள் சேர்ந்து சென்னையில் ஒரு நல்ல உடுப்பி உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம். இதமான ஏசி. ஹாலின் நடுவில் வாசமான சம்பங்கி மாலையுடன் தஞ்சாவூர் பெயிண்டிங்கில் கிருஷ்ணர் படம். ஸ்பெஷலாக என்ன இருக்கு என்று கேட்டு முடிப்பதற்குள் ,சர்வர் மங்களூர் ஐட்டங்கள், பஞ்சாபி ஸ்பெஷாலிட்டி எனத் தலைப்புகளுடனும், உபதலைப்புகளுடனும் நீண்ட பட்டியலிட்டார் !

ஒரு வழியாய் யார் யாருக்கு என்ன வேண்டுமென சொல்லி விட்டோம். ஆனால் நம்ம குமாருக்குத்தான் பெரும் குழப்பம்!

அவர்களது மங்களூர் போண்டாவிற்கும், ரசவடைக்கும் ஈடே இல்லைங்க. உண்மையிலேயே சொத்தை எழுதி வைக்கத் தோணுங்க.எல்லோரும் அவற்றையே வாங்கி ரசித்து, ருசித்துச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தோம். குமாருக்கும் ஏக மகிழ்ச்சி.

பிறகு பொன்னிறத்தில் மொறுமொறு தோசை லாகவமாகச் சுருட்டப்பட்டு, தலை மேல் சிறிய வாழை இலைத் துண்டில் வெண்ணெய் வைத்துக் கொண்டு வந்தது. அதன் சுவையில் நாங்கள் மெய் மறந்திருந்த நேரம் பக்கத்து மேசையில் உட்கார்ந்திருந்தவர்கள் தந்தூர் ரொட்டி, பன்னீர் டிக்கா, பைனாப்பிள் ரைத்தா என ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தனர்.உடனே குமார் பதட்டமாகி விட்டார். தானும் அவற்றையே சாப்பிட வேண்டுமென்று மங்களூர் அணியிலிருந்து பஞ்சாபி அணிக்கு மாறி விட்டார்!

எப்பொழுதும் மற்றவர்கள் சாப்பிடுவதையே கவனித்து கொண்டிருப்பது அவரது பழக்கம். `அது இதை விட நல்லா இருக்குமோ, அதையே ஆர்டர் செய்திருக்கலாமோ’ என அவருக்கு அடிக்கடி சந்தேகம் வந்து விடும். கல்யாண விருந்தில் அடுத்தவர் இலையைக் கவனித்துக் கொண்டே சாப்பிடுபவர்களை நீங்களும் பார்த்து இருப்பீர்களே? குமார் மற்றவர்களைப் பார்த்து மாற்றி மாற்றிக் கேட்டதால் எதையும் நிம்தியாய்ச் சாப்பிடவில்லை! நாங்கள் வீடு திரும்பும் பொழுது பஞ்சாபி உணவு அவ்வளவு நல்லாயில்லையென்றும், தானும் பட்டர் தோசையே சாப்பிட்டிருக்கலாம் என்றும் வருத்தப்பட்டார்!

`தன்னிடம் தற்பொழுது இருப்பதை வைத்துத் திருப்திபடாதவன்,அவனிடம் இல்லாதது கிடைத்து விட்டாலும் திருப்திப்பட மாட்டான் ' என்கிறார் சாக்ரடீஸ் !

சாப்பாட்டில் மட்டுமில்லைங்க. குமார் போன்றவர்கள் மற்ற விஷயங்களிலும் அப்படித்தான். தமக்குக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடையாமல் , கிடைக்காததை எண்ணி எண்ணி வருத்தப் படுவார்கள். நான் வங்கியில் மேலாளராக இருந்த பொழுது என்னிடம் இரு அதிகாரிகள் வேலை பார்த்தனர்.பெயர் சொல்லணுமா?

சரி ரெங்கன் என்றும் குமார் என்றுமே வைத்துக் கொள்ளுங்கள்! இருவரும் ஒரே நாளில் தான் வங்கியில் சேர்ந்திருந்தனர். ஒரே சம்பளம். ஆனால் அவர்களது ஒற்றுமை அத்துடன் முடிந்தது. குணத்தில் இருவரும் இரு துருவங்கள்.ரெங்கன் ஒரு யதார்த்தவாதி.

எங்கும், எதிலும் உள்ள நல்லவைகளைப் பார்ப்பவர், பாராட்டுபவர், பயனடைபவர். குமார் அவருக்கு நேர் எதிர்! எங்கும் குறைகளைப் காண்பவர், எதிலும் எப்பொழுதும் திருப்தி கொள்ளாதவர்! இருவருக்கும் ஒன்றாகவே பதவி உயர்வும் வந்து, மும்பையில் இரு வேறு கிளைகளுக்கு மேலாளர்களாக அனுப்பப்பட்டனர்.

ரெங்கன் மிகவும் மகிழ்ந்தார். தனது உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி என்றார். நிதி என்றாலே மும்பைதான் இந்தியாவின் தலைமையகம். இங்கு புதிய திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

குமாரோ, `இங்கே பல மணி நேரம் மின்சார ரயிலிலேயே கழிந்து விடுகிறது. என்ன ஊர் இது?எல்லோரும் ஏதோ காணாமல் போனதைத் தேடுபவர்கள் போல காலை முதல் ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள்' என சலித்துக் கொண்டார்.

அண்ணே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எல்லாம் நம்ம மனசைப் பொறுத்ததுதான்.நாக்பூர் எங்கே இருக்குன்னு கேட்டால்,டெல்லிக்காரர் தெற்கே என்பார். ஆனால் மதுரைக்காரர் வடக்கே என்பார்!

பில் கேட்ஸிடம் `நீங்கள் தான் முதலிடத்தைப் பிடித்து விட்டீர்களே, அப்புறம் என்ன கவலை?' என்று கேட்டதற்கு, `அது தான் கவலையே, அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளணுமே? ' என்றாராம்!

அமெரிக்க அதிபர் ஒபாமா 55 வயதில் ஓய்வு பெற்றார். டொனால்டு ட்ரம்ப்போ 70 வயதில் தானே ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளார்? மனம் ஒரு நிலையில் நிற்காது.தாவிக் கொண்டே இருக்கும்.அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன கிடைத்தும் பலனில்லை. தாயுமானவர் சொல்லியது போல `ஆசைக்கோர் அளவில்லை' வாழ்வில் மேன்மேலும் உயர, முன்னேற முயற்சி செய்ய வேண்டியது தான். ஆனால் கிடைத்தது போதாதெனவும் சரியில்லையெனவும் வருந்தி விரக்தி அடைவதால் உள்ள நிம்மதியும் போய்விடுமே?

`திருப்திதான் உண்மையான சொத்து' என்றார் பெரும் பணக்காரரான ஆல்பிரட் நோபல்! 'மனக் கட்டுப்பாட்டை விட உயரிய விரதமில்லை; திருப்தியை விஞ்சிய மகிழ்ச்சியில்லை; பேராசையை விடக் கொடிய நோயில்லை; கருணையைப் போன்றதொரு நற்குணமும் இல்லை' எனச் சாணக்கியர் கூறுவது தத்துவம் மட்டுமில்லைங்க! யதார்த்தமும் அதுதானுங்க!

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x