Last Updated : 18 Sep, 2017 11:12 AM

 

Published : 18 Sep 2017 11:12 AM
Last Updated : 18 Sep 2017 11:12 AM

ஆதார், ஆதார், ஆதார்….!

உங்கள் செல்போன் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும், உடனடியாக அருகிலுள்ள செல்போன் விநியோகஸ்தர் அல்லது நிறுவன அலுவலகத்தை அணுகவும் என்ற குறுஞ்செய்தி வராத செல்போனே இருக்க முடியாது. இன்று பிறப்புமுதல் இறப்பு வரை எதற்கெடுத்தாலும் ஆதார் எண் அவசியமாகிவிட்டது.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் நாள் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தினால், நாட்டு மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கருத்துகள் உருவாகின. பின்னர் இதற்காக இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு தொழில்நுட்ப வல்லுநரான நந்தன் நிலகேணி தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

தவிர வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் சரியாக போய் சேரவும் இந்த அடையாள அட்டை பயன்படும் என்றும் கூறினர். இதற்காக ஒவ்வொருவரது கண் கருவிழி மற்றும் கைரேகைப் பதிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் இன்று இந்த நோக்கங்களிலிருந்து எல்லாம் விலகி அனைத்துக்கும் ஆதார் என்கிற நிலைமை வந்துவிட்டது. ஆதார் அடையாள அட்டையை எவற்றுடன் இணைக்கலாம் என்றெல்லாம் அரசு திட்டம் தீட்டுகிறது.

ஏறக்குறைய 8 ஆண்டுகளில் 121 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ஆதார் தொடர்பாக பிரச்சினைகள், சர்ச்சைகள் அதிகரித்தவாறே இருக்கிறது. நாள்தோறும் நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு வழக்கு பதிவாகிக் கொண்டே இருக்கிறது. உரிய முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் அரசிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர் நீதிபதிகள்.

சரியான பயனாளிகளைக் கண்டறிய என்று கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இவ்வளவு சிக்கல்களை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர் பலர். இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 4 முக்கிய காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

முதலாவது, ஆதார் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் ஆதார் அட்டைக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு அம்சங்களை முன்னரே திட்டமிட்டு வடிவமைக்கவில்லை. அனைத்து தகவல்களையும் சேமித்துவைக்க போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளவில்லை. நாட்டு மக்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாமா? எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ள அனுமதிக்கலாம், அவ்விதம் அளிப்பதில் எந்த அளவுக்கு விதி மீறல்கள் இருக்கும் என்பதை இத்திட்டத்தை உருவாக்கிய ஆட்சியாளர்கள் உணரவில்லை. முன்கூட்டியே திட்டமிடவில்லை.

இரண்டாவதாக ஆதார் அடையாள அட்டையை வழங்கிய யுஐடிஏஐ, தனிநபர் விவரங்களை பாதுகாப்பது தொடர்பாக எவ்வித உறுதி மொழியையும் மக்களுக்குத் தரவில்லை. இதனாலேயே இதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

ஆதார் அடையாள அட்டை பெறுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திட்டம் செயல்படுத்துவதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. ஆதார் திட்ட அமலாக்கத்துக்கு முன்பான சோதனை ரீதியிலான செயல்பாட்டில் எழுந்த பிரச்சினைகள்கூட தீர்க்கப்படவில்லை. மேலும் திட்டத்தின் செயல்பாடு எந்த கட்டத்திலுமே மதிப்பீடு செய்யப்படவில்லை. மக்கள் நலத்திட்ட பலன்கள் எந்த அளவுக்கு சென்று சேர்ந்தன என்ற விவரம் மக்களுக்கு தரப்படவேயில்லை. மக்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடி மானிய உதவிகள் என்ற (டிபிடி) செயல்பாடு உரியவர்களைச் சென்றடையவில்லை.

நான்காவதாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் (டிபிடிஎல்) சேர்க்கப்பட்டதால் போலியான பயனாளிகள் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 2015-16-ம் ஆண்டுக்கான டிபிடிஎல் திட்டத்தில் எல்பிஜி மானியம் 25 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளதாக அரசு குறிப்பிட்டது. ஆட்சியாளர்களோ இதனால் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி மிச்சமானதாகக் கூறினர். ஆனால் துல்லியமாக இதை கணக்கிட்டால் இது அனைத்துமே தவறு என்பது புலனாகும். இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்த ஆண்டறிக்கையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் மானிய சுமை 92% அளவுக்குக் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதிலிருந்தே இந்த திட்டத்தினால் அரசின் சுமை குறைந்துள்ளதா அல்லது முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளனவா என்பது புலனாகும்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள் விநியோகத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை பொருளாதார அரசியல் ஆய்வகம் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தது.

மொத்தம் 80 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 66 சதவீத நபர்களின் விரல் ரேகைப் பதிவுகள் ஆதார் விரல் ரேகைப் பதிவுடன் சரியாக பொருந்தவில்லை. இதனால் பயனாளியை அடையாளம் காண்பதில் தவறு ஏற்பட்டது.

ஆதாருடன் இணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் செயல்பாடுகளில் 17 சதவீத ஓய்வூதியர்களின் விரல் ரேகைகள் ஆதாரில் சரிவர பொருந்தவில்லை. இதே சூழல்தான் மத்திய அரசின் மற்றொரு திட்டமான மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திலும் நடந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட உண்மையான பயனாளிகளின் புறக்கணிப்பு விகிதம் மிக அதிகமாகவே இருக்கிறது. ஆனால் யுஐடிஏஐ அமைப்போ ஆதாரில் 1சதவீத அளவுக்குத்தான் குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறது.

தகவல் தொழில்நுட்ப வசதி மற்றும் இணையதள இணைப்பு வசதி அதிகம் உள்ள ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்விலேயே இவ்வளவு குறைகள் உள்ளன.

ஆனால் இந்த மாநிலங்களில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு முறை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டன. இதில் ஏற்பட்ட தவறுகள் அடுத்தடுத்த கட்டங்களில் நிவர்த்தி செய்யப்பட்டு திட்டம் முழுமை பெறும்போது இத்திட்டம் வெற்றிகரமானதாக மாநிலம் முழுவதும் செயல்படத் தொடங்கியது. என்ஆர்இஜி திட்டத்துக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதை இம்முறையில் செயல்படுத்தலாம் என்று பொருளாதார அறிஞர் கார்த்திக் முரளிதரன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் பால் நேஹவ்ஸ் ஆகியோர் தங்களது ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இவ்விதம் செயல்படுத்துவதன் மூலம் பயனாளிகளுக்கான பணம் வழங்குவது எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இம்முறை பின்பற்றப்பட்டதால் பயனாளிகளின் நேரம் மிச்சமானது, குறைகளைக் களைவதற்கான செலவுகளும் குறைந்தன.

ஆனால் ஆதாருடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் இம்மாநிலங்களில் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. இணையதள வசதிகள் சரிவர இல்லை என்பதும் இதற்கு முக்கிய காரணம். ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு இணையதள வசதி தேவையில்லை. ஆனால் ஆதார் இணைப்புக்கு இணையதளம் அவசியமாகும்.

அடுத்ததாக பெரும்பாலும் பயனாளிகளின் விரல் ரேகை ஆதார் பதிவோடு சரிவரப் பொருந்துவதில்லை. அதுவும் தினக்கூலி தொழிலாளிகளின் கை விரல் ரேகை பெரும்பாலும் பொருந்துவதில்லை. இதனால் கைகளில் வாசலின் தடவி ஒரு நாள் காத்திருந்து அதன்பிறகே தங்களது ஊதியத்தைப் பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நாட்டில் டிஜிட்டல் வசதியில் நிலவும் ஏற்ற, இறக்க சூழலில் ஆதார் திட்ட செயல்பாடுகள் மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. ஆதாருடன் இணைந்த மானிய உதவிகள் வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளும் இதுவரை மேம்படுத்தப்படவில்லை. ஆந்திர மாநில ஸ்மார்ட் கார்டு திட்டம் வெற்றியடைந்ததற்கும், இந்தியா முழுவதுமான ஆதார் திட்ட சிக்கலுக்குமான வேறுபாடுகள் இவைதான்.

தனி நபர் விவரங்கள் அனைத்தும் ஆதாரில்பதிவு செய்யப்பட்டுள்ளன. தகவல் திருட்டு அதிகம் நடைபெறும் தற்போதைய சூழலில் ஒருவேளை இத்தகவல்கள் திருடப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? ஆதார் குறித்து குறிப்பிடும்போதெல்லாம் அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு எண் (எஸ்எஸ்என்) பற்றி ஆட்சியாளர்கள் அதிகம் பேசுகின்றனர். ஆனால் எஸ்எஸ்என் தகவல் தொகுப்பில் இந்த அளவுக்கு தனி நபர் ரகசியங்கள் சேகரிக்கப்படவில்லை. ஆனால் அங்கேயே ஆண்டுக்கு நூறு கோடி டாலர் அளவுக்கு தகவல் திருட்டு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தகவல் தொழில் நுட்பத்திலும், தகவல்களைக் காப்பதிலும் முன்னணியில் விளங்கும் அமெரிக்காவிலேயே தகவல் திருட்டு நடைபெறுகிறது என்றால் இந்தியாவின் நிலைமை பற்றி சொல்லத்தேவையில்லை.

ஆதார் குறித்து வலுவான சட்டம் தேவை என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளார். குறைந்தபட்சம் யுஐடிஏஐ குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்போது இந்த விஷயங்கள் ஆராயப்பட்டால் ஆதார் குறித்த சட்டம் முழுமை பெறும். இது தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரும் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். மக்களை உள்ளடக்கிய திட்டத்தை எப்படி செயல்படுத்தக் கூடாது என்பதற்கு ஆதார் மிகச் சிறந்த உதாரணமாகிவிட்டது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x