Last Updated : 25 Sep, 2017 11:07 AM

 

Published : 25 Sep 2017 11:07 AM
Last Updated : 25 Sep 2017 11:07 AM

சபாஷ் சாணக்கியா: கண்ணிருந்தும் குருடனாய்...

25

ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் பயிற்சிக்காகச் சென்றிருந்தேன். இந்தியாவின் வெவ்வேறு வங்கிகளிலிருந்து 15 அதிகாரிகள். நாங்கள் அனைவரும் இங்கிலாந்து அரசின் விருந்தினர்களாக நடத்தப்பட்டோம்.

90 நாட்கள் வித விதமான நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் மிகவும் பயனுள்ள விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. அங்கங்கே ஏகப்பட்ட நல்ல புத்தகங்கள் (Reading materials) கொடுத்திருந்தார்கள். அடிக்கடி மான்செஸ்டரிலிருந்து பணி நிமித்தமாக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. எனவே எல்லோரும் துணிமணிகள்,சாக்லெட், பாதாம் என நிறையப் பொருட்களும் வாங்கியிருந்தோம். ஒருவர் கார் சீட்டுக் கவர் கூட வாங்கியிருந்தார்!

பயிற்சி முடிந்து இந்தியா திரும்ப மூட்டை கட்டிய போது மலைத்து விட்டோம். எல்லோரிடமும் எக்கச்சக்க சாமான்கள். விமானத்தில் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமானவைகளுக்குப் பணம் கட்ட வேண்டுமென்றதும் தயக்கம். சில பொருட்களின் விலையை விட அதிகமாக விமானக்கட்டணம்! இரண்டே வழிகள். பணம் கட்டணும். அல்லது பொருளை விட்டுச் செல்லணும்!

நான் சொல்வதை நம்புங்கள். எங்களில் ஒருவர் பயிற்சியில் கொடுத்த புத்தகங்களை அங்கேயே போட்டு விட்டார். அதுவும் குப்பைத் தொட்டியில்!

ஐயா, சாணக்கியர் சொல்வதைக் கேளுங்கள். `குருடனுக்குக் கண்ணாடியால் பலனில்லை; அதே போல மூடர்களுக்கு புத்தகங்களால் பயனில்லை ! '

கண்ணாடியைப் பார்த்து நாம் நமது உடையை, முகத்தை, முடியைச் சரி செய்து கொள்ளலாம். இதனால் நமது வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம். சரி செய்து, உயர்த்திக் கொள்ளலாம்! ஒரு வகையில் புத்தகங்களும் அப்படித்தானே? அவை நமது உள் மனதை மாற்றிக் கொள்ள உதவுபவை. நமது தன்னம்பிக்கையை, சொல் மற்றும் செயல்திறமைகளை உயர்த்திக் கொள்ள உதவுபவை.

`ஆயிரம் புத்தகங்களைப் படித்து விடுங்கள்,உங்கள் வார்த்தைகள் அருவியாய்க் கொட்டி விடும்' என்கிறார் நாவலாசிரியை லிஸா ஸீ! படிக்க படிக்கத் தானே சொல்லாற்றல் வளரும்? பேச்சிலும், எழுத்திலும் மெருகேறும்? ஒரு நல்ல எழுத்தாளன் ஆவதற்கு முதல் படி நல்ல வாசகனாக இருப்பது என்பார்கள்!

அண்ணே, `படிச்சவன் இப்படி நடந்து கொள்ளலாமா? ' என்று பலர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். படித்தால் அறிவும் பண்பாடும் வளரும்,வளர வேண்டும்! அதனால் தானே வள்ளுவரும் கற்பவை கற்றபின், அதற்குத் தகுந்தபடி நிற்க என்றார்!

பள்ளியிலும், கல்லூரியிலும் படிப்பது ஒரு வகையில் கட்டாயத்திற்காக. ஆனால் அதற்குப் பிறகு படிப்பதை நிறுத்தி விடலாமா? வேகமாக மாறிவரும் உலகில் புதிது புதிதான அறிவும்,ஆற்றலும் அல்லவா தேவைப்படும்?

அப்புறம், தொடர்ந்து படிக்காமல் விட்டு விட்டால் எப்படி? படிப்பது என்பது மூளைக்கான உடற்பயிற்சி என்பார்கள்.எனவே அதை எந்த வயதிலும் நிறுத்தக் கூடாதில்லையா? ஆன்மிகமோ, இலக்கியமோ, படிப்பது மன நிம்மதிக்கோ, பொழுது போக்கிற்கோ, ஏதாவது நல்லதைப் படிப்பதே நல்லது என்கிறார்கள்!

அதனால் தானோ என்னவோ புத்தகக் கண்காட்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது!

புத்தகங்களைப் பரிசளிக்கும் கலா சாரமும் அதிகரித்து வருகிறது!

கோவையில் ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி. உங்களுக்குப் பரிச் சியமான சென்னை சில்க்ஸின் குடும்ப விழாதான். வந்தவர்களுக்கு தேங்காய்ப் பை கொடுப்பதற்குப் பதிலாக ஒரு புதுமை செய்திருந்தார்கள். ஆமாம், புத்தகம் கொடுத்தார்கள்.

அதிலும் இன்னுமொரு புதுமை! கண்டுபிடிக்க முடியலையா? ஒரு குட்டிப் புத்தகக் கண்காட்சியே வைத்து விட்டார்கள். அதில் கவிதைகள், சிறுகதைகள், சுயசரிதம், சுயமுன்னேற்றம் என விதவிதமான நூல்கள்! அவரவர்க்குப் பிடித்ததை எடுத்துச் செல்லலாம் !

சரி தானேங்க. எல்லோருக்கும் ரசனை ஒரே மாதிரி இருக்காதே!

கல்யாணத்தைச் செய்பவருக்குப் புதுக்கவிதைகள் பிடிக்குமென்பதற் காக அதையே வருபவர்களிடம் திணிக்கலாமா? பிடிக்காத புத்தகத்தை வாங்குபவர்கள் அதைப் படிக்க மாட்டார்களே?

பிடித்த புத்தகத்தைப் படிப்பதில் இருக்கும் ஆனந்தமே தனிதான்!

‘புத்தகம் எனும் பரிசினை மட்டுமே மீண்டும் மீண்டும் திறந்து பார்க்க முடியும் ' என்பார் காரிசன் கியோல்லர் எனும் அமெரிக்க எழுத்தாளர்!

ஐயா, புத்தகங்கள் அபார சக்தி கொண்டவை.

சிலர் சில புத்தகங்களைப் படிக்கப் போய் தான் இன்று இவ்வுலகம் இப்படி இருக்கிறது!

1904ல் ஜான் ரஸ்கின் எழுதிய `Unto his last ' புத்தகத்தைப் படித்த பின் தன் கண்ணோட்டமும் வாழ்க்கையும் மாறிவிட்டதாக காந்தியடிகள் சொல்லியிருக்கிறார்.

`புத்தகங்கள் மிக ஆபத்தானவை என்று அறிவிக்க வேண்டும். சில சிறந்த புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையையே கூட மாற்றி விடக் கூடும்! ' என்கிறார்.

பரிசுப் புத்தகங்களுக்கும், வாழ்த்து அட்டைகளுக்கும் பெயர் பெற்ற ஹெலன் எக்ஸ்லே !

ஆனால், ஒரு புத்தகத்தின் தாக்கம் என்பது அந்தப் புத்தகத்தைப் பொறுத் தது மட்டுமில்லையே? அந்தப் புத்தகத்தைப் படிப்பவரையும் பொறுத்தது அல்லவா?

அதைத் தானே சாணக்கியரும் சொல்லி இருக்கிறார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x