Published : 12 Dec 2016 11:38 AM Last Updated : 12 Dec 2016 11:38 AM
பண மதிப்பு நீக்கம் 30 நாட்கள் - ஒரு பார்வை
பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையோடு (08-12-2016) ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும் நிலைமை இன்னும் சீரடையவில்லை. பணத்தை எடுப்பதற்கான சிரமங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தினந்தோறும் புதிய அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதனாலும் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து தற்போது வரை மத்திய அரசு என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை எடுத்துள்ளது என்பது பற்றிய சில தகவல்கள்...
>> நவம்பர் 8 - 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். மேலும் புதுவடிவத்தில் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதுபோல், கறுப்பு பணத்துக்கு எதிராகவும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும் என்று கூறினார். இந்த அறிவிப்பில் நவம்பர் 24-ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து தினசரி 4,000 ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும், டிசம்பர் 30-ம் தேதி வரை டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
>> நவம்பர் 13 - வங்கி கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுத்துகொள்ளலாம். ஏடிஎம் மூலம் தினசரி ரூ.2,500 வரை எடுத்துக்கொள்ளலாம். பழைய நோட்டுகளை தினசரி ரூ.4,500 வரை மாற்றிக் கொள்ளலாம். வங்கிகளில் பணம் மாற்றும் முதியோருக்கு தனிவரிசை அமைக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்தது.
>> நவம்பர் 17 - வங்கிகளில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4,500 ரூபாய் மாற்றலாம் என்பது 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. பயிர் கடனுக்காக விவசாயிகள் வங்கிகளில் வாரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம் என்றும், பயிர் காப்பீட்டுக்கான தவணைத் தொகையைச் செலுத்த மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
>> நவம்பர் 24 - பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வது நவம்பர் 24-ம் தேதியோடு நிறுத்தப்பட்டது.
200% அபராதம்
டிசம்பர் 30-ம் தேதி வரையிலான 50 நாட்களில் வங்கி கணக்கில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் விவரங்கள் பெறப்படும். பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால், வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும். பிறகு பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் 200 சதவீதம் வரி விதிக்கப்படாது அதற்கு பதிலாக குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிக்கப்படும். இதுதவிர மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
விதிவிலக்குகள்
>> நவம்பர் 8 - பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், மருந்தகங்கள், விமான நிலையங்கள், பால் விநியோக மையம் போன்ற இடங்களில் நவம்பர் 11-ம் தேதி வரை 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
>> நவம்பர் 10 - மின்சாரக் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் போன்றவை பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
>> நவம்பர் 11 - நீதிமன்றங்களில் செலுத்த வேண்டிய தொகைகளுக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
>> நவம்பர் 18 - டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிலையங்களில் 2,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளமுடியும் என்று மத்திய அரசு அறிவித்தது.
>> நவம்பர் 24 - 1,000 ரூபாய் நோட்டை தவிர்த்து 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் இதுபோன்ற இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
# பணமதிப்பு நீக்கம் தொடர்பாக இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி 50க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
# நவம்பர் 24-ம் தேதி முதல் பிக் பஜாரில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி 2,000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
# கறுப்புப் பணத்தை வைத்திருந்தவர்கள் மீது இந்தியா முழுவதும் இதுவரை 400 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
# ரூ.2000 வரையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் சேவை வரி கிடையாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
# நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பிறகு நவம்பர் 14 , 18 மற்றும் 24 என அடுத்தடுத்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. பிறகு டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
# நவம்பர் 10 முதல் 27 தேதி வரையான காலத்தில் வங்கிகளில் பரிவர்த்தனையான தொகை ரூ. 8,44,982 கோடி
# பணம் மாற்றியதன் மூலமாக வந்துள்ள தொகை ரூ. 33,948 கோடி
# டெபாசிட் மூலமாக வந்துள்ள தொகை ரூ. 8,11,033 கோடி
# வங்கியிலிருந்து மக்களால் எடுக்கப்பட்டுள்ள தொகை ரூ. 2,16,617 கோடி
# இதுவரை கணக்கில் காட்டப்படாத பணத்தை விசாரணை மூலம் அதிகாரிகள் கைப்பற்றியுள்ள தொகை ரூ. 2,000 கோடி
WRITE A COMMENT