Last Updated : 05 Dec, 2016 11:32 AM

 

Published : 05 Dec 2016 11:32 AM
Last Updated : 05 Dec 2016 11:32 AM

குறள் இனிது: நம்பகத்தன்மை... அதுதானேங்க எல்லாம்..!

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு

(குறள்: 513)

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 8-ம் தேதியே வந்து விட்டாலும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் பதவி ஏற்கப் போவதென்னவோ ஜனவரி 20-ம் தேதி தான்!

இடையில் உள்ள 70 நாட்களில் அவரது மாற்றங்களை மேற்கொள்வதற்கான குழு (transition team) முக்கிய பதவிகளுக்கான ஆட்க ளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது! டிரம்ப் தனி ஒருவராக அமெரிக்காவை ஆள முடியாதில்லையா? நிர்வாகத்தில் மட்டுமில்லைங்க, வர்த்தகத்தி லும், ஏன் எந்த அலுவலகத்திலும் அப்படித்தானே!

‘மேலாண்மையின் முதல் படியே பணி ஒப்படைப்பு (delegation) தான். எல்லா வேலைகளையும் நானே செய்து விடுவேன் என எண்ணவோ முயலவோ வேண்டாம்...ஏனெனில் அது யாராலும் முடியாது' என்று தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆந்தியா டர்னர் சொல்வது வீட்டிற்கு மட்டுமா பொருந்தும்?

எனவே வேலைக்கேற்ற ஆட்களைப் பார்த்துப் பார்த்துப் பொறுப்புகளைக் கொடுப்பதுதானுங்க சரி, ஒரே வழி! ‘எல்லா வேலைகளுக்கும் பொருத்தமான ஆட்களைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது எல்லா வேலைகளையும் நானே செய்வதைக் காட்டிலும் கடினமானது' எனச் சொன்னது யார் தெரியுமா? அல்டன் ப்ரௌன் எனும் நட்சத்திர சமையல்காரர்!

உண்மை தானே, பலவிதப் பணியாளர்கள் இருக்கிற அலுவலகத்தில் சரியான ஆட்களைக் கண்டுபிடிக்கணும்ல? ஐயா,அமெரிக்க அதிபர் டிரம்ப் மந்திரிசபை அமைப்பதாக இருந்தாலும் சரி, நம்ம மன்னார்குடி மாடசாமி கல்யாண வேலையை உறவினர்களிடம் பிரித்துக் கொடுப்பதாக இருந்தாலும், அணுகுமுறை ஒன்று தானுங்களே! முதல்ல, முக்கியப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அவர் உங்களிடம் நேசமோ பாசமோ கொண்டவராக இருக்கணும். அட, பின்ன என்னங்க, உங்களை எதிரியாகவோ போட்டியாளராகவோ நினைக்கிறவர்கிட்ட பொறுப்பைக் கொடுத்தால் காத்திருந்து, காலம் பார்த்து கவிழ்த்திடுவாரில்லையா?

அடுத்தது உங்களுக்குத் தெரியாததா என்ன? கொடுத்த வேலையில அந்நபருக்கு ஞானம் இருக்கணும்! அதாங்க அந்த வேலையைப் பற்றிய விபரங்கள் தெரிஞ்சிருக்கணும். மூன்றாவது முக்கியமான தகுதி தெளிவான சிந்தனை தானே? தலைவனின் நோக்கம், கொள்கை, எதிர்பார்ப்பு மற்றும் அடைய வேண்டிய இலக்கு, அதற்கான பாதை இதில் எதிலும் குழப்பமில்லாதவன் தானே கொடுத்த பணியைச் செவ்வனே செயலாக்க முடியும்!

அதுமட்டுமின்றி பணிபுரியுமிடத்தில் அவ்வப்பொழுது ஆங்காங்கே எழும் பிரச்சினைகளுக்குத் தலைவனைத் தொந்தரவு செய்யாமல் தானே முடிவெடுக்கும் முதிர்ச்சியும் முனைப்பும் வேண்டுமில்லையா? அண்ணே, இந்த மூன்று தகுதிகள் மட்டும் போதுமா? ‘என்னடா நம்ம திறமையினால் தானே இந்தத் தலைவனுக்கு நல்ல பெயர், வருமானம் எல்லாம். நாமும் கொஞ்சம் சாப்பிட்டால் தப்பில்லை' என எண்ணிச் சுரண்டாத நேர்மையாளனாகவும் இருக்கணுமில்லையா?

இல்லாவிட்டால் இந்த சின்னச்சின்ன ஆசைகளே பேராசை ஆகி முதலுக்கே மோசமாகிவிடும்! அன்பும், பணிசார்ந்த அறிவும், செயல்பாட்டில் தெளிவும், ஆசை கொள்ளா இயல்பும் உடையவனையே பணியில் அமர்த்த வேண்டுமென்கிறார் வள்ளுவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x