Published : 12 Dec 2016 11:37 AM
Last Updated : 12 Dec 2016 11:37 AM

இந்தியாவில் கார் தயாரிக்க சீன நிறுவனம் திட்டம்

சீனாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான எஸ்ஏஐசி இந்தியாவில் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியத் தேவைகளுக்கேற்ப கார்களைத் தயாரித்து இந்திய சந்தையில் காலூன்ற திட்டமிட்டுள்ளது. ஷாங்காய் ஆட்டோமோடிவ் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் என்ற இந்நிறுவனம் இப்போது எஸ்ஏஐசி என்றழைக்கப்படுகிறது. இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீட்டில் ஆலை அமைக்க தீர்மானித்துள்ளது. இந்தியாவிலிருந்து பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. +



சீன நிறுவனம் தங்கள் மாநிலத்தில் ஆலை அமைக்க தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட 3 மாநிலங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. தங்கள் மாநிலத்தில் ஆலை அமைத்தால் என்னென்ன சலுகைகள் அளிக்கப்படும் என்பதை இம்மாநிலங்கள் பட்டியலிட்டுள்ளன. மூன்று மாநிலங்களில் ஏதேனும் ஒன்றை சீன நிறுவனம் இறுதி செய்யும் எனத் தெரிகிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை வாங்க திட்டம்

இந்தியாவில் காலூன்ற திட்டமிட்ட உடனேயே நசிந்து போன ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய ஆலையை வாங்க எஸ்ஏஐசி ஆர்வம் காட்டியது. குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் இந்த ஆலை உள்ளது. தற்போது இங்குதான் ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே டவேரா தயாரிக்கப்படுகிறது. பின்னர் அந்த யோசனையை எஸ்ஏஐசி கைவிட்டது.

மேலும் நொடித்து போன ஆலையை வாங்கினால் மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள் கிடைக்காது. இதைக் கருத்தில் கொண்டு அந்த யோசனையை எஸ்ஏஐசி கைவிட்டது. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸின் இந்தியப் பிரிவில் குறிப்பிட்ட அளவிலான முதலீடுகளை எஸ்ஏஐசி செய்துள்ளது.

18 மாதத்தில் புதிய ஆலை

இந்தியாவில் கிரீன் பீல்டு ஆலை தொடங்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும். இதனால் புதிய ஆலை 2018-ல் செயல்பாட்டுக்கு வரும் என்று நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்ஏஐசி நிறுவனம் மாக்ஸஸ், எம்ஜி, ரோவே, யூஜின் என்ற பெயர்களில் கார்களைத் தயாரிக்கிறது. இது தவிர ஜெனரல் மோட்டார்ஸ், இவெகோ, ஸ்கோடா ஆட்டோ. ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தமும் செய்துள்ளது.

2010-ம் ஆண்டிலேயே இந்நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக கார்களைத் தயாரித்து அளிக்க எஸ்ஏஐசி முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளுக்கென்று தயாரித்த மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய எஸ்ஏஐசி விரும்பவில்லை. மேலும் இந்தியாவில் ஆலை அமைப்பதன் மூலம் உற்பத்தி செலவு குறையும், உள்நாட்டில் ஆலை இருப்பதால் மேலும் உறுதியுடன் சந்தையில் ஸ்திரமாக போட்டியிட முடியும் என எஸ்ஏஐசி நம்புகிறது.

இந்திய சந்தையை மையமாகக் கொண்ட தயாரிப்புகளே இங்கு வெற்றி பெற்றுள்ளன என்பதை எஸ்ஏஐசி நன்கு உணர்ந்துள்ளது. வெளிநாட்டில் வடிவமைத்த ஹோண்டா பிரையோ தோல்வியடைந்தது. அதே சமயம் ஹூண்டாயின் ஐ10 வெற்றி பெற்றதற்கு அது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது என்பதையும் நிறுவன அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். தங்கள் தயாரிப்புகள் குறித்தும், உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற் கான நிறுவனங்களைக் கண்டறிவதற் கும் கேபிஎம்ஜி மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனங்களை ஆலோசகர்களாக அமர்த்தியுள்ளது.

இந்திய கார் சந்தையில் பெரும்பான்மையான பங்கை தன் வசம் வைத்துள்ளது மாருதி சுஸுகி. இது தவிர ஃபோக்ஸ்வேகன், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், பியட் ஆகிய நிறுவனத் தயாரிப்புகளும் உள்ளன. உள்நாட்டு நிறுவனங்களான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா உள்ளிட்ட நிறுவனத் தயாரிப்புகளின் சவாலையும் சந்திக்க வேண்டும். சீன தயாரிப்புகள் என்றாலே விலை குறைவாக இருக்கும் ஆனால் நீடித்து உழைக்காது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.

பொருளின் உறுதித் தன்மை, விற்பனைக்குப் பிந்தைய சிறப்பான சேவை உள்ளிட்டவற்றின் மூலம்தான் இந்தியச் சந்தையில் நிலைத்திருக்க முடியும். அதை எஸ்ஏஐசி உணர்ந்தால் மட்டுமே காலூன்ற முடியும். இந்திய சாலைகளுக்கு ஏற்ப இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக கார்களைத் தயாரித்து அளிக்க எஸ்ஏஐசி முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளுக்கென்று தயாரித்த மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய எஸ்ஏஐசி விரும்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x