Published : 05 Dec 2016 11:16 AM
Last Updated : 05 Dec 2016 11:16 AM

தள்ளுபடியை அள்ளித்தரும் கார் நிறுவனங்கள்!

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அனைத்துத் துறைகளி லும் தேக்க நிலைதான் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெகு மந்தமாக உள்ளது. சொகுசு கார் விற்பனை முற்றிலுமாக மந்தமாகி விட்டது. நிலைமையைப் போக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளுபடியை அதிகம் அளித்து வாடிக்கையாளரைக் கவர திட்டமிட்டுள்ளன.

கார் தயாரிப்பு ஆலைகளிலும், விற்பனையகங்களிலும் தேங்கி நிற்கும் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விற்பனையகங்கள் தங்களிடம் உள்ள கார்கள் விற்பனையானால்தான் அடுத்து ஆர்டர் அளிப்பர், இதனால் அதிக தள்ளுபடியை அளிக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

பொதுவாக ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின்போது அதிக தள்ளுபடி அளிக்கப்படுவது வழக்கம். அதைவிட தற்போது 25 சதவீதம் கூடுதல் தள்ளுபடி தர முடி வெடுத்துள்ளன.

தவிர டீசல் கார்கள் மற்றும் அதிக பிரபலமாகாத மாடல் கார்களுக்கு அதிக அளவில் தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்துள்ளன. அதேசமயம் புதிதாக அறிமுகமாகி பிரபலமாக விளங்கும் மாடல் கார்களுக்கு குறைந்த அளவில் தள்ளுபடி அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பணப் புழக்கம் குறைவாக உள்ள இந்த சூழலில் கார் தயாரிப்பு நிறு வனங்கள் அதிக தள்ளுபடி தரும் என எதிர்பார்ப்பதாக ஹெச்டிஎப்சி வங்கியின் வாகனக் கடன் பிரிவு தலைவர் அசோக் கண்ணா தெரிவித்துள்ளார்.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது தயாரிப்புகள் அனைத்துக்கும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி அளிப்பதாக அறிவித் துள்ளது. இந்த தள்ளுபடி ஒருமாத காலம் அளிக்கப்படும் என அறிவித்துள் ளது. இந்த தள்ளுபடி சலுகை ஆல்டோ 800, ஆல்டோ கே10, செலெரியோ மற்றும் வேகன் ஆர் மாடல்களுக்குப் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

டொயோடா நிறுவனம் தனது டிசம்பர் தள்ளுபடி சீசனை தொடங்கியுள்ளது. 100 சதவீத கடனுதவியை அளிக்கிறது. மேலும் இப்போது கார் வாங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு சுலப தவணையைத் தொடங்கும் வசதி யையும் அளிக்கிறது. சிறப்பு சலுகை திட்டத்தின்படி குறிப்பிட்ட கிறைஸ்டா மாடல் கார்களுக்கான மாதத் தவணை ரூ. 23 ஆயிரம் வரை உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கை யாளர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தற்போது புதிய ரகக் கார்களுக்கான முன் பதிவு வெகுவாகக் குறைந் துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிக தள்ளுபடி கேட்கும் காலமாக இருக்கும். இம்முறை வாடிக்கையாளர்கள் அதிகம் கேட்கும் நிலை ஏற்படலாம் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். டீசல் மாடல் கார்களுக்கு 20 சதவீதம் வரை கூடுதலான தள்ளுபடி சலுகை அளிக்கப்படுவதாக விற்பனை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2016 மாடல் கார்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் நிறுவனங்களைக் காட்டிலும் விற்பனை யகங்களுக்கு அதிகம் உள்ளது. இதனால் கார் நிறுவனங்கள் அளிக்க முன் வரும் சலுகையை விட அதிக அளவில் அதாவது தங்களது லாப வரம்பைக் குறைத்துக் கொண்டு விற்பனையகங்கள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x