Published : 26 Dec 2016 10:58 AM
Last Updated : 26 Dec 2016 10:58 AM
2016-ம் ஆண்டு பொருளாதார ரீதியில் மிக முக்கியமான ஆண்டு. அதிலும் குறிப்பாக பணமதிப்பு நீக்க அறிவிப்பு பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவு. 1948, 1978-ம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மூன்றாவது முறையாக இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. டாடா- மிஸ்திரி மோதல் இந்த ஆண்டு இறுதியின் முக்கியமான செய்திகளாயின. ரகுராம் ராஜன் வெளியேறிய போது இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பாகவே மக்கள் கருதினார்கள். இப்படி இந்த வருடம் முழுக்க முழுக்க பொருளாதார நிகழ்வுகளும் அதன் தாக்கங்களும் இருந்து கொண்டே இருந்தன. அவற்றை பற்றி சில தகவல்கள்….
பிரெக்ஸிட்
> கடந்த வருடத்தில் மிக முக்கியமான சர்வதேச பொருளாதார நிகழ்வு பிரெக்ஸிட்.
> ஐரோப்பிய யூனியனில் கடந்த 43 வருடங்களாக பிரிட்டன் இருந்து வந்தது. இதையெடுத்து பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
> 52% பேர் இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் விலக வேண்டும் என்றும் 48% பேர் விலக வேண்டாம் என்றும் வாக்களித்தனர். இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.
> இந்த வாக்கெடுப்பு முடிந்ததுமே இந்திய பங்குச்சந்தை உட்பட உலகில் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. ஒரு பக்கம் பங்குச்சந்தைகள் சரிவை கண்டதால், மாற்று முதலீடான தங்கம் மீது சர்வதேச அளவில் பல நாடுகளில் பலரும் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவு, தங்கத்தின் விலை திடீரென ஏற்றம் கண்டது. இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
> அதுமட்டுமல்லாமல் இந்திய நிறுவனங்கள் அங்கு பெருமளவு முதலீடு செய்துள்ளன. அதற்கு எதுவும் பாதிப்பு வருமா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் புதிய பிரதமர் தெரசா மே கடந்த நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்தார். பிரிட்டன் வெளியேறினாலும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருநாட்டு உறவுகளும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மிஸ்திரி
> இந்திய தொழில்துறையில் டாடாவின் பங்கு அளப்பரியது. அதேபோல கார்ப்பரேட் வரலாற்றின் கருப்பு பக்கங்களிலும் இந்த ஆண்டு டாடா குழுமத்தின் பெயர் இடம்பெற்றுவிட்டது. நான்கு வருடங்களுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார். ஆனால் அக்டோபர் 24-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார்.
> ஆரம்பத்தில் டாடா குழுமத்தின் செயல்பாடுகள் சரியில்லாதது ஒரு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல சிவ சங்கரனுக்கு எதிராக செயல்பட்டார். டாடா அறக்கட்டளைக்கு டிவிடெண்ட்கள் வழங்காதது, அறக்கட்டளையின் அதிகாரங்களை குறைக்க நினைத்தது என தினமும் புதுப்புது தகவல்கள் வந்தன.
> தவிர சைரஸ் மிஸ்திரி மற்றும் அவருக்கு ஆதரவானவர்களை குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து நீக்கும் படலமும் நடந்தது. 2016-ம் ஆண்டு டாடா குழுமத்துக்கு மறக்க முடியாத ஆண்டு.
பணமதிப்பு நீக்கம்
> ஒட்டுமொத்த நாட்டையே ஒரு நிமிடம் அதிரவைத்த அறிவிப்பை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. இந்த ஆண்டில் எடுக்கப்பட்ட மிகப் பெரிய பொருளாதார நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
> நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார்.
> கறுப்பு பண ஒழிப்பு, கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிப்பது, தீவிரவாத நிதியை ஒழிப்பது என மூன்று காரணங்களை முன்வைத்து இந்த நடவடிக்கையை எடுப்பதாக மோடி அறிவித்தார். இதனால் 85 சதவீத பணம் திரும்பப்பெறப்பட்டது.
> ஆனால் நாடு முழுவதும் சாதாரண மக்கள் இந்த நடவடிக்கையால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயினர்.
> நாள்தோறும் ரிசர்வ் வங்கியிடமிருந்து புதிய அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. கறுப்புப் பண ஒழிப்பு இலக்கு பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது.
> 50 நாட்கள் வரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார் மோடி. ஆனால் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்பதே நிதர்சனம்.
ராஜன் எக்ஸிட்
> கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி 23-வது ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
> 2013-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் அதலபாதளத்துக்கு போய்கொண்டிருந்த நேரத்தில் பதவியேற்ற அடுத்தடுத்த மாதங்களிலேயே இரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தினார். நெருக்கடி ஏற்படாமல் தடுத்ததை ஊடகங்கள் ராஜன் எபெக்ட் என்று புகழாரம் சூட்டின.
> ஆனால் இந்த ஆண்டு சுப்ரமணியன் சுவாமி, ரகுராம் ராஜன் மனதளவில் இந்தியராக செயல்படவில்லை என விமர்சித்தது பெரும் பரப்பரப்புக்குள்ளானது.
> பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையை செயல்படுத்துவதில் நிறைவு பெற்றுவிட்டேன். ஆனால் இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது என்று கூறியிருந்தார் ராஜன்.
> பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான் மேலும் நீட்டிக்க விரும்பவில்லை என்று கூறி கடந்த செப்டம்பர் 4-ம் தேதியோடு ஓய்வு பெற்றுவிட்டார்.
ஜிஎஸ்டி
> நாட்டின் மிகப் பெரிய வரிச் சீர்த்திருத்தமாக பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நிறைவேற்றப்பட்டது. 443 உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
> ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விகிதம் அமலுக்கு வரும் என்று இலக்கு வைத்து வேலைகளை தொடங்கியது மத்திய அரசு. வரி விகிதம், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்பட இந்த விவகாரத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது.
> சரக்கு-சேவை வரியை 5,12,18,28 சதவீதம் என நான்கு அடுக்காக விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவை எடுத்தது.மேலும் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்ய இழப்பீடு வழங்கவும் முடிவு செய்தது.
> ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் செப்டம்பர் மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாகலாம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT