Published : 05 Dec 2016 12:25 PM
Last Updated : 05 Dec 2016 12:25 PM

உலகின் அழகான விமான நிலையங்கள்

ஒரு காலத்தில் விமானத்தில் செல்வதே பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று விமானத்தில் செல்வது மிகச் சாதாரணமாகிவிட்ட சூழ்நிலையில் அதன் தரத்தைப் பற்றி பேசுவது இந்த நேரத்தில் சரியாக இருக்கும். ஏனெனில் விமான நிலையத்திற்கு கட்டிட அமைப்பு ரொம்ப முக்கியமானது. மிகப் பெரிய கட்டிடமாக இருக்க வேண்டும். எந்த இடர்பாடுகளையும் தாங்கக்கூடியதாக இருக்கவேண்டும். இந்திய விமான நிலையத்தின் தரத்திற்கு மோசமான உதாரணம் சென்னை பன்னாட்டு விமான நிலையம். சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை கண்ணாடி விழுவது கணக்கில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

நடிகர் விவேக் சொன்னது போல் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு விமான நிலையத்திற்கு செல்லும் நிலை வெகுதொலைவில் இல்லை என்பது போல்தான் தெரிகிறது. ஆனால் இதே நேரத்தில் உலக நாடுகளில் விமான நிலையத்தின் அமைப்புகள் நம்மை மிரள வைக்கின்றன. சமீபத்தில் மிக அழகான வடிவமைப்புடைய விமான நிலையங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் ஐந்து இடத்தில் உள்ள விமான நிலையங்களையும் அதன் கட்டிட அமைப்புகளையும் பற்றிய சில தகவல்கள்….

1. அடால்போ விமான நிலையம்

> ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

> 1927-ம் ஆண்டு இந்த விமான நிலையம் கட்ட ஆரம்பித்து 1931-ம் ஆண்டு விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.

> 2006-ம் ஆண்டு ரிச்சர்டு ரோஜர்ஸ் மற்றும் அந்தோனியா லேம்லா ஆகிய கட்டிடக்கலை நிபுணர்கள் இந்த விமான நிலையத்தை புதுப்பித்தனர். அதாவது இந்த விமான நிலையத்தின் மேற்கூரை முழுக்க முழுக்க மூங்கிலை வைத்து அமைக்கப்பட்டது.

> 2015-ம் ஆண்டு மொத்தம் 4,68,28,279 பயணிகள் வந்துச் சென்றுள்ளனர்.

> மேற்கூரையில் மிகப் பெரிய அளவுக்கு ஜன்னல்கள் வைத்துள்ளதால் சூரிய வெளிச்சம் எளிதாக உள்ளே வருகிறது. இதன் மூலம் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுகிறது.

> மேலும் இந்த விமானநிலையத்தினுள் சுரங்க ரயில் பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது.



2. ஷென்ஜென் போயன் சர்வதேச விமான நிலையம், சீனா

> தென் சீனாவில் அமைந்துள்ள இந்த பன்னாட்டு விமான நிலையம் 1991-ம் ஆண்டு 10 கிலோ மீட்டர் சுற்றளவில் ஆரம்பத்தில் கட்டப்பட்டது.

> 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த விமான நிலையம் விரிவுப்படுத்தப்பட்டது.

> மேம்படுத்தப்பட்ட பாரமெட்ரிக் (parametric developed structure) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது தற்போது கட்டப்பட்டுள்ளது.

> இந்த விமான நிலையத்தின் மூன்றாவது டெர்மினல் 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 63 நிலையான கதவுகளும் 15 தானாக இயங்ககூடிய கதவுகளும் உள்ளன. மேலும் எந்தவொரு வகையான விமானமும் இங்கு இறக்கமுடியும்.

> இந்த விமான நிலையத்திற்கும் கீழாக பஸ் சேவை மற்றும் ரயில் சேவை ஆகியவை உள்ளன.

> வருடத்திற்கு இந்த விமான நிலைத்திற்கு 3 கோடி மக்கள் வந்து செல்கின்றனர்.



3. வெலிங்டன் சர்வதேச விமான நிலையம்

> நியூஸிலாந்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

> 1956-ம் ஆண்டு 5 மில்லியன் ஈரோ தொகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. அதன் பின் படிப்படியாக இந்த விமான நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

> பிரமீடு வடிவத்தில் முழுக்க ஸ்டீல்களை கொண்டு இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. தி ஸ்டுடியோ பசிபிக் நிறுவனத்தின் கட்டிடக்கலை நிபுணர்கள் இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தனர்.

> மேற்கூரை முழுவதும் தாமிர தகடுகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

> எஸ்கலேட்டர் உட்பட இதன் உள்புறம் அனைத்தும்

> மரத்திலான பொருட்களையே பயன்படுத்தியுள்ளனர்.

> இந்த விமான நிலையத்தை `தி ராக்’ என்று அழைக்கின்றனர்.



4. லெய்டா -அல்குய்ரே விமான நிலையம், ஸ்பெயின்

> இது ஒரு பிராந்திய விமான நிலையம். ஸ்பெயின் நாட்டில் கேடலோனியா மாநகரத்தில் அமைந்துள்ளது.

> 4 லட்சம் பயணிகள் வருடத்திற்கு வந்து செல்வது போல் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது.

> விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை மற்றும் உடனடி சேவைகள் மையம் அனைத்தும் ஒரு கோபுரத்தில் உள்ளது. இந்த கோபுரம் 41 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இரண்டாவது தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சேவைகளை வழங்கக்கூடிய டெர்மினல் கட்டிடங்கள். கோபுரமும் டெர்மினல் கட்டிடமும் இணைக்கப்பட்டுள்ளது.

> முழுவதும் உலோக தகடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறம் முழுவதும் கண்ணாடி சுவர்களே உள்ளன.



5. அரசர் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம், சவூதி அரேபியா

> அட்கின்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணர் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சுமார் 36 மாதங்களில் இந்த விமான நிலையத்தை கட்டி முடித்தனர்.

> சிறப்பு விமான நிலைய அமைப்பு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பு என அனைத்தும் டெர்மினல் கட்டிடத்தில் உள்ளது.

> 56 அறைகள் கொண்ட ஹோட்டலும் விமான நிலையத்திற்கு உள்ளேயே இருக்கிறது.

> இந்த விமான நிலையம் சவூதி அரேபியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாகும்.

> ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பயணிகள் இந்த விமான நிலையத்திற்கு வந்துச் செல்ல முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x