Last Updated : 05 Dec, 2016 11:22 AM

 

Published : 05 Dec 2016 11:22 AM
Last Updated : 05 Dec 2016 11:22 AM

ஏஎம்டி கார் தயாரிப்பில் களமிறங்கும் க்விட்

பெரும்பாலான சொகுசு கார்கள் கியர் இல்லாமல் தானியங்கி முறையில் செயல்படுபவையாக இருக்கும். தற்போது சிறிய ரக கார்களிலும் கியர் இல்லாத மாடல்கள் வருகின்றன. இதில் லேட்டஸ்ட் வரவு க்விட் ஏஎம்டி (Automated Manual Transmission). மத்திய அரசு பண மதிப்பு நீக்கம் செய்த சமயத்தில் இந்த மாடல் கார் வெளியானது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட கார் இப்போது சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. க்விட் காரின் உயர்ந்த பட்ச மாடலான ஆர்எக்ஸ்டி மாடல் காரின் தானியங்கி வடிவம்தான் க்விட் ஏஎம்டி. இந்த காரை ஓட்டிப் பார்ப்பதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் கோவாவில் நடந்தது.

க்விட் ஏஎம்டி குறித்து

இந்த வண்டியில் கியர் மற்றும் கிளட்ச் கிடையாது. அதற்கு பதிலாக மூன்று விதமான வாய்ப்புகளை பயன்படுத்தி கார்களை இயக்க முடியும். ரிவர்ஸ், நியூட்ரல் மற்றும் டிரைவிங் மோட். (ஆர்என்டி). பிரேக்கை பிடித்து மட்டுமே மற்ற டிரைவிங் மோட் அல்லது ரிவர்ஸ் மோட் அல்லது நியுட்ரலில் நிறுத்த முடியும். க்விட் ஆர் எக்ஸ்டி மாடலை விட 30,000 ரூபாய் அதிகமாகும். ஏஎம்டி ரக மாடலின் டெல்லி விற்பனையக விலை ரூ.4.25 லட்சம்.

போக்குவரத்து நெரிசலில் சென்று கொண்டிருக்கும் போது பிரேக் பிடித்து ஒரு முறை வண்டியை நிறுத்திவிட்டால் போதும் அதன் பிறகு ஆக்ஸிலேட்டர் அழுத்தும் வரை வண்டி நகராது. மற்ற ஆட்டோமேட்டிக் மாடல்களில் வண்டி நகராமல் இருக்க பிரேக்கை பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். தவிர ஒரு லிட்டருக்கு 24 கிலோமீட்டர் செல்லும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுமித் சாஹ்னி கூறியதாவது:

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் க்விட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கார்களுக்கு மேலே விற்பனையாகி இருக்கிறது. கார்கள் சந்தையில் சுமார் 4.5 சதவீதம் சந்தையை வைத்திருக்கிறோம். ஐந்து சதவீத சந்தையை கைப்பற்றுவதுதான் இலக்கு. அதிகம் விற்பனையாகும் முதல் 10 கார்களில் ஆறாவது இடத்தில் க்விட் இருக்கிறது. மூன்று நிறுவனங்கள் மட்டுமே முதல் பத்து இடங்களில் உள்ளன. இதில் ரெனால்ட் நிறுவனமும் ஒன்று. (மாருதியின் 7 கார்கள், ஹூண்டாய் நிறுவனத்தின் இரு கார்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன)

மற்ற நிறுவனங்களிடம் சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதற்கு அந்த நிறுவனங்கள் வசம் பல மாடல் கார்கள் இருக்கின்றன. தவிர அந்த நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சந்தையில் செயல்பட்டு வருகின்றன. நாங்கள் சந்தைக்கு வந்து 5 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. மிக குறுகிய காலத் தில் ஐந்து சதவீத இலக்கு என்பது முக்கியமான வளர்ச்சி.

ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் அடுத்த நான்கு வருடங்களுக்கு ஒவ்வொரு கார்க ளாக அறிமுகம் செய்யும் திட்டம் வைத்திருக்கிறோம். க்விட் கார்கள் 98 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. ஒரு காரில் சுமார் 16,000 உதிரி பாகங்கள் இருக்கின்றன. இதில் 2 சதவீதம் என்றால் 320 உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது என்ற அர்த்தத்தில் மற்ற நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் நாங்கள் மதிப்பு அடிப்படையில் 2 சதவீதம் இறக்குமதி செய்கிறோம். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மிக சில எலெக்ட்ரானிக் பாகங்களை மட்டுமே இறக்குமதி செய்கிறோம்.

பண மதிப்பு நீக்கம் குறித்து விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. சரியான திசையில் செய்யப்பட்டிருக்கும் துணிச் சலான நடவடிக்கை இது. குறுகிய காலத்தில் சவால் இருக்கும். ஓர் இரவில் அனைத்தும் மாறிவிடாது. நீண்ட நாள் அடிப்படையில் பார்க்கும் போது நிச்சயம் பலன் தரும். பொதுவாக சர்வதேச அளவில் எங்கெல்லாம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் பணவீக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் ஜிஎஸ்டிக்கு பிறகு பெரிய அளவில் பணவீக்கம் இருக்காது என நினைக்கிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பிரத்யேக மாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து..

புதிய மாடலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

இப்போதுதான் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சந்தையில் வரவேற்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் அறிமுகம் செய்த சமயத்தில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் முன்பதிவு செய்பவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டு விட்டன.

சிறிய ரக கார்களில் ஆட்டோமேட்டிக் கார்கள் இதுவரை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லையே?

அனைத்து கார்களும் ஏஎம்டியாக மாறப்போவதில்லை. பல வகை யான வாடிக்கையாளர்கள் இருக்கி றார்கள். நகர்ப்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கியர் வாகனங் களை ஓட்டுவது சிரமம். தவிர நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன வழங்கு கிறீர்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. இந்த காரை ஓட்டிப்பார்த்தவர்களுக்கு வித்தியாசம் புரியும். அவர்கள் முன் பதிவு செய்கின்றனர்.

20 வருடங்களுக்கு முன்பாக மெர்சிடஸ் பென்ஸ் ஏஎம்டி வசதி கொண்ட கார்களை கொண்டுவந்தது. அதன் பிறகு சொகுசு கார்கள் ஆட்டோமேட்டிவ் கார்களாக வரத்தொடங்கின. இப்போது உலகம் முழுவதும் ஆட்டோமேட்டிவ் கார்கள் பிரபலமாகி வருகின்றன. இப்போது சிறிய கார்களில் வரத் தொடங்கி இருக்கின்றன. சிறப்பான தொழில்நுட்பம் கொஞ்சம் அதிக விலையில் கிடைத்தால் மக்கள் வாங்கு வார்கள்.

உங்கள் நிறுவனம் க்விட் மற்றும் டஸ்டர் ஆகிய இரு பிராண்ட்களை மட்டுமே சார்ந்து இருக்கிறதே. இது ரிஸ்க் இல்லையா?

இந்திய கார் சந்தையை எடுத்துக் கொண்டால் 70 சதவீத கார்கள் 4 மீட்டர் நீளத்துக்குள் இருப்பவை. இதில் பல பிரிவுகள் உள்ளன. க்விட் போன்ற சிறிய ரக கார்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது. மீதமுள்ள 45 சதவீத பிரிவுக்குள் ஏதாவது ஒரு பிரிவில் புதிய ரக கார்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். நாங்கள் போர்ட்போலியோவை உரு வாக்க திட்டமிட்டிருக்கிறோம். இது வரை இரண்டு கார்கள் வெற்றி பெற்றி ருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் அவை முக்கியமான இடத்தில் இருக் கின்றன. அதேபோல புதிதாக அறிமுகம் செய்யும் கார்களும் முக்கிய இடத்தில் இருக்கும்.

எப்போது லாபமீட்ட தொடங்குவீர்கள்?

எல்லா நிறுவனமும் லாபம் ஈட்டுவதற் காகத்தான் செயல்படுகின்றன. அதற் கான திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. நாங்கள் சர்வதேச அளவில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனம். இது குறித்து மேலும் விவரங்கள் தெரிவிக்க இயலாது.

- karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x