Published : 12 Dec 2016 09:26 AM Last Updated : 12 Dec 2016 09:26 AM
உன்னால் முடியும்: சீரான வளர்ச்சியே நீடித்து நிற்கும்
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் வேங்கடசுப்ரமணியன். கிண்டி, மடுவங்கரையில் அலுவலக பைல்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். “மென்பொறியியல் படித்துவிட்டு அமெரிக்கக் கனவோடு இருந்த என்னை காலம் காகித கோப்புகள் தயாரிக்க இறக்கியது. வெற்றி தோல்வி அனுபவங்களோடு, இப்போது சிறப்பான இடத்தில் உள்ளேன்’’ என மகிழ்ச்சியோடு குறிப்பிடும் இவரது அனுபவம் இந்த வாரம் “வணிக வீதி’’யில் இடம் பெறுகிறது.
பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கோயம்புத்தூர் தொழில் நுட்பக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் பட்டம். அமெரிக்கா செல்ல வேண்டும் என்று அதீத ஆர்வம். ஏனென் றால் அப்போதுதான் ஐடி துறை வளர்ச்சி மெல்ல உருவாகி வந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலையால் செல்ல முடிய வில்லை. இதனால் எனது அப்பாவிடம் கோபித்துக் கொண்டுதான் சொந்த தொழில் செய்யப்போகிறேன் என்று இறங்கினேன்.
அப்போது என்னோடு படித்த இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது தொழிலில் இறங்கலாம் என திட்டமிட்டு டீத்தூள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினோம். அதில் ஏற் பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து காகித அட்டை முகவர் தொழிலை தொடங்கலாம் என யோசித்தோம். என் நண்பர் ஒருவரது உறவினர் காகித அட்டை தொழிலில் இருந்ததால் அவரிடம் டீலராக சேர்ந்தோம். கூடவே வேறு சில நிறுவன தயாரிப்புகளையும் வாங்கி விற்கத் தொடங்கினோம். அதன் அடுத்த கட்டமாக பைல் தயாரிக்கும் தொழிலில் இறங்கினோம்.
நேரடியாக சில்லரை வர்த்தகத்துக்கான பைல்களை தயாரிப்பதைவிட, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு தயாரித்து கொடுப்பவர்களிடம் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி செய்து கொடுத்தோம். அலுவலக பயன்பாட்டு பைல்கள் தவிர, வங்கிகள், நிதி நிறுவனங்களில் வீட்டுக்கடன், அடமானக் கடன் குறித்த ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கும் பிரத்யேக பைல்களையும் தயாரித்தோம். இந்த தயாரிப்பில் சில ஆண்டுகளிலேயே நல்ல வளர்ச்சியை கண்டோம். கோவையில் உள்ள நண்பர்கள் உற்பத்தியைக் கவனித்துக் கொள்ள, நானும் மற்றொரு நண்பரும் சென்னையில் மார்க்கெட்டிங் வேலைகளைக் கவனித்துக் கொண்டோம்.
எஸ்பிஐ, எல்ஐசி, சுந்தரம் பைனான்ஸ், ஐசிஎப் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் எங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். இதற்கிடையில் நான் தனியாக சென்னையில் பிபிஓ சார்ந்த இ-பப்ளிஷிங் தொழிலில் இறங்கினேன். ஆனால் எனது நிர்வாக தவறுகளால் மிகப் பெரிய சரிவை சந்தித்தேன். இந்த நிலையில் பைல் தயாரிப்பு நிறுவனத்திலும் சிக்கல் உருவானது. கோவையில் இருந்த நண்பர் தனியாக வேறொரு நிறுவனம் தொடங்கி, ஆர்டர்களை அங்கு மாற்றிக் கொண்டது எங்களுக்கு தெரியவில்லை.
இதனால் நண்பர்களுக்குள் முரண்பாடு உருவாகியதில் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினேன். தொழில் நஷ்டம், நண்பர்களின் துரோகம், கடன் என பல வகையிலும் இழப்பு ஏற்பட்டதால் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. பாரிமுனையில் காகித அட்டை மொத்த விற்பனையாளர் ஜேம்ஸ், அந்த நேரத்தில் பக்க பலமாக இருந்து, ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு எடுத்து கொடுத்து உதவி செய்தார். முதல் நிறுவனத்திலிருந்தே ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் சேர்ந்து என்னை அடுத்த கட்ட வெற்றிக்காக இயக்கியது.
திரும்பவும் வடிவமைப்பு, மார்க்கெட் டிங், தயாரிப்பு என இறங்கினேன். ஏற்கெனவே இருந்த வாடிக்கையாளர்கள் தவிர, மருத்துவமனைகளுக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளையும் மேற்கொண்டு புதிய வாடிக்கையாளர்களையும் உருவாக் கினேன். இரண்டு மூன்று ரூபாய் அதிகம் என்றாலும் நீண்ட காலத்துக்கு உழைக்கும் தரமானவை மட்டுமே கொடுத் தேன். பழைய அனுபவங்கள் ஒவ்வொன் றும் என்னை வழிநடத்தத் தொடங்க இப்போது தொழிலில் முழு கவனமும் செலுத்தி வருகிறேன். 22 நபர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்துள்ளேன்.
பைல்கள் உற்பத்தி தவிர மருத்துவமனைகளில் பயன்படுத்தும் காகித படுக்கை விரிப்புகளைக் கேட்டும் ஆர்டர் வருகிறது. வங்கிக் கடன் உதவியோடு அதற்கான இயந்திரங்களை வாங்கும் முயற்சிகளில் உள்ளேன். ஒரு தொழிலை எப்படி நடத்துவது என்பதைவிட, எப்படி நடத்தக் கூடாது என்பதில் தெளிவு கிடைத்துள்ளது. புதிதாக தொழில் தொடங்கும் பலருக்கும் என் அனுபவத்திலிருந்தே பல ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறேன். உண்மையாக உழைத்தாலும் சிலருக்கு தாமதமாகத்தான் வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கு பிறகு அது உங்களை விட்டு போகாது. இப்போது நான் அந்த இடத்தில் இருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக விடை கொடுத்தார்.
WRITE A COMMENT