Published : 19 Dec 2016 11:30 AM
Last Updated : 19 Dec 2016 11:30 AM
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெருவாரியான தொழில்கள் பாதிக்கப் பட்டுள்ளன. அதில் குறிப்பாக ஆட்டோ மொபைல் துறை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. விற்பனை குறைந்துள்ள தால் உற்பத்தியைக் குறைக்க பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் புதிய அறிமுகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விநியோகஸ்தர்களுக்கு அனுப்பும் வாகனங்களின் எண்ணிக்கை யைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ஒய்.எஸ். குலேரியா தெரிவித்துள்ளார். நிலைமை சரியாகும் வரை உற்பத்தி இல்லாத நாள்களை செயல்படுத்த பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதத்தில் கார்களுக்கான முன்பதிவு 40 சதவீத அளவுக்குக் குறைந் துள்ளது. பண மதிப்பு நீக்க நட வடிக்கையால் புதிய கார்கள் வாங்கும் முடிவை மக்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஜானேஸ்வர் சென் தெரிவித்துள்ளார்.
கார்கள் விற்பனையில் முதலிரண்டு இடங்களில் உள்ள மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வில்லை. இருப்பினும் கார்களுக்கான தேவை கடுமையாகக் குறைந்துள்ளது, இத்தகைய குறுகிய கால சவாலை எதிர்கொள்வதற்கான உத்திகளைக் கையாண்டு வருவதாக இந்நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விற்பனையகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முதல் இரண்டு வாரங்களில் கடுமை யாகக் குறைந்தது. இப்போது படிப் படியாக நிலைமை திரும்பி வருகிறது. இருப்பினும் விற்பனை கடந்த ஆண்டு அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் ஹீரோ மோட்டோகார்ப் நிறு வனத்தின் தலைவர் பவன் முன்ஜால்.
விநியோகஸ்தர்கள் தயக்கம்
நவம்பர் மாதத்தில் விற்பனை பெரு மளவு குறைந்த நிலையில் தற்போது ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் புதிய வாகனங்களை தங்கள் விற்பனையகத்தில் வாங்கி வைக்க விநியோகஸ்தர்கள் தயங்குகின்றனர். இதற்குக்காரணம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 2017 மாடல் வாகனங்களை வாங்கவே விரும்புவர் என்பதுதான் அவர்களது தயக்கத்துக்குக் காரணமாகும்.
ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களும் நிலைமை யைப் புரிந்து கொண்டு அதிக அளவில் சப்ளை செய்வதை தவிர்த்து வருகின்றன என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் சில நிறுவனங்கள் போதிய மூலதனம் இல்லாமல் கடுமையான சிரமத்துக்குள்ளாகியுள்ளன. உதிரிபாக விற்பனை 70 சதவீதம் சரிந்துள்ளதால் இந்நிறுவனங்களுக்கு பணப் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.
மாருதி சுஸுகி, ஹோண்டா மோட்டார், ஹூண்டாய் மோட்டார், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரெனால்ட் நிசான், ஃபோர்டு மோட்டார் ஆகிய நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முற்றிலுமாக உற்பத்தியை நிறுத்தத் திட்டமிட்டுள்ளன.
உற்பத்தி நிறுத்த நடவடிக்கை என்பது ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று இதற்கும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை என் கின்றனர் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தினர். ஆனால் ஹோண்டா கார்ஸ் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்கள் கடந்த சில நாள்களாக உற்பத்தியை நிறுத்தி யுள்ளன. விநியோகஸ்தர்களிடமிருந்து போதிய ஆர்டர்கள் இல்லாததால் இத்தகைய நடவடிக்கையை அவை எடுத்துள்ளன.
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் நொய்டா மற்றும் தபுகரா தொழிற் சாலைகள் தற்போது வாரத்துக்கு நான்கு நாள்கள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த மாத இறுதியில் ஒரு வாரம் முற்றிலுமாக உற்பத்தியை நிறுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளது.
ஆண்டு பராமரிப்புப் பணிக்காக டிசம்பர் 4 முதல் 8-ம் தேதி வரை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆலை முற்றிலுமாக உற்பத்தியை நிறுத்திவைத்திருந்தது. அடுத்த கட்டமாக இம்மாதம் 26-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு முற்றிலுமாக உற்பத்தியை நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஆண்டு பராமரிப்புப் பணிக்காக இம்மாதம் 26-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இப்போது உள்ள நிலையில் சந்தையின் போக்கை கணிப்பது சிரமம், மாறிவரும் சூழலுக்கேற்ப உற்பத்தி சார்ந்த நடவடிக்கையை எடுப்போம் என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் யோய்சிரோ யுனோ தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 6% குறைந்துள்ளது. இதே போல வர்த்தக வாகன விற்பனையும் 11% அளவுக்குச் சரிந்துள்ளது.
வாகனங்கள் வாங்கலாம் என்றிருந்த வாடிக்கையாளர்கள் கூட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தங்களது திட்டத்தை தள்ளிப் போட்டுள்ளனர். சிலர் முற்றிலுமாக கைவிட்டுள்ளனர். அதேபோல வாகனக் கடன் வழங்க வங்கிகளில் போதிய அளவு பணி யாளர்கள் இல்லாத நிலையும் இதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. வங்கிப் பணியாளர்கள் முழு நேரமும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும் பணியில் ஈடுபட்டதால் வங்கிகளில் வாகனக் கடன் வழங்குவது குறைந் ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
இப்போதைய சூழ்நிலையே அடுத்த சில மாதங்களுக்குத் தொடரும்பட்சத்தில் இந்த நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவது சாத்தியமில்லை என்றே இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வேலை இழக்கும் அபாயம்
ஆட்டோமொபைல் நிறுவனங்களில் உற்பத்தி குறைப்பு காரணமாக பலர் வேலையிழக்கும் அபாயமும் உருவாகி யுள்ளது. ரெனால்ட் நிசானின் சென்னை ஆலையில் 1,000 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளன. கார், மோட்டார் சைக்கிள் ஆலைகளில் மட்டுமே பாதிப்பு என்றில்லை, உதிரிபாக ஆலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் நட வடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிப் பதற்காக எடுக்கப்பட்டது என்றாலும், அதன் தொடர் விளைவு பல துறை களையும் பாதித்துள்ளது. இதில் ஆட்டோ மொபைல் துறையும் விதிவிலக்கல்ல என்பதுதான் எதார்த்தமான உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT