Published : 26 Dec 2016 10:49 AM
Last Updated : 26 Dec 2016 10:49 AM
மஞ்சள் உலோகத்திற்கு எப்போதும் இந்தியர்களிடையே ஒரு ஈர்ப்பு இருக்கும். அதனால் அதன் மீதான முதலீடு அதிகமாகும். ஆனால் தங்கத் திற்கும் தங்க முதலீட்டாளர்களுக்கும் 2016-ம் ஆண்டு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. உலக பொருளாதார சூழலும், இந்திய பொருளாதார சூழலும் தங்க முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு லாபத்தை ஈட்டித்தரவில்லை. ஆண்டு முழுவதும் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகின் மிக முக்கியமான இடங்களில் எதிர்மறையான வட்டி விகிதம் மற்றும் ஐரோப்பிய பொதுவாக்கெடுப்பு ஆகிய காராணங்களால் மஞ்சள் உலோகத்தின் விலை உயரே பறந்தது. அதாவது ஒரு அவுன்ஸ் (31.12 கிராம்) தங்கத்தின் விலை 1,300 டாலருக்கு சென்றது. அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதம் 1,375 டாலருக்கு சென்றது. ஆனால் அடுத்தெடுத்த சூழ்நிலைகள் தங்க முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை
ஆனால் அக்டோபர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று யூகங்கள் வெளிவந்த நிலையில் மஞ்சள் உலோகத்தின் விலை சற்று நேர்மறையாக இருந்தது. அதேபோல் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் களால் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. அதிபர் தேர்தல் முடிவின் போது தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. முடிவுகள் வந்த நாளில் ஒரு அவுன்சுக்கு 60 டாலர் வரை ஏற்றம் கண்டது. இதனால் ஓரளவு முதலீட்டாளர்கள் திருப்தியடைந்தனர். டொனால்டு ட்ரம்ப் எதிர்பாராத வெற்றியை பெற்றார். ஆனால் தங்கத் தின் விலை தொடந்து ஏற்றத்தில் இருந்து விடவில்லை. இறக்கம் கண்டது.
வெற்றிக்குப் பிறகும் ட்ரம்ப் பேசியதில் மாற்றம் இருந்தது. தேர்தலுக்கு முன் பேசிய பேச்சின் போது இருந்த வேகம் இல்லை. அதன் பிறகு உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியதால் பங்குச் சந்தை நேர்மறையாக சென்றன. அமெரிக்க டாலருக்கு புதிய உந்துசக்தி கிடைத்தது. மாறாக தேவை குறைந்தது.
டிசம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்திய தால் மேலும் தங்கத்தின் விலை சரிவைக் கண்டது. இப்படி ஆண்டு முடிவில் கடும் சரிவுக்கு உள்ளாகி வருகிறது. கமாடிட்டி சந்தையில் மிக மோசமான செயல்பாட்டில் தங்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற உலோகங்களான அலுமினியம், தாமிரம், காரீயம் போன்றவை 15 முதல் 45 சதவீதம் வரை வளர்ச்சியை கண்டுள்ளன. துத்தநாகம் இந்த வருடம் 80 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஆனால் தங்கத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இந்திய சூழல்
இந்திய சந்தையிலும் தங்க முதலீட் டாளர்கள் அதிக லாபத்தை ஈட்டவில்லை. இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு 9 சதவீத வருமானத்தை மட்டுமே தந்துள்ளது. தங்கத்தின் நுகர்வு தேவை இந்த ஆண்டு குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் பருவ மழை பொய்த்து போனதால் கிராம மக்களிடையே பணப் புழக்கம் குறைவாக இருந்தது, விலைவாசி ஏற்றம், ஆகிய காராணங் களால் தங்கத்தின் தேவை குறைந்தது. இந்த ஆண்டில் முதல் 9 மாதங்களில் நம் நாட்டின் மொத்த தங்க நுகர்வு 442.30 டன் மட்டுமே. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் குறைவு.
அதுமட்டுமல்லாமல் முதலீட்டு தேவையும் குறைந்து காணப்பட்டது. உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு செய்யும் நிதி வரத்து வறண்டு காணப்பட்டது. பட்டியலிடப் பட்ட 12 தங்க இடிஎப்-கள் 21.40 டன் மட்டுமே தங்கம் வைத்துள்ளன. கடந்த வருடம் 25 டன் இருந்தது.
மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை கொண்டுவந்தது. இந்த ஓரளவு தங்க முதலீட்டை அதிகப்படுத்தியது என்று சொல்லலாம். ஏனெனில் இதில் வரிச் சலுகையும் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் விற்கப்பட்டுள்ள தங்க பத்திரத்துக்கு நிகரான தங்கத்தின் மதிப்பு 10.20 டன். ஆனால் இந்த முதலீட்டில் வரும் வருமானம் மிகக் குறைவு என்றாலும் வருமான வரிச் சலுகைக்காக தங்க பத்திரத்தில் முதலீடு செய்தனர். உலக தங்க கவுன்சிலின் கருத்துப்படி தங்கத்தை மறுசுழற்சி செய்வதும் மிகச் சரியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 3,100 செல்கையில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு அதிகரித்தது. இந்த ஆண்டு முழுவதும் தங்க முதலீட்டளர்களுக்கு மிகப் பெரிய லாபம் எதுவும் கிடைக்கவில்லை. தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. அடுத்த ஆண்டு பொருளாதார சூழல்கள் தங்க முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
- rajalakshmi.nirmal@thehindu.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT