Last Updated : 21 Nov, 2016 10:33 AM

 

Published : 21 Nov 2016 10:33 AM
Last Updated : 21 Nov 2016 10:33 AM

நானோ-வின் எதிர்காலம்?

டாடா நானோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கார். ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தர வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் முயற்சியில் உருவான கார். மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் ஆலை அமைக்க முடிவு செய்து அங்கு பணிகள் தொடங்கி, பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு காரணமாக குஜராத் மாநிலத்துக்கு பெயர்ந்து 2009-ம் ஆண்டில் இந்தியச் சாலைக்கு வந்த கார் நானோ.

3 லட்சம் முன்பதிவுகளுடன் ஆரம்ப மான நானோ காரின் வளர்ச்சி அடுத்தடுத்து சரிவையே சந்தித்து வந்துள்ளது.

ஒரு லட்சம் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் உள்ளீட்டு பொருள் விலையேற்றம் காரணமாக முதலில் பதிவு செய்த ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 1 லட்சம் விலையில் இந்த கார் வழங்கப்பட்டது.

ஆனால் இன்றோ நானோ காரின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. டாடா மோட்டார்ஸின் `வெள்ளை யானை’ என வர்ணிக்கப்படும் நஷ்டத்தை உருவாக்கும் திட்டமாக நானோ விளங்குகிறது. டாடா சன்ஸிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரிக்கும், ரத்தன் டாடாவுக்கும் இடையே மோதல் ஏற்படக் காரணமான பல விஷயங்களில் முதன்மையாக இருந்ததும் நானோ கார்தான்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு காரை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட நானோ காரின் திட்டத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ. 1,000 கோடி. நானோ காரால் லாபம் கிடைக்கும் என்பதற்கான வெளிச்சக் கோடே இப்போதைக்குத் தெரியவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் லாபகரமாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு நானோ கார் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதுதான் என்றே நிறுவன உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் என்பதால் இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக 2019-க்குப் பிறகு நானோ கார் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அனைத்து கார்களும் விபத்து சோதனை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது தவிர கார்களில் உயிர் காக்கும் ஏர் பேக்குகள் கட்டாயம் இடம் பெற வேண்டும். மேலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் வசதி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் விபத்து சோதனை விதிகளை அனைத்து கார்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏர் பேக் மற்றும் ஏபிஎஸ் வசதிகள் அக்டோபர் 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாகிறது.

இப்போது உள்ள நானோ காரில் இத்தகைய வசதிகளை செய்யவேண்டுமாயின் முற்றிலுமாக மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே நஷ்டத்தை தந்து கொண்டிருக்கும் திட்டத்தில் கூடுதல் முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் முன்வருமா என்பது சந்தேகமே. இத்தகைய வசதிகளை இந்த காரில் வைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய வேண்டியுள்ளது. இத்தகைய வசதிகள் வைத்தால் காரின் விலையை மேலும் உயர்த்த வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே சந்தையில் உள்ள சிறிய ரகக் கார்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயம் நானோ-வுக்கு உள்ளது. மத்திய அரசின் புதிய விதிமுறைகள்படி மாற்றங்கள் செய்யும்போது காரின் விலை அதிகரிக்கும். அப்போது ஏற் கெனவே சந்தையில் உள்ள பிற நிறு வனங்களின் சிறிய ரக காரின் விலையை விட நானோ கார் விலை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழலில் நானோவின் விற்பனை எப்படியிருக்கும் என்பதை கணிப்பது மிகச் சுலபம்.

சமீப காலமாக நானோவின் விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே நிஜம். அடுத்த தலைமுறை நானோ என ஜென் நெக்ஸ்ட் பெயரில் அறிமுகமானது. ஆனாலும் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2012-ம் ஆண்டில் இந்தக் காரின் விற்பனை 74 ஆயிரமாகும். ஆனால் 2015-ம் ஆண்டில் 21 ஆயிரம் கார்களே விற்பனையாகியுள்ளன.

ஏற்றுமதிச் சந்தை நானோவுக்கு சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. 2012-ம் ஆண்டில் 3,462 கார்கள் ஏற்றுமதியாயின. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 6 மாத காலத்தில் வெறும் 148 கார்களே ஏற்றுமதியாகியுள்ளன.

ரெனால்ட் க்விட் மற்றும் நிசானின் ரெடி கோ ஆகிய கார்கள் நானோவுக்குப் போட்டியாக விளங்குகின்றன.

நானோவின் விற்பனையக விலை ரூ. 2.19 லட்சம் முதல் ரூ. 3.15 லட்சம் வரை உள்ளது. ஆனால் நிசானின் ரெடி கோ காரின் ஆரம்ப விலை ரூ. 2.42 லட்சமாகும். இந்த மாடலின் உயர்ந்தபட்ச விலையே ரூ. 3.49 லட்சமாக உள்ளது. இதில் ரூ. 3.37 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம் விலையிலான கார்களில் ஏர் பேக்குகள் உள்ளன.

நானோ கார் 600 சிசி திறன் கொண் டது. ஆனால் பிற நிறுவன மாடல் சிறிய ரக கார்களின் ஆரம்ப திறன் 800 சிசி ஆக உள்ளது. மாருதி சுஸுகியின் ஆல்டோ 800 ரகக் காரில் ஏர்பேக் உள்ளன. இதன் விலை ரூ. 2.89 லட்சம் முதல் ரூ. 3.15 லட்சம் வரை உள்ளது.

டாடா நானோ ஆலையை குஜராத் மாநிலத்தில் அமைக்க இடம் தந்ததோடு பல்வேறு சலுகைகளையும் அப்போது முதல்வராயிருந்த நரேந்திர மோடி அளித்தார். ஆனால் அந்தச் சலுகைகள் அனைத்துமே ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை விற்பனை செய்தால் மட்டுமே டாடா நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

சமீபத்தில் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் பிற மாடல் கார்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை மாநில அரசு திட்டவட்ட மாக மறுத்துவிட்டது. குறைந்த விலை கார் என்று இதற்கு பெயர் வைத்ததுதான் நானோ-வின் சரிவுக்குக் காரணம் என ரத்தன் டாடாவே ஒருமுறை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் அடுத்த கட்டமாக கார் வாங்க முயல்வர். ஆனால் டாடா கணித்தது போல குறைந்த விலையிலான காரை அல்ல. ஓரளவு குடும்பத்துடன் சவுகர்யமாக பயணிக்கக்கூடிய கார்களையே. இந்த விஷயத்தில்தான் ரத்தன் டாடா தவறான மதிப்பீடு செய்துவிட்டார் என்கிறார் மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி. பார்கவா.

டாடா குழுமத்தில் மிகப் பெரும் சூறாவளி வீசிக் கொண்டிருக்கிறது. இதில் நானோ தப்புமா?

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x