Published : 07 Nov 2016 10:13 AM
Last Updated : 07 Nov 2016 10:13 AM

விரைவில் வருகிறது 750 சிசி புல்லட்

புல்லட் இந்தப் பெயருக்கு தனி மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் பைக் பிரியர்களின் மத்தியில் இந்தப் பெயரை சொல்லிப் பாருங்கள், அதன் மகாத்மியத்தை மணிக்கணக்காக பேசிக் கொண்டே இருப்பார்கள். குறைந்தபட்சம் சமீபத்தில் தாங்கள் புல்லட்டில் சென்று வந்த நீண்ட நெடிய பயணத்தை விவரிப்பார்கள்.

பைக் உலகின் ஜாம்பவானாக, இன்றைக்கும் தன்னிகரில்லா புகழும் பெருமையோடு இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய மாடல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது ஐஷர் மோட்டார்ஸின் அங்கமான ராயல் என்பீல்டு.

பல பன்னாட்டு நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்கள் இந்தியச் சந்தையில் அடியெடுத்து வைத்தாலும், புல்லட்டின் இடத்தை எந்த தயாரிப்பினாலும் பிடிக்க முடியாது என்பதைப் போல அதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

350 சிசி பிரிவில் ராயல் என்பீல்டில் பல்வேறு மாடல்கள் வெளிவந்துள்ளன. அடுத்தகட்டமாக 500 சிசி மோட்டார் சைக்கிளையும் அறிமுகப்படுத்திவிட்டது ஐஷர் மோட்டார்ஸ்.

இப்போது 750 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. அனேகமாக இப்புதிய ரக மோட்டார் சைக்கிள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியச் சாலையில் வலம் வரும் என தெரிகிறது.

2016-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப் போவதாக ஐஷர் தெரிவித்திருந்தது.

750 சிசி மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. பிரிட்டனில் உள்ள இந்நிறுவன ஆராய்ச்சிப் பிரிவு இதை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிறுவனத்தின் கான்டினன்டல் ஜிடி மோட்டார் சைக்கிளின் சேஸிசில் சில மாறுதல்களைச் செய்து அதில் 750 சிசி இன்ஜினை பொறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டை இன்ஜினைக் கொண்டதாக 45 முதல் 50 ஹெச்பி திறனுடன் 60 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் கொண்டதாக இருக்கும். முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும் பின்புறம் பயோலி ஷாக் அப்சார்பரும் இருக்கும்.

இந்த மோட்டார் சைக்கிள் சந்தைக்கு வரும்போது ஹார்லி டேவிட்சனின் ஸ்டிரீட் 750 மாடல் மோட்டார் சைக்கிளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியச் சந்தையில் மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் இது முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனில் உள்ள ராயல் என்பீல்டு தொழில்நுட்ப மையம் உருவாக்கும் முதலாவது மோட்டார் சைக்கிள் இதுவாகத்தானிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x