Published : 07 Nov 2016 11:10 AM
Last Updated : 07 Nov 2016 11:10 AM

விற்றது 100, திரும்ப வந்தது 50!

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஓய்ந்துவிட்டது. ஜவுளி நிறுவனங்கள் அடுத்த பண்டிகை வியாபாரத்துக்கான உத்தியை வகுக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இ-டெய்ல் நிறுவனங்களோ வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப வரும் (ரிட்டர்ன்) பார்சல்களை கணக்கெடுத்துக் கொண்டே இருக்கின்றன.

விழாக்காலத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் ``பிக் பில்லியன் டே’’ எனும் தள்ளுபடி சலுகையை ஆரம்பித்தது. ஏறக்குறைய 10 நாள்கள் நடைபெற்ற இந்த விற்பனை குறித்து தினசரி நாளிதழ்களிலெல்லாம் முழுப்பக்க விளம்பரம்.

மற்றொரு இ-டெய்ல் நிறுவனமான அமேசான், தானும் போட்டிக்கு ``கிரேட் இந்தியன் பெஸ்டிவல்’’ எனும் விற்பனைத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியது.

இ-டெய்ல் நிறுவனங்களின் விளம்பரம் விற்பனையைப் பார்த்து மிரண்டு போன சில்லரை வர்த்தக நிறுவனங்கள், இதற்கு கடிவாளம் போட வேண்டியது கட்டாயம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து மனு அளிக்கும் அளவுக்கு இ-டெய்ல் விற்பனை அமோகமாக இருந்தது.

பண்டிகைக் கால விற்பனையில் சில்லரை வர்த்தக நிறுவனங்களை ஓரங்கட்ட வேண்டும் என்ற போட்டியில் சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிக்கச் செய்தன இ-டெய்ல் நிறுவனங்கள். இப்போதைக்கு நஷ்டம் வந்தாலும் எதிர்காலத்தில் சந்தையை தங்கள் வசமாக்கிக் கொண்டுவிடலாம் என நோக்கத்தில் இவை செயல்பட்டன.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விற்பனை செய்த பொருள்களில் பலவும் திரும்பி வரத் தொடங்கியுள்ளன. பிளிப்கார்ட் நிறுவனம் ஏறக்குறைய ஒன்றரை கோடி பார்சல்களை விற்பனை செய்ததாக அறிவித்தது. தற்போது திரும்ப வரும் பார்சல்கள் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதாவது ஒன்றரை கோடியில் 60 லட்சம் முதல் 75 லட்சம் வரையான பார்சல்கள் திரும்பிவரும் என தெரிகிறது.

அமேசான் நிறுவனமும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு இணையாக விற்பனை செய்ததாக அறிவித்தது. இந்நிறுவனத்துக்கும் இதேபோல பார்சல்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளன. இந்நிறுவனத்துக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீத அளவுக்கு பார்சல்கள் திரும்ப வரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

பிக் பில்லியன் டே விற்பனையானது பிளிப்கார்ட் நிறுவனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருந்தது. ஏனெனில் ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மதிப்பு குறைந்து வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு பிளிப்கார்டின் மதிப்பு 1,500 கோடி டாலராக இருந்தது. ஆனால் இது தற்போது 100 கோடி டாலராகக் குறைந்துவிட்டது.

தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள பண்டிகைக் கால விற்பனை உதவும் என பிளிப்கார்ட் உறுதியாக நம்பியது. ஆனால் பண்டிகைக்குப் பிந்தைய ரிட்டர்ன், நிறுவனத்தின் நம்பிக்கையை புஸ்வாணமாக்கிவிட்டது.

பொருள்கள் திரும்புவதால் நிறுவனங்களுக்கு 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை கூடுதல் செலவு ஆகும் என தெரிகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் விற்பனையாளர்களும், அமேசான் நிறுவனத்துக்கு 1.20 லட்சம் விற்பனையாளர்களும் உள்ளனர்.

இ-டெய்ல் நிறுவனத்துக்கு சரக்குகள் திரும்புவதைப் பார்த்து சில்லரை வர்த்தக நிறுவனங்கள் சமாதானமடைந்து கொள்ளலாம். ஏனெனில் நேரடி விற்பனையில் இந்த அளவுக்கு பொருள்கள் திரும்புவது கிடையாது.

தீபாவளி விற்பனை அமோகம் என இ-டெய்ல் நிறுவனங்கள் முழங்கின. பொருள்கள் திரும்ப வரும்போது மௌனம் சாதிக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x