Published : 07 Nov 2016 10:15 AM
Last Updated : 07 Nov 2016 10:15 AM
டிரைவர் இல்லாத காரை வெள்ளோட்டம் விடும் முயற்சியில் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரம் காட்டிவரும் வேளையில், செயலி மூலம் வாடகைக் கார்களை இயக்கிவரும் உபெர் நிறுவனமும் டிரைவர் இல்லாத காரை வெள்ளோட்டம் விட்டு பார்த்துள்ளது. வோல்வோ எக்ஸ்சி90 எஸ்யுவி மாடல் கார் பிட்ஸ்பர்க் நகரில் வெள்ளோட்டம் விட்டு சோதித்துப் பார்த்துள்ளது. இங்குள்ள கார்னெகி மெலன் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டிய மோர்வுட் தெருவில் இந்த டிரைவர் இல்லாத கார் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
டிரைவர் இல்லாத வோல்வோ காரை சோதித்துப் பார்க்க உள்ளதாக கடந்த மாதம் உபெர் நிறுவனம் அறிவித்தது. தற்போது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வாகனப் போக்குவரத்து உள்ள சாலையில் வோல்வோ கார் இயக்கிப் பார்க்கப்பட்டுள்ளது.
பயணிகளை ஓரிடத்திலிருந்து ஏற்றி மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இத்தகைய டிரைவர் இல்லாத காரை உபெர் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதா என்ற விவரம் வெளியாகவில்லை.
கடந்த செப்டம்பரில் ஃபோர்டு பியூஷன் காரை டிரைவர் இல்லாமல் உபெர் செயல்படுத்திப் பார்த்தது. ஆனாலும் டிரைவர் இல்லா வாகன வெள்ளோட்டம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற விவரத்தை உபெர் வெளியிடவில்லை. ஃபோர்டு பியூஷன்ஸ் காரை டிரைவர் இல்லாமல் இயக்கி பார்த்தபோது எத்தகைய அசம்பாவித சம்பவங்களோ அல்லது விபத்தோ நிகழ்ந்ததாக தகவல் பதிவாகவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வோல்வோ நிறுவனத்துடன் உபெர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன்படி 100 வோல்வோ கார்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்தக் கார்களில் டிரைவர் இல்லாமல் இயக்கும் வகையிலான தொழில் நுட்பத்தை பயன்படுத்த உபெர் திட்டமிட்டுள்ளது.
வோல்வோ நிறுவனம் டிரைவ்மி எனும் தொழில்நுட்பத்தை தனது கார்களில் பயன்படுத்த உள்ளது. இத்தகைய டிரைவர் இல்லாத கார்கள் அடுத்த ஆண்டு ஸ்வீடன் தெருக்களில் சோதித்துப் பார்க்க உள்ளது. அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனாவில் டிரைவர் இல்லாத காரை இயக்க உபெர் முடிவு செய்யவில்லை. காருக்கான கட்டமைப்பு வசதிகளை வோல்வோ அளிக்கிறது. இத்தகைய டிரைவர் இல்லாத காரை இயக்கி செயல்படுத்தும் பணிகளை உபெர் மேற்கொள்ளும். இதன் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் உபெர் பொறுப்பேற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT