Last Updated : 03 Oct, 2016 12:07 PM

 

Published : 03 Oct 2016 12:07 PM
Last Updated : 03 Oct 2016 12:07 PM

வேலியே பயிரை மேய்ந்தால்...!

தண்ணீருக்குள் மீன் தண்ணீர் குடிப்பதைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அதைப்போல வருவாய்த்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகளைக் கண்டுபிடிப்பதும் கடினம். -சாணக்கியர், அர்த்தசாஸ்திரம்

முதலாமவர் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் உயிரி வேதியியலில் தங்கப் பதக்கம் பெற்றவர். தேசிய அறிவியல் போட்டியில் கல்வி உதவித் தொகை பெற்றவர்.

மற்றவர் வணிகவியலில் பட்டமும், பட்டய கணக்காளர் (சிஏ) பட்டமும் பெற்றவர்.

மூன்றாமவர் பி.டெக், எம்பிஏ பட்டதாரி. சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

மூவருமே சமூகத்தின் மிக உயர் அந்தஸ்தில் இருந்தவர்கள். ஒருவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மூன்றாமவர் ஓய்வு பெற மூன்று நாள் இருக்கும்போது நிதி அமைச்சகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் மூவருமே பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவி வகித்தவர்கள். இவற்றை விட ஒரு சோக சம்பவம் தெற்கு மும்பையில் உள்ள பொதுத்துறை வங்கியின் துணைப் பொது மேலாளர் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளில் நிலவும் ஊழல், லஞ்ச லாவண்யம் மற்றும் பணி நெருக்கடிகளுக்கு உதாரணமாகும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மாதமிருமுறை வங்கித் தலைவர்களைக் கூட்டி வங்கிகளின் வாராக் கடன் குறித்து ஆலோசனை நடத்துகிறார் நிதி அமைச்சர். சில பல சமயங்களில் தனது அதிருப்தியையும் அவர் வெளிக்காட்டியுள்ளார்.

வங்கித் தலைவர்களின் செயல் பாடுகளை கண்காணிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி, மவுனமாய் இருக்கிறது. வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பால் பொருளாதாரம் முடங்கியுள்ளது ஒரு புறம் என்றாலும், இதற்குப் பின்னால் வேறு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்பது நிதி அமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தெரியும். அது என்ன?

அர்ச்சனா பார்கவா

டெல்லி பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற அர்ச்சனா பார்கவா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர். கனரா வங்கியின் செயல் இயக்குநராகவும் இருந்துள்ளார். ஓய்வு பெறும் காலத்துக்கு முன்பாகவே உடல் நிலையைக் காரணம் காட்டி ஓய்வு பெற்றவர். 61 வயதாகும் இவர் மீது கடந்த வாரம் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

பல்வேறு நகரங்களில் நடத்திய சோதனையில் ரூ. 13.50 கோடி மதிப்பிலான நகை, முதலீட்டுப் பத்திரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

எஸ்.கே. ஜெயின்

சார்டர்ட் அக்கவுன்டன்டான சுதிர் குமார் ஜெயின், சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு வகித்தவர். தேனா வங்கியில் தனது வங்கிப் பணியைத் தொடங்கிய இவருக்கு வங்கித் துறையில் 26 ஆண்டு களுக்கு மேல் அனுபவம் உண்டு. ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கடன் அனுமதித்ததற்காக ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்ற போது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். பணம் கையூட்டு பெறுவதில் இவருக்கு உதவியவர்கள் இவரது மைத்துனர்கள்.

சுஷில் முனோத்

வங்கித் துறையில் 34 ஆண்டுக்காலம் அனுபவம் பெற்றவர் சுஷில். பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் தலைவராயிருந்தவர். வங்கியின் அதிகார பூர்வ வீடான புணே, மும்பையில் உள்ள இரண்டு வீடுகளையும் ஏக போகத்தில் அனுபவித் தவர். இதற்கு விளக்கம் கேட்டு ஓராண்டுக்கு முன்பே நிதி அமைச்சகம் இவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. பதில் அளிக்காததால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது தான் பிரதான காரணம் என வங்கியில் உள்ள மற்ற அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிதல்ல

வங்கிகளின் சிஇஓக்கள், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள் ஓய்வுக்காலத்துக்கு முன்பாக இதுபோன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

லஞ்சமா, பரிசா?

வங்கி கிளையில் அதிகாரியாக இருப்பவர் விவசாயிக்கு கடன் அளித்துவிட்டு அதற்கு கையூட்டாக தர்பூசணியை பெறுகிறார். அவரே பதவி உயர்வு பெற்று வரும்போது அவரது கையூட்டின் அளவு, வடிவம் மாறுகிறது. ஒரு வங்கிக் கிளையின் பொது மேலாளருக்கு தீபாவளியின்போது கடன் பெறும் வாடிக்கையாளர்கள் (நிறுவனங்கள்) அளிக்கும் பரிசு 2 கிராம் தங்க நாணயம், அதுவே தலைமை பொது மேலாளராயிருந்தால் 50 கிராம் தங்க நாணயமாகிறது.

ஏப்ரல் மாதத்தில் அல்போன்சா மாம்பழத்தை வீட்டுக்கு அனுப்புவது, தங்க நாணயம், உலர் திராட்சை, முந்திரி பருப்பு வகைகள் அடங்கிய டப்பா, வங்கி அதிகாரியின் மனைவிக்கு பட்டுப் புடவை, வைரத் தோடு ஆகியனவும் அளிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் கையூட்டு என்பதா அல்லது பரிசுப் பொருள் என்று வகைப்படுத்துவதா?

பிரதி உபகாரம்

அனைத்து கடன் தொகைகளும் இவ்விதம் லஞ்சம் பெறுவதற்காக அளிக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். சில சமயம் அரசியல்வாதிகளின் நிர்பந்தத்தினால் கடன் அளித்த வங்கி உயர் அதிகாரிகளும் உண்டு. பல சமயம் உயர் பதவிக்கு வருவதற்கு உதவிய அரசியல்வாதிக்கு பிரதிபலனாக கடன் அளித்த வங்கி அதிகாரிகளும் உள்ளனர்.

ரோலக்ஸ் வாட்ச்

இதேபோல கடந்த ஆண்டு எஸ்பிஐ-யைச் சேர்ந்த துணை நிர்வாக இயக்குநர் ஷியாமள் ஆச்சார்யாவை சிபிஐ கைது செய்தது. வாடிக்கையாளருக்கு கடன் அளித்ததற்காக இவர் பெற்ற வெகுமதி ஓமேகா மற்றும் ரோலக்ஸ் வாட்ச். இவற்றின் விலை தலா ரூ. 7.75 லட்சமாகும். டெல்லியைச் சேர்ந்த வேர்ல்டு விண்டோ குழும நிறுவனத்துக்கு ரூ. 75 கோடி கடன் தொகையை விதிகளை மீறி அனுமதித்ததற்காக கிடைத்த வெகுமதி இவை.

இந்த பேரத்தில் மூன்றாம் தரப்பு ஏஜென்டாக பணியாற்றியவர் முன்னாள் வங்கியாளர் கே.கே. கும்ரா. இவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ. 7 லட்சம் ரொக்கத்தையும் சிபிஐ கைப்பற்றியது.

2013-ம் ஆண்டில் கார்ப்பரேஷன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராம்நாத் பிரதீப்பிடம் விதிமுறைகளை மீறி சில நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக இவர் மீது சிவிசி வழக்கு பதிவு செய்தது.

2011-ம் ஆண்டில் சிபிஐ 8 வங்கி உயர் அதிகாரிகளைக் கைது செய்தது. கடன் வழங்குவதற்கு கையூட்டு பெற்றதாகவும், சில முக்கியமான விஷயங்களை வெளியிட லஞ்சம் பெற்றதாகவும் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வங்கியின் தலைவர்களாக நியமிக்கப்பட்டு அவர்களின் முழு பதவிக் காலத்துக்கு முன்பாகவே நீக்கம் செய்யப்பட்ட வங்கியாளர்கள் பலருண்டு. 2006-ம் ஆண்டில் பாங்க் ஆப் மஹாராஷ்டிராவின் தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.சி. பாசுதனது முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை. பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட என்.எஸ்.குஜ்ராலும் முன்னதாகவே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

வங்கிப் பணிக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள், தங்களின் சிறப்பான சேவையினால் எத்தனையோ சாமானியர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றியவர்கள் என்று வங்கிகளின் சரித்திரத்தில் நேர்மையானவர்களின் கையே ஓங்கி இருந்தாலும்... தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருசிலர் கடன் வழங்குவதற்காக லஞ்சம் பெறுகின்றனர். அல்லது சந்தை நிலவரத்தை விட குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு இதுபோன்ற கையூட்டைப் பெறுகின்றனர் என்பது, நடவடிக்கைகளின் மூலம் வெளியாகும் வேதனையான உண்மை.

வங்கியாளர்களில் பலர் பலவிதமான மோசடி குற்றச்சாட்டில் சிக்கியிருந்தாலும், இந்தியன்வங்கித் தலைவராயிருந்த எம். கோபாலகிருஷ் ணன் மீதான குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இவர் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்று வெளியே வந்ததை மறக்க முடியாது. பதவியிலிருந்தபோது அரசியல் கட்சித் தலைவரின் போன் உத்தரவுக்கே கடன் வழங்கினார் என்றும் இவர் மீது குற்றம் கூறப்பwட்டது.

வங்கியில் கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர் அளிக்கும் மனுவை பரிசீலித்து அவர் கடனை திரும்ப செலுத்தும் தகுதி படைத்தவரா என்று பார்ப்பதில்லை. மாறாக கடன் அளிக்க ஒப்புதல் அளித்தால் எத்தனை சதவீதம் நமக்குக் கிடைக்கும் என்று பரிசீலிப்பதாக கொல்கத்தாவைச் சேர்ந்த வங்கியாளர் தெரிவித்துள்ளார். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வங்கிகளுக்கு அதிக கடன் நிலுவை வைத்திருந்த நிலையில் ஐடிபிஐ வங்கி கடன் அளித்தது எப்படி?

புரோக்கர்கள் ஆதிக்கம்

வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதற்கென்றே புரோக்கர்களும் (எதில்தான் இடைத் தரகர் இல்லை) உள்ளனர். 2008-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் ஒரு வங்கி புரோக்கிங் ஏஜென்ட் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகை ரூ. 50 ஆயிரம் கோடி என்றால் எந்த அளவுக்கு ஊழல் வங்கித் துறையில் ஊருடுவி இருக்கிறது என்பதை கணிக்க முடியும்.

பொதுவாக புரோக்கர் கட்டணம் 2 சதவீதம். இந்த கமிஷன் தொகை துறைக்குத் துறை மாறும். ரியல் எஸ்டேட் துறையாக இருந்தால் கமிஷன் 5%. ஒரு வங்கி புரோக்கருக்கு மும்பையில் 7 வீடுகள் உள்ளன. இங்குதான் வங்கி அதிகாரிகளுக்கு விருந்துகள் நடக்குமாம். மற்றொரு புரோக்கரோ அடிக்கடி பயணத்துக்கு பயன்படுத்துவது ஹெலிகாப்டரைத்தானாம்.

பங்களாவில் வசிப்பது எப்படி?

ஓய்வுபெற்ற வங்கித் தலைவர்கள்சிலர் மும்பையின் சொகுசு பங்களாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் பங்களா, ஆடம்பர குடியிருப்புகள் அனைத்துமே ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குக் கடன் அளித்ததால் கிடைத்தவை. கடன்வழங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகபட்ச தள்ளுபடி விலையில் அதாவது ஏறக்குறைய இலவசம் என்ற நிலையில் இத்தகைய வீடுகளை இவர்களுக்கு அளித்துள்ளன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

லஞ்சத்தில் பலவகை

வங்கியாளர்களின் குழந்தைகளுக்கு வெளிநாடுகளில் உயர் கல்வி வசதி அளிப்பது, படிப்புமுடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற சலுகைகளை புரோக்கர்கள் மூலம் அளித்து நிறுவனங்கள் கடன் பெறுவதும் வாடிக்கையாக உள்ளது.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

வங்கிகளில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகிய இரண்டு பொறுப்புகள் ஒருவரிடமே குவிவதைத் தடுக்க வேண்டும். தலைவர் பதவிஒருவரிடமும், நிர்வாக பொறுப்பு மற்றொருவரிடமும் அளிக்க வேண்டும். இவர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

பொதுமக்களின் பணத் தைக் கையாளும் வங்கியின் தலைவர்கள் நேர்மையானவர் களாகவும், ஊழலுக்கு அடிபணி யாதவர்களாகவும் இருக்க வேண் டும். அங்கொன்றும் இங் கொன்றுமாக சம்பவங் கள் நடைபெற்றாலும் இதுஒட்டுமொத்த வங் கித்துறை மீதான அபிப் ராயமாகத்தான் பார்க்கப்படுகிறது. கடன் அளிக்க லஞ்சம் வசூலிக்கும் அதிகாரிகள் ஒருபுறம் என்றாலும், தகுதி படைத்தவர்களுக்கு கடன் தராமல் எதற்கு பிரச்சினை என ஒதுங்கிப் போகும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இத்தகைய நேர்மையான அதிகாரி கள் தங்கள் பதவிக் காலத்தை வெறுமனே ஓட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். ஆனால் பாதிக்கப்படுவதோ பொது மக்கள்தான்.

வங்கித் தலைவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களது பதவியை உணர்ந்து செயல்படவில்லை. தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு கடன் வழங்கியுள்ளனர் என்பது நிதி அமைச்சகத்துக்கும் தெரியும், ரிசர்வ் வங்கிக்கும் தெரியும். இது குறித்து பொது அரங்கில் விவாதித்தால் வங்கிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சிதைந்து போகும். வங்கிகள்தான் 70 சதவீத பணத்தை நிர்வகிக்கின்றன என்ற யதார்த்த உண்மையை உணர்ந்தே மவுனம் காக்கப்படுகிறது.

புதிதாக உருவாக்கப் பட்டிருக்கும் வங்கிகள் வாரிய குழு, வங்கித் தலைவர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தவிர வங்கியின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஓரளவு நியாயமான சம்பளம் அளிக்க வேண்டும். தனியார் வங்கிகள் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறும் நிதி அமைச்சகம், தனியார் வங்கித் தலைவர்களுக்கு இணையாக ஊதியம் அளிக்க முன் வர வேண்டும். அனைத்துக்கும் மேலாக அரசியல் குறுக்கீடு இருக்கவே கூடாது.

சாணக்கியர் இருந்திருந்தால் வருவாய்த் துறையினரோடு வங்கியாளர்களையும் சேர்த் திருப்பார் என்றே தோன்றுகிறது.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x