Last Updated : 03 Oct, 2016 12:22 PM

 

Published : 03 Oct 2016 12:22 PM
Last Updated : 03 Oct 2016 12:22 PM

எம்ஆர்எப் @ 50,000 ரூபாய்

பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி பங்கு 50,000 என்னும் நிலையை கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாண்டியது. இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு எம்ஆர்எப் ஆகும். இந்த எல்லையைத் தொட்ட முதல் தனியார் நிறுவனமும் எம்ஆர்எப்தான்.

டயர் நிறுவனங்களில் முக்கியமானது எம்ஆர்எப் நிறுவனம். இந்த பங்கு கடந்த புதன் கிழமை புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தகத்தின் இடையே ஒரு பங்கின் விலை 50,000 ரூபாய்க்கு மேலே உயர்ந்து அதிகபட்சமாக 51,218 ரூபாயைத் தொட்டது. ஆனால் புதன் கிழமை மாலையில் 49,734 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்த பங்கு 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 50,872 ரூபாயில் முடிவடைந்தது.

கடந்த ஜூன் மாதம் ரப்பர் விலை உயரத் தொடங்கியதும் இந்த பங்கு சரியத்தொடங்கியது. 52 வார குறைந்த பட்ச விலையான 30,464 ரூபாய் வரை சரிந்தது. அந்த நிலையில் இருந்து ஒப்பிடும் போது கடந்த மூன்று மாதங்களில் 67 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் 650 சதவீதத்துக்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளது இந்த பங்கு. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.21,603 கோடியாக இருக்கிறது.

இதற்கு முன்பாக பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி பங்கு 50,000 என்னும் நிலையை கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாண்டியது. ஒரிசா மினரல் நிறுவனப் பங்கு கடந்த 2010-ம் ஆண்டு 50,000 ரூபாயை தாண்டியது. அதன் பிறகு இந்த நிறுவனங்கள் போனஸ் மற்றும் பங்கு பிரிப்பு செய்ததால் குறைந்த விலையில் வர்த்தகமாகின்றன. இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு எம்ஆர்எப் ஆகும். இந்த எல்லையைத் தொட்ட முதல் தனியார் நிறுவனமும் எம்ஆர்எப்தான்.

இதனை தவிர ஐஷர் மோட்டார்ஸ் (ரூ.24,827), போஷ் (ரூ.22,797),  சிமெண்ட் (ரூ.17,042) மற்றும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.15,117) உள்ளிட்ட பங்குகள் அதிக விலையில் வர்த்தகமாகி வருகின்றன.

விலை உயர காரணம்?

இந்த பங்கின் விலை உயர்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக டயர்களின் தேவை உயர்வு மற்றும் டயர் தயாரிப்புக்கான மூலப்பொருளான ரப்பர் விலை சரிவு ஆகிய காரணங்களால் எம்ஆர்எப் பங்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான டயர் பங்குகள் உயர்ந்தே வர்த்தகமாகின்றன.

புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கான டயர்கள் மற்றும் ஏற்கெனவே சந்தையில் இருக்கும் வாகனங்களில் பழுதான டயர்களை மாற்றுவது என இரு வகையான டயர் தேவைகள் இருக்கின்றன. இரு பிரிவுகளிலும் தேவை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வகையான வாகனங்களிலும் நல்ல வளர்ச்சி இருக்கிறது.

எத்தனை வளர்ச்சி இருந்தாலும் லாப வரம்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் அத்தனையும் வீண்தான். இது டயர் நிறுவனங்களுக்கு பொற்காலமாக இருக்கிறது. டயர் நிறுவனங்களில் செலவுகளில் 50 சதவீதம் ரப்பருக்கு செல்கிறது. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரப்பர் 87 ரூபாய் அளவுக்கு சரிந்தது. இதன் காரணமாக டயர் நிறுவனங்களில் செயல்பாட்டு லாப வரம்பு இரட்டை இலக்கத்தை தொட்டன. சில நிறுவனங்களின் லாப வரம்பு 20 சதவீதம் அளவுக்கு மேலே இருந்தது.

ரப்பர் விலை சரிவு ஏன்?

ரப்பர் விலை சரிவுக்கு இரு காரணங்கள். டயர் நிறுவனங்கள் இயற்கை ரப்பர் மற்றும் சிந்தெட்டிக் ரப்பர் (கச்சா எண்ணெய்யில் இருந்து எடுப்பது) ஆகிய இரு வகையான ரப்பரை பயன்படுத்துகின்றன. இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. தவிர கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவதால் சிந்தெட்டிக் ரப்பரை நிறுவனங்கள் பயன்படுத்த ஆரம்பித்தன. தேவை குறைவு காரணமாக இயற்கை ரப்பர் விலை மேலும் குறைந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை ஒரு கிலோ ரப்பர் 149 ரூபாய் வரை உயர்ந்தாலும் அதன் பிறகு சரிந்து கிலோ 120 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகிறது. இதே நிலையிலேயே இன்னும் சில மாதங்களுக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்திருப்பதால் டயர் நிறுவனங்களின் லாப வரம்பு் தொடர்ந்து சீராக இருக்கும் என்று கூறியிருக்கின்றனர். அடுத்த 12 மாதங்களுக்கு மூலப்பொருள் பிரச்சினை டயர் நிறுவனங்களுக்கு இருக்காது என இந்தியா ரேட்டிங்க்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

முதலீடு செய்யலாமா?

ரப்பர் விலை நிலவரம் எப்படி இருக்கும், டயர் பங்குகளை வாங்கலாமா என்று பங்குச்சந்தை வல்லுநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டபோது, ``ரப்பர் விலையைத் தீர்மானிப்பதில் கச்சா எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. கச்சா எண்ணெய் சரிந்து வரும் சூழலில் ரப்பர் விலை உயர வாய்பில்லை. அதே சமயம் உலகம் முழுவதும் பணவாட்ட சூழல் இருக்கிறது என்பதால் ரப்பர் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது. டயர் நிறுவனங்களுக்கு தற்போதைக்கு ஒரே சிக்கல் சீனாவின் இறக்குமதிதான்.

சீன இறக்குமதி காரணமாக விற்பனை அளவு குறையுமே தவிர டயர் நிறுவனங்களின் லாப வரம்பு குறையாது. எம்ஆர்எப் பங்கு 50,000 ரூபாயை தாண்டி வர்த்தகமானாலும் பிஇ விகிதம் குறைவாக இருப்பதால் இன்னும் சில வருடங்களில் 65,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடரலாம். எம்ஆர்எப் மட்டுமல்லாமல் பெரும்பாலான டயர் பங்குகள் விலை உயர்ந்துவிட்டது. அதனால் இந்த துறை பங்குகளில் புதிதாக முதலீடு செய்வது ரிஸ்க் நிறைந்தது,’’ என்றார்.

இதே கருத்தைதான் பல வல்லுநர்களும் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் விரைவில் இந்த பங்கு பிரிப்பு அல்லது போனஸ் வழங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை இது போல எதுவும் வழங்காத காரணத்தினால்தான் பங்கின் விலை ரூ.50,000ஐத் தொட்டது.

பங்கு முதலீட்டுக்கும், பங்கின் விலைக்கும் நேரடி சம்பந்தம் கிடையாது. எத்தனை சதவீதம் லாபம் கிடைக்கும் என்பதுதான் முக்கியம். 10 ரூபாய், 100 ரூபாய் 1,000 ரூபாய் பங்கோ எத்தனை சதவீதம் லாபம் என்பதுதான் முக்கியம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் பங்கின் விலை எட்ட முடியாத உயரத்தில் இருந்தால் சிறு முதலீட்டாளர்களால் நேரடியாக வாங்க முடியாதே. பங்கின் விலை 50,000 ரூபாயை தொட்டது சாதனையாக இருந்தாலும், பெரிய மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இதன் பலன் சென்றடையும். சிறு முதலீட்டாளர் முதலீடு செய்வதற்கு ஏற்ப பங்கு பிரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுமா என்பதே பங்குச்சந்தை வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை இனியாவது எம்ஆர்எப் பரிசீலிக்குமா?

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x