Published : 10 Oct 2016 02:26 PM
Last Updated : 10 Oct 2016 02:26 PM

கருப்பு பணம் வெளியே வந்ததா?

வருமான வரிக் கணக்கை சரி செய்து செலுத்தி தூக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்தை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை பல வகைகளில் கேட்க முடிந்தது. வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016 என்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் கணக்கில் காண்பிக்காத வருமானம் மற்றும் சொத்துகளை அறி வித்து கணக்கை சரிசெய்து கொள்ளும் வாய்பை அரசு அறிவித்தது. இந்தியா முழுவதும் சேர்த்து ரூ 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத பணமாக வரிதாரர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு முன் அரசாங்கம் 1997 ஆம் ஆண்டு VDIS தாமாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தில் ரூ 30,000 கோடிக்கு மேல் வெளியே கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த பல அனைத்து திட்டங்களையும் ஏப்பம் விடும் வகையில் இந்தத்திட்டம் முழு வெற்றி அடைந்துள்ளது. பிரதமரும் நிதி அமைச்சரும் இதனை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

திட்டத்தின் பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத்திருப் பவர்கள் பற்றி அடிக்கடி கேட்டு வந்தது. இதன் அடிப்படையில் தோற்று விக்கப்பட்டது தான் சிறப்புப் புலனாய்வு குழு (Special Investigation Team). உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வருமான வரித்துறை முன்னாள் தலைவர் ஆகி யோரை உள்ளடக்கிய இந்தக்குழு பல வகைகளில் வரி ஏய்ப்புத்தகவல்களைத் திரட்ட வருமான வரித்துறைக்கு உத்தர விட்டனர்.

1997 க்கு பிறகு சுமார் 20 ஆண்டுக்குப் பின் வருமானம் அறிவிக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அசுர வேக தொழில் நுட்ப வளர்ச்சி,அதிக அளவில் வளர்ந்து வரும் சேவைத்துறை, உடனடியாகக் கிடைக்கும் தகவல்கள் போன்ற நவீன வசதிகளை வருமானவரித் துறையும் பயன்படுத்த ஆரம்பித்தது. தற்போது திட்ட உள்நோக்கு (Project Insight), சென்றடை முறை (Reach Out)) என்கிற முறை மற்றும் 360 டிகிரி நோக்கு (PROFILE) என்கிற முறைகளில் ஏராளமான தகவல்களை வருமான வரித் துறை திரட்டினர். தகவல் திரட்டல் இரண்டு வகைகளில் தீவிரப்படுத்தப்பட்டது. அகழவும் உழு மற்றும் ஆழ உழு என்ற பழமொழியைப் போல புதிய வரிதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள வரிதாரர்கள் அதிக வரி செலுத்தும் (WIDENING & DEEPENING) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வருமான வரித்துறை பல வகைகளில் சேகரிக்கத் துவங்கிய வரி ஏய்ப்புத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு கணக்கு விவரங்களை HSBC வங்கி ஊழியர் பிரான்ஸ் நாட்டில் கசிய விட்டது, பனாமா பேப்பர் ஊழல் போன்ற வெளிநாட்டுச் சொத்து சம்பந்தமான விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளிநாட்டுச் சொத்துகளை அறிவித்து அதற்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டு வந்து விடலாம் என்று செயல்பட்டது. ஆனால் இத்திட்டம் நினைத்த அளவு வெற்றியடைவில்லை. இந்த பின்னணியில்தான் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் உள்நாட்டு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரத் திட்டங்கள் அறிவிப்பதாகக் கூறினார்.

கொல்கத்தா பங்குச்சந்தையில் சில கம்பெனிகள் மூலம் வரி இல்லா லாபம் ஈட்டியவர்கள், போலி ரசீது கம்பெனிகள், மருத்துவக்கல்லூரி துவங்கியவர்கள், போன்ற 7 வகை தகவல்களைத் திரட்டி ஆதாரங்களுடன் நிதி அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்காமல் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்தது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் ஐடிஎஸ் எனும் வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016.

திட்டத்தின் செயல்பாடுகள்

இத்திட்டத்தில் கணக்கில் காட்டாத நிலம், வீடு, பங்குகள், பரஸ்பர நிதி, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள்,ரொக்கப் பணம், பினாமி பேரில் உள்ள சொத்துகள் ஆகியவற்றை அறிவித்து அதற்கான வரி மற்றும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கு 30% வரி, 7.5% அபராதம் மற்றும் க்ருஷி கல்யாண் செஸ் ஆக மொத்தம் 45% கட்டி மற்ற விசாரணையில் இருந்து தப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட படிவம் 1-ல் வருமான வரி முதன்மை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தனது ஒப்புதலை முதன்மை ஆணையர் படிவம் 2 ன் மூலம் கொடுப்பார். அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கான வரியை செப்டம்பர் 2017 க்கு முன் தவணை முறையில் செலுத்த முடியும்.

எப்படி சாத்தியமானது?

கடந்த ஜுன் மாதம் முதலே வருமான வரி இலாகா திட்டம் வெற்றி அடைய அனைத்து முயற்சிகளையும் எடுக்க ஆரம்பித்தது. CARROT AND STICK என்று சொல்லப்படும் முறையைக் கையாண்டது. ஆரம்பத்தில் ஏராளமான விழிப்புணர்வு கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் தனி நபர் சந்திப்பு போன்ற பல வகைகளில் வரிதாரர்களுக்கு திட்டம் பற்றி எடுத்துரைத்த வருமான வரி இலாகா கடைசி மாதத்தில் பல அதிரடி சர்வே நடத்தியது. மும்பையில் முன்னணி நகைக்கடைகள் உட்பட 2000க்கும் மேற்பட்டோரிடம் சர்வே நடத்தியதில் வரிதாரர்கள்,அரசாங்கம் இத்திட்டத்தின் மேல் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. ஆடிட்டர்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் முயற்சிகளையும் கொடுத்து அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கியது, இந்தத் திட்ட வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மந்தமாகத் துவங்கிய இந்தத் திட்டம் கடைசி 3 நாட்களில் சூடு பிடித்து அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் ரூ. 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத வருமானமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் ரூ.3,000 கோடிக்கு மேல் வருமானமாக அறிவிக்கப்பட் டுள்ளது.

கட்டாதவர்களுக்கு இனி என்ன ஆகும்?

அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன் படுத்த தவறிய வரி ஏய்ப்பாளர்களுக்கு சற்று கடினமான காலமாகத்தான் இருக்கும். கையில் இருக்கக் கூடிய வரி ஏய்ப்புத் தகவல்களை வைத்து வருமான வரி இலாகா தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தவிர பினாமி சம்பந்தமான விசாரணையை இனிமேல் வருமானவரி இலாகாதான் செய்யும் மேலும் சிறப்புப் புலனாய்வு குழு ரூ.15 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வைத்து கொள்ளக்கூடாது, ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்க முடியாது, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது வரிப் பிடித்தம் போன்ற பல வகையான பரிந்துரைகளை செய்துள்ளது. இவற்றில் சில நடைமுறைக்கு வந்தாலும், வரி ஏய்ப்பாளர்களுக்கு சிரமம்தான்.

அரசியல்வாதிகள் நிலை

அரசியல்வாதிகளை வருமான வரி இலாகா ஒன்றும் செய்வதில்லை என்கிற கருத்து பொது மக்களிடையே நிலவி வருகிறது.ஆனால் சமீபகாலமாக சில அரசியல்வாதிகள், மாஜி மந்திரிகளை யும் வருமான வரி இலாகா தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளது, சரியாக வரி கட்டுவோருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சமீபத்திய வருமானம் அறிவிப்புத் திட்டத்தின் கீழ் அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் தங்களது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிக்க முடியாது. காரணம், ஊழல் தடுப்புச்சட்டப்படி இப்படிக் காண்பிக்கப்படும் பணம் 100% அரசாங்கத்தை சேரும் மேலும் சிறை தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகக் கருதப்படும்.

திட்டம் வெற்றியா?

அரசாங்கம் நினைத்ததை விட அதிக அளவு வருமானம் காண்பிக்கப் பட்டது நிச்சயமாக திட்ட வெற்றி என்று கொள்ளலாம். பிரதமரும் நிதி அமைச்சரும் திருப்தியைத் தெரிவித் திருக்கும் வேளையில் வருமான வரி இலாகாவிற்கு இது ஒரு புது உந்து தலையும் உத்வேகத்தையும் கொடுத்து இருப்பது உண்மை. இனி வரும் பயணம் சரியான திசையில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், karthikeyan.auditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x