Published : 24 Oct 2016 11:50 AM
Last Updated : 24 Oct 2016 11:50 AM

சரியான தீர்வாக அமையுமா நில வங்கி?

மத்திய பிரதேச அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டை 22-23 தேதிகளில் நடத்தியது. இதற்காக கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட விளம்பர வாசகத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை மையப்படுத்தியது. தொழில்துறையினரை ஈர்க்கும் அந்த வாசகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான முன்மாதிரியாக அமைந்துவிட்டால் வியப்பேதுமில்லை. அந்த விளம்பர வாசகத்தின் கவர்ச்சிகரமான விஷயம், முதலீட்டாளர்களை ஈர்க்கும் அம்சமாக இருந்தது ஆன்லைன் நில வங்கி (land bank). புவியியல் தகவல் அமைப்பில் (geographic information system -GIS) இணைந்துள்ள ஒரு சில மாநிலங்களில் மத்திய பிரதேச மாநிலம் இப்போது நில வங்கி விஷயத்தில் முந்திக் கொண்டுள்ளது.

இந்த வசதியின் மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க உத்தேசிக்கும் தொழில்முனைவோர்கள் தங்களுக்கு தேவையான நிலத்தை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக நிலங்கள் உள்ளன என அடையாளப்படுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் எந்த பகுதியிலும் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கிறது. ஒருவேளை இந்த திட்டம் நடைமுறையில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டால் இந்தியா முழுமைக்குமான முயற்சியாக மத்திய அரசால் முன்னெடுக்கப்படவும் சாத்தியங்கள் உள்ளன.

தற்போது 24 இடங்களில் இந்த நில வங்கியை உருவாக்கியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை ஒதுக்குவதாக ஏற்கெனவே அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்திருந்தார். இதில் 9,000 ஹெக்டேர்கள் முழுவதுமாக, தொழில்துறைக்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிற இடங்களில் தொழில்முனைவோர்களே நிலத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது சார்ந்த அனைத்து விவரங்களும் ஆன்லைன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கிறது.

பொதுவாக மத்திய பிரதேச மாநிலம் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற புவியமைப்பில் இல்லை என்பது முக்கியமானது. சாலை மற்றும் வான்வழி போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக பயன்பாடு இல்லாத மாநிலம். ஜவுளிதுறையில் உற்பத்தி உண்டு. இந்த நிலையில் மாநிலத்தின் முக்கிய விமான நிலையங்களான போபால், இந்தோர், ஜபல்பூர், குவாலியர் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில்துறை மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆபரண நகை பூங்கா, ஐடி பூங்கா, பிளாஸ்டிக் பூங்கா, லாஜிஸ்டிக் பூங்கா, மின்னணு பூங்கா, பினா சுத்திகரிப்பு ஆலையை ஒட்டி சுத்திகரிப்பு பூங்கா என 24 மண்டலங்களில் நில வங்கி உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு பல அடிப்படை வசதிகளுடன் 30 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கப்படும். ஆண்டு குத்தகைக் கட்டணம் நிலத்தின் மொத்த மதிப்பில் 2 சதவீதம்தான்.

ஆனால் இவ்வாறு வரையறை இல்லாமல் பரந்துபட்ட இடங்களில் தொழில் தொடங்க அனுமதிப்பதன் சாதக பாதகங்களை அலச வேண்டியதும் முக்கியமானதாகும். குறிப்பாக இந்த திட்டங்களில் முன்னோடியாக திகழும் பல திட்டங்களிலிருந்து இது எந்த வகையில் வேறுபடுகிறது என்பதை தெளிவுபடுத்தினால்தான் திட்டம் வெற்றிபெறும். அதே சமயத்தில் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் என்றால் அந்த நிலங்கள் எப்படி பெறப்படுகின்றன என்பதும் முக்கியமானது.

தொழில்துறை ஊக்குவிப்பு என்கிற பெயரில் விவசாய நில பகுதிகளையும் நில வங்கியில் இணைத்து விடக்கூடாது. அரசால் தரிசு நிலங்கள் என்று வரையறுக்கப்படும் பகுதிகள் விவசாயம் சார்ந்த சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருக்கும்பட்சத்தில் அவை நில வங்கிகளில் இணைக்கப்படக்கூடாது. குறிப்பாக அந்தந்த பகுதி மக்களின் ஒப்புதலுடன் வழங்கப்பட வேண்டும் என்பது சமூக நோக்கர்களின் எதிர்பார்ப்பு. ஏனென்றால் ஏற்கெனவே சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட பல ஹெக்டேர் நிலங்களே இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

தொழில்துறையில் பின்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க பல ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்காக சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் 2005-ன் படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இங்கு தொழில்தொடங்கும் நிறுவனங்களுக்கு உள்ளூர் வளங்கள் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டன. இலவசமான உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்க நிலம், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து, வரிச்சலுகைகள், இயற்கை வளங்களை பயன்படுத்துவதில் சலுகை, விரைவான அனுமதிகள், ஐந்து வருடங்களுக்கு முழுமையான வரிவிலக்கு, அடுத்த ஐந்து வருடங்களுக்கு 50 சதவீத வரிவிலக்கு என பல சலுகைகள் கொடுக்கப்பட்டன. இதனால் எஸ்இஇஸட்களில் தொழில் தொடங்க நிறுவனங்களிடையே ஆர்வம் எழுந்தது.

ஆனால் உண்மையில் பல சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வராத நிலைமைதான் நீடிக்கிறது. சில இடங்களில் எந்த தொழிலும் தொடங்க முதலீட்டாளர்கள் முன்வராததால் அவற்றுக்கான அனுமதிகள்கூட திரும்ப பெறப்பட்டுள்ளன என்பது முக்கியமானது.

இந்தியா முழுவதும் தற்போது 204 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 18 எஸ்இஇசட்கள் உள்ளன. 408 மண்டலங்கள் இயக்குநர் குழுவின் முதற்கட்ட அனுமதி நிலையில் உள்ளன. செயல்பட்டு வரும் பல சிறப்பு பொருளாதார மண்டலங்களில் முழு திறனையும் எட்டவில்லை என்பதும் இவற்றுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்கிற தெளிவுமில்லை.

2006 முதல் 2013 வரையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் 50 சதவீதம் வரைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கடந்த ஆண்டின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது. 28,488 ஏக்கர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 31,886 ஏக்கர் நிலங்கள் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் இந்த பயன்பாட்டுக்காக கையகப்படுத்திய நிலங்களில் 96 சதவீதத்தை பயன்படுத்தவில்லை. குஜராத், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு என சில மாநிலங்களே சராசரியாக 48 சதவீத நோக்கத்தை பூர்த்தி செய்துள்ளன. ஆக பத்தாண்டுகள் கடந்த பின்னும் சிறப்பு பொருளாதர மண்டலங்களின் நில பயன்பாடு குறித்த தெளிவான கொள்கைகளை இன்னும் வரையறுக்கவில்லை என்பதுதான் உண்மை

மாநில அரசு திட்டங்கள்

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களும் சிறு தொழில் நிறுவன ஊக்குவிப்புக்காக குறிப்பிட்ட தொழில்பேட்டைகளை உருவாக்கியுள்ளன. அதில் அனைத்து வசதிகளும் கொண்ட குறிப்பிட்ட சில தொழில்பேட்டைகளில்தான் நிலங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புற பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் தொழில்கள் தொடங்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலும் நில வங்கி உருவாக்க அரசு சிப்காட் மூலம் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதன் மூலம் 19 இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் உருவாக்குவது என்றும், இங்கு 2,000 தொழிற்சாலைகளை கொண்டுவருவதுடன், இதன் மூலம் 4.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கடந்த ஆண்டில் அரசு கூறியது. ஆனால் இது எந்த அளவுக்கு நடந்துள்ளது என்பதில் தெளிவில்லை.

ஆனால் யதார்தத்தில் என்ன நடக்கிறது என்றால், தேவை சார்ந்த பொருளாதார மண்டலங் களே வளர்ந்து வரும் நிலையில் நிலவங்கி என்கிற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்துறைக்கு ஒதுக்குவதை முன்னுதாரண மாகக் கொள்ளக்கூடாது. ஏற்கெனவே பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்கட் டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முதலீட்டாளர் களை ஈர்ப்பதுதான் சரியாக தீர்வாக இருக்கும்.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக மட்டுமே வாக்குறுதிகளை கொடுக்காமல் தொழில்தொடங்கும் வாய்ப்பாக கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். அது தொழில்துறைக்கு பயனுள்ளதாகவும், பிற துறையினரை பாதிக்காத ஒன்றாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒருபக்கம் கையகப்படுத்தப்பட்டும் பயன்படுத்தப்படாத பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள், இன்னொருபக்கம் சிங்கூர் மாதிரியான சிக்கல்களையும் இந்திய தொழில்துறை சந்திக்காது. நிலவங்கி போன்ற நடைமுறைகள் இந்த சிக்கலைத் தீர்க்க சரியான வழியில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x