Published : 17 Oct 2016 10:27 AM
Last Updated : 17 Oct 2016 10:27 AM
ஆட்டோமொபைல் துறையில் இப்போது பேசப்படும் விஷயம் ஒன்று பேட்டரி கார் அடுத்தது டிரைவர் இல்லாத கார். கடந்த வாரம் பிரிட்டன் சாலைகளில் டிரைவர் இல்லாத கார் சோதனை அடிப்படையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
டிரைவர் இல்லாத காரை தங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தும் நோக்கில் சோதனை ஒட்டத்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.
லண்டனின் வடக்குப் பகுதியில் மில்டன் கேய்ன்ஸ் எனும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தில் பல மக்கள் டிரைவர் இல்லாத காரை வியப்புடன் பார்த்தனர். பிரிட்டனின் போக்குவரத்து பிரிவான டிஎஸ்சி நகரில் 40 டிரைவர் இல்லாத கார்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
டிரைவர் இல்லாத கார் இத்துறையில் மிகுந்த புரட்சியை ஏற்படுத்தும் என்று டிஎஸ்சி திட்ட இயக்குநர் நீல் ஃபுல்டோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் முதல் முறையாக இது சோதித்துப் பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் செல்லும்படி இது சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்த காரில் செலினியம் எனப்படும் தானாக இயங்கும் சாஃப்ட்வேர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த சாஃப்ட்வேரை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ரோபோடிக் மையம் உருவாக்கியுள்ளது. பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள நிறுவனமான ஆக்ஸ்போடிகா, காரில் உள்ள கேமிராவில் பதிவாகும் தகவல்கள் மற்றும் லேசர் கதிர்களைக் கொண்டு கார் செல்லும் பாதையை நிர்ணயிக்கும்.
ஏற்கெனவே பிற நாடுகளில் சோதித்துப் பார்க்கப்படும் டிரைவர் இல்லாத கார்களில் ஜிபிஎஸ் முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இதில் முற்றிலும் மாறான சாஃட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிற நாடுகள் அல்லது பிற நிறுவனங் களின் சோதனை அடிப்படையிலான கார்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் போலன்றி இது முற்றிலும் மாறுபட்டது என்று இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய ஆக்ஸ்போர்டு ரோபாடிக்ஸ் மையத்தின் தலைவர் இங்மார் போஸ்னர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கார் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள் உள்ளிட்டவற்றை உணர்ந்து அதன்படி செயலாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த அசையும் பொருள் குறித்தும் உணர்ந்து அதை உள்வாங்கி செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் கேமிராவில் பதிவாகும் படங்கள் அதன் தன்மைக்கேற்ப செயல்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் 8 வாகனங்களை சோதித்துப் பார்க்க முடிவு செய்துள்ளது.
பிரிட்டனில் ஆண்டுதோறும் 2,000 கார் விபத்துகள் நடக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை மனிதத் தவறால் நிகழ்பவை. இதைக் கருத்தில் கொண்டு டிரைவர் இல்லாத கார்களை செயல்படுத்த லண்டன் போக்குவரத்து நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
டிரைவர் இல்லாத கார்களை லண்டன் தெருக்களில் காணும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT